/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூர் தென்னிந்திய அந்தணர் சபையின் நூற்றாண்டு விழா
/
சிங்கப்பூர் தென்னிந்திய அந்தணர் சபையின் நூற்றாண்டு விழா
சிங்கப்பூர் தென்னிந்திய அந்தணர் சபையின் நூற்றாண்டு விழா
சிங்கப்பூர் தென்னிந்திய அந்தணர் சபையின் நூற்றாண்டு விழா
டிச 30, 2024

1924 ம் நிறுவப்பட்ட சிங்கப்பூர் தென்னிந்திய அந்தணர் சபை இந்த வருடம் நூறு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அதையொட்டி சபை ஆண்டு முழுதும் பல சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தியது. கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் சட்ட உள்துறை அமைச்சர் சண்முகம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது சபையின் நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டார்.
இந்த கொண்டாட்டங்களின் இறுதி நிகழ்ச்சியாக சபை இந்த மாதம் 21 ந் தேதி முதல் 26 ந் தேதி வரை அதிருத்ர பெருவேள்விக்கு “ உலக அமைதி மற்றும் நல்லிணக்கம்' என்ற கருப்பொருளுடன், சிராங்கூன் சாலையில் உள்ள பி ஜி பி மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தது.
சிவபெருமானுக்கு உகந்த பிரார்த்தனைகளில் ஒன்று அவனின் பெருமைகளை எடுத்துச் சொல்லும் ஶ்ரீருத்ரம் எனும் வேத மந்திரமாகும். ஸ்ரீ ருத்ரத்தில் நமகம், சமகம் என இரண்டு பாகங்கள் உள்ளன. நமகத்தின் நடு பகுதியிலேதான் ஐந்தெழுத்து மந்திரமான 'நமசிவாய' அமைந்துள்ளது. அதனுடன் மனித குலத்திற்கு தேவையான எல்லா விருப்பங்களையும் உள்ளடக்கிய சமகம் எனும் பிரார்த்தனை மந்திரத்தையும் சேர்த்துச் சொல்வது மரபு. எனவே ஶ்ரீருத்ர மந்திரத்தை பல முறை பாராயணம் செய்வது சிறப்பாக கருதப்படுகிறது.
ஸ்ரீருத்ர பாராயணத்திற்கு ஒரு விசேடமான முறையும் மறைநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்வழி பதினொன்றின் மடங்காக அதை விரித்து ஓதுவது வழக்கம். இதில் மிக உன்னதமாகக் கருதப்படுவது அதிருத்ரமாகும். நமக மந்திரத்தை 121 (11x11) அடியார்கள் 121 (11x11) முறை தொடர்ந்து ஓதுவது (மொத்தம் 14,641 நமகம்) அதிருத்ரம் எனப்படும். அதனுடன் சமகமும் 11 முறை பகுதி பகுதியாக ஓதப்படும் ( மொத்தம் 1331 சமகம்). அப்போது ருத்ர வேள்வியும், சிவனுக்கு அபிஷேகமும் நடைபெறும்.
சிங்கப்பூரில் முதல் முறையாக 2019ஆம் ஆண்டு சிங்கப்பூர் தென்னிந்திய அந்தணர் சபை கேலாங் கிழக்கு சிவன் கோவில் உடன் கூட்டாக அதிருத்ர வேள்வியை மிக விமரிசையாக நடத்தியது. இந்த வருடம், சபாவின் நூற்றாண்டு ஆண்டு என்பதால், இம்முறை, அதிருத்ரத்தை, இந்து அறநிலைய வாரியம், சிவன் கோவில் மற்றும் பெருமாள் கோவில் ஆகியவற்றின் ஆதரவுடன், தானே முன்னின்று சபை நடத்தியது.
ப்ரதி தினமும் காலை 5.45க்கு மஹாந்யாஸத்துடன் தொடங்கி மதியம் 1 மணி வரை ருத்ர பாராயணம், வேள்வி, அபிஷேகம் ஆகியவை இந்த ஆறு நாட்கள் நடைபெற்றது. தினந்தோறும் மாலை சிவனுக்கு அரிதாக நடக்கும் ருத்ர க்ரம அர்ச்சனை செய்விக்கப்பட்டது.
தேவைப்பட்ட 121 அடியார்களுக்கும் மேலாக சுமார் 140 அடியார்கள் தினமும் ருத்ர பாராயணத்தில் கலந்து கொண்டு சிவ சிந்தனையோடு அர்ப்பணம் செய்தார்கள். இதில் சபை அங்கத்தினர்களோடு வெளிநாட்டில் இருந்து இதற்காகவே வந்த சுமார் 12 அடியார்களும் பங்கு பெற்றது மற்றொரு சிறப்பம்சம். மற்றும் இந்தியாவில் இருந்து வந்திருந்த 22 வேத-விற்பன்னர்கள் ஒத்துழைப்போடு அதிருத்ர பெருவேள்வி மிக விமரிசையாக நடந்தேறியது.
அதிருத்ர வேள்வி மண்டபத்தில் இந்த நிகழ்ச்சிக்காக பிரத்யேகமாக வைக்கப்பட்டு இருந்த சுமார் 16 அடி உயர லிங்கோத்பவர் அலங்காரம் வந்திருந்தோர் கண்களையும் கருத்தையும் ஒருசேர கவர்ந்தது. சிவபெருமான் லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு ஜோதி வடிவாக திருமாலுக்கும் பிரமனுக்கும் காட்சி தரும் திருமேனியே லிங்கோத்பவர் எனப்படும்.
சபையின் நிர்வாகக் குழுவினர் அதன் தலைவர் கார்த்திக் மற்றும் நிகழ்ச்சியின் திட்டப் பொறுப்பாளர் ராஜாராமன் வழிகாட்டுதலில் அதிருத்ர பெரு வேள்விக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்கள்.
இந்த சிறப்பு வாய்ந்த அரிதாக நடக்கக்கூடிய அதி ருத்ர பெருவேள்வியில் இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவர் ராஜன் கிருஷ்ணன், தலைமை நிர்வாக அதிகாரி ஜீவா, இந்து ஆலோசனை மன்றத்தின் தலைவர் செங்குட்டுவன், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் தலைவர் செல்வம் ஆகியோருடன் திரளான பக்தர்களும் கலந்து கொண்டார்கள். பெருமாள் கோயில் பிரதம அர்ச்சகர் ஸ்ரீ வாசு பட்டர் மற்றும் சிவன் கோயில் பிரதம அர்ச்சகர் ஸ்ரீ மணி குருக்கள் ஆகியோர் வந்து பிரசாதம் வழங்கி, தெய்வீக செய்தி மற்றும் ஆசிகளை வழங்கி உரையாற்றினர்.
- நமது செய்தியசளர் வெ.புருஷோத்தமன்
Advertisement