/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூர் ஆலயத்தில் சனி { மகா } பிரதோஷம்
/
சிங்கப்பூர் ஆலயத்தில் சனி { மகா } பிரதோஷம்
டிச 29, 2024

பொதுவாக பிரதோஷ தினத்தன்று சிவ பெருமானை வழிபடுவது மிகச் சிறப்பானது. பிரதோஷத்தன்று சிவபெருமானை வழிபட்டால் ஐந்து ஆண்டுகளுக்கு சிவன் கோவிலுக்குச் சென்று வழிபட்ட பலன் கிடைக்கும். குறிப்பாக சனிப் பிரதோஷத்தன்று சிவ பெருமானையும் சனீஸ்வரரையும் விரதமிருந்து வழிபட்டால் கிரக தோஷங்கள், சனீஸ்வரரால் ஏற்படும் பாதிப்புகள் அனைத்தும் நீங்கும். அனைத்து விதமான தோஷங்களையும் நீக்கி வாழ்வில் சந்தோஷத்தை மட்டுமே வழங்கக்கூடிய அதி அற்புதமான வழிபாட்டுக் காலம் பிரதோஷ காலமாகும்.
சிவ பெருமான் ஆல காலத்தை உண்டு தேவர்களைக் காத்து அருள் புரிந்து ஆனந்தத் தாண்டவமாடிய வேளையே பிரதோஷ காலமாகும். நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கிடையே சிவ பெருமான் நடனமாடியதாகச் சொல்லப்படுவதால் நந்தியின் கொம்புகளுக்கு இடையே சிவ பெருமானை தரிசிப்பது சிறப்பாகும். அனைத்து வித பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். சிவ நாமங்களைச் செல்லி வழிபட்டால் அவர்தம் அருள் பரிபூரணமாகச் கிடைக்கும்
சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணர் ஆலயத்தில் டிசம்பர் 28 ஆம் தேதி சனிப் பிரதோஷ வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீ விசாலாட்சி சமேத ஸ்ரீ சிவ கிருஷ்ணர் அலங்காரம் திருவண்ணாமலையாரையே கண்முன் கொணர்ந்தது. ஐந்து சிவாச்சாரியார்கள் தீபமேந்தி ஆராதனை செய்தமை நெஞ்சமெலாம் நிறைந்து மெய் சிலிர்க்க வைத்தது. லிங்காஷ்டக ஆராதனை பக்தப் பெருமக்களைப் பரவசப்படுத்தி “ ஓம் நமசிவாய...ஓம் நமசிவாய ...தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி “ என்ற சரண கோஷமிட்டு விண்ணைப் பிளக்க வைத்தது.
தலைமை அர்ச்சகர் சர்வ சாதகம் ஆகமப் பிரவீண சிவஸ்ரீ நாகராஜ சிவாச்சாரியார் சனிப் பிரதோஷ மகிமையை விளக்கினார். சதீஷ் உள்ளிட்ட சுரேஷ் குமார் தலைமையிலான ஆலய நிர்வாகக் குழு மிகச் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். நிறைவாக பக்தப் பெருமக்களுக்கு அருட்பிரசாதத்துடன் அறுசுவை அன்னப் பிரசாதமும் வழங்கப்பட்டது.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
Advertisement