sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 17, 2025 ,புரட்டாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

சிங்கப்பூர்

/

செய்திகள்

/

சிங்கப்பூரில் கவியரசு கண்ணதாசன் விழா கோலாகலம்

/

சிங்கப்பூரில் கவியரசு கண்ணதாசன் விழா கோலாகலம்

சிங்கப்பூரில் கவியரசு கண்ணதாசன் விழா கோலாகலம்

சிங்கப்பூரில் கவியரசு கண்ணதாசன் விழா கோலாகலம்


நவ 26, 2024

Google News

நவ 26, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாற்பத்து எட்டு ஆண்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் இருபத்து ஆறாவது “ஆண்டாகத் தமது முத்திரைத் திருவிழாவான கவியரசு கண்ணதாசன் விழாவை நவம்பர் 24 ஆம் நாள் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் கண்கவர் நடனம், கண்ணதாசன் விருது வழங்கும் நிகழ்வு, அமரர் சுப.அருணாசலம் நினைவு பாடல் போட்டி முடிவு, பாட்டுத் திறன் போட்டிகளின் இறுதிச் சுற்று, புதிர்ப் போட்டி, “ கவியரசரின் கவிதைகளில் வாழ்வியல் “ எனும் தலைப்பில் சிறப்புரை என அத்தனையும் கற்கண்டாய்ச் சுவை நல்கும் பல்திறன், பல்வகை, பல்சுவை நிகழ்வுகளுடன் அரங்கம்நிறை சுவைஞர்களைப் பரவசப்படுத்தும் வகையில் கோலாகலமாக நடத்தியது.

முத்தமிழ் விழாவோ என மயங்க வைக்கும் வகையில் சிங்கப்பூரின் பிரபல நாட்டிய நிறுவனமான தேவி வீரப்பன் நுண்கலைக் கழக நாட்டியத் தாரகைகள் “ தில்லானா மோகனாம்பாள் “ திரைப்படப் பாடலான “ மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ? “ பாடலுக்கு அற்புதமாக அபிநயம் பிடித்து ஆடி விழாவைக் குதூகலப்படுத்தினர். எழுத்தாளர்கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன் எழுதிய '' உலகில் தோன்றிய முதல் மொழி நீயே “ எனும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இலக்கியப் பின்னணிக் காட்சிகளுடன் ஒலி, ஒளி பரப்ப அரங்கைத் தன்வசப்படுத்தியது.


14 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் அதற்குக் குறைந்த வயதுடையோருக்கான பாட்டுத் திறன் போட்டியின் இறுதிச் சுற்று அரங்கேறியது. நடுவர்மாமணி முனைவர் மன்னை ராசகோபாலன், இசைமணி பரசுகல்யாண், நாட்டியப் பேரொளி தேவி வீரப்பன் உள்ளிட்ட ஐவர்குழு நடுவர்களாக அமர்ந்து மதிப்பீடு செய்தனர். இந்நிகழ்ச்சிக்கான பரிசுத் தொகையை ரமா சங்கரன் குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டனர்.


அடுத்த அங்கமாக எழுத்தாளர் கழகச் செயலாளர் கவிஞர் கோ.இளங்கோவன் மேடை ஏறினார். அடடா.....சிறுகூடல் பட்டி தொடங்கி சிகாகோ வரை கவியரசரின் வாழ்க்கைப் பயணத்தைக் கண்முன் நிறுத்தி, சில மணித்துளிகள் கண்கலங்க வைத்தும், சில மணித்துளிகள் கண்குளிர வைத்தும் கவிதைச் சிலம்பமாடி அவையைக் கரவொலிகளால் குலுங்க வைத்தார்.


14 வயதுக்குக் கீழ் உள்ளவர்க்கான பாட்டுத் திறன் போட்டியில் “ ராகங்கள் பதினாறும் “ பாடலைப் பாடி அசத்திய ஆறுமுகம் சேதுமாதவன் முதற்பரிசு பெற்றார். “அடி என்னடி ராக்கம்மா “ பாடலைப் பாடிய ஜெயப்பிரகாசம் ஜோஷித்துக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. பரமசிவன் கழுத்திலிருந்து... பாடலைப் பாடிய வைபவ் மார்க்கம் சந்திரசேகரன் மூன்றாம் பரிசு பெற்றார். ஹரிணி மோகனதாஸ், ரக்ஷனா ரவீந்தர், அச்யுத் அஞ்சன்குமார் ஆகியோருக்கு ஊக்கப் பரிசளி க்கப்பட்டது.


14 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் “ மலர்கள் நனைந்தன பனியில்” பாடலைப் பாடிய லட்சுமி ரவி ஐயர் முதற்பரிசு பெற்றார். “ இளமையெனும் பூங்காற்று “ பாடலைப் பாடிய வேதாந்த கோபால கிருஷ்ணன் அருண் இரண்டாவது பரிசு பெற்றார்.” பளிங்கினால் ஒரு மாளிகை “ பாடலைப் பாடிய பிரவீணா உமாபதி சங்கருக்கு மூன்றாவது பரிசளிக்கப்பட்டது. சுப்பிரமணியன் தீபா, சண்முகம் இரமேசு, த.மிருணாளினி ஆகியோர் ஊக்கப் பரிசு பெற்றனர்.


நினைவில் வாழும் எழுத்தளர் கழக மேனாள் தலைவர் சுப.அருணாசலம் பாடல் போட்டியில் “ பொன்னி புள்ள தங்கச்சி “ பாடலை இயற்றி கவிமாலைக் காப்பாளர் புதுமைத் தேனீ மா.அன்பழகன் முதல் பரிசு பெற்றார். “ சிங்கப்பூரு சீமைக்குப் போய் வருவோமா “ பாடலை எழுதி பொன்.கணேசுகுமார் இரண்டாவது பரிசு பெற்றார். உல்லாச உலகம் என்ற தலைப்பில் பாடல் எழுதிய பி.மதியழகன் மூன்றாவது பரிசு பெற்றார். இவர்களுக்குப் பொன்னாடை போர்த்திப் பரிசு வழங்கி சிங்கப்பூர் நாடாளு மன்ற மேனாள் உறுப்பினரும் கௌரவ நீதிபதியுமான உலகத்தமிழ்மாமணி இரா.தினகரன் பலத்த கரவொலிக்கிடையே கவுரவித்தார்.


கண்ணதாசன் விருது


முத்தாய்ப்பு நிகழ்வாக இவ்வாண்டுக்கான கண்ணதாசன் விருது அறிவிக்கப்பட்டது. நாற்பது வயதுக்குக் குறைந்த சிறந்த படைப்பாளர்களுக்கே இவ்விருது வழங்கப்படுவது இவ்வமைப்பின் மரபு. சிங்கப்பூரின் சிறந்த எழுத்தாளர், நாடக ஆசிரியர், படைப்பாளர், அகம் நாடகக்குழுத் தலைவரான நல்லு தினகரன் இவ்வாண்டுக்கான விருது பெற்று அரங்கமே அதிரும் வண்ணம் கரவொலி பெற்று மகிழ்வித்தார். சிறப்பு விருந்தினர் இரா.தினகரன் பொன்னாடை போர்த்தி, பொற் பதக்கம் வழங்கிப் பெருமைப்படுத்தினார்.


கவியரசு இயற்றிய திரைப்படப் பாடல்களில் தேசிய விருது பெற்ற பாடலைப் பாடியவர் யார் ? என்ற புதிர்ப் போட்டி நடத்தப்பட்டு சரியாக எழுதியவரக்குப் பரிசளிக்கப்பட்டது.


விழாவில் சிறப்பு விருந்தினராகக்கலந்து கொண்ட சிங்கப்பூர் நாடாளு மன்ற மேனாள் உறுப்பினர், கௌரவ நீதிபதி, உலகத்தமிழ்மாமணி இரா.தினகரன் உரையாற்றுகையில் கவியரசின் வாழ்வில் நடந்த சுவையான அரிய நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டார். பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றிய கவியரசுக்கு மாணவர்கள் வைத்த போட்டி, இரண்டே வரிகளில் சென்னை வருமாறு காதல் பாட்டைப் பாடுங்கள் என்றபோது ஒரு வினாடியும் தயங்காமல் பாடியதைக் குறிப்பிட்டபோது அரங்கமே கரவொலி எழுப்பி ஆர்ப்பரித்தது. இலக்கியங்களை எளிமைப்படுத்திப் பட்டி தொட்டி எங்கும் இலக்கிய ஆர்வமூட்டியதைப் பல எடுத்துக் காட்டுகள் மூலம் விளக்கினார்.


சிறப்புரை ஆற்றிய தமிழக, தமிழ் வளர்ச்சிக் கழக இயக்குநர் பேராசிரியர் முனைவர் உலகநாயகி பழநி தமதுரையில், “ கோவை ஜுபிடர் ஸ்டுடியோ கவியரசுக்குப் பாட்டெழுத வாய்ப்பு வழங்காமலிருந்திருக்குமேயாயின் கண்ணதாசனைத் தமிழுலகம் இழந்திருக்கும். பாரதி கூட கூறாதவைகளைத் துணிந்து கூறியவர் கவியரசு எனக் குறிப்பிட்டார். கார்ல்மார்க்ஸ் கூடக் குறிப்பிடாததை பாம்பாடடிச் சித்தர்காதையில் விளக்கியவர் கவியரசர்.” நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே “ என்ற வரிகளில் தீண்டாமையை எவ்வளவு நனி நாகரிகம் சொட்ட கவிஞர் சொன்னார் என்றபோது அரங்கமே கரவொலியை நிறுத்த நெடுநேரமாயிற்று. பல எண்ணம், பல வண்ணம் உரைத்த பேராசிரியர் உரை அரங்கத்தைத் தம்பால் தக்க வைத்துக் கொண்டது. கண்ணதாசனுக்கு “ க “ மிகவும் பிடிக்கும் என்பதற்கு “ கண்ணே கலை மானே... கனவெலாம் நினவாகும் அனுதினமே “ என்ற வரிகளையும் பேராசிரியர் குறிப்பிடத் தவறவில்லை. தமது 47 நிமிட உரை கண்ணதாசனைப் பற்றிய ஒரு சிறு காவியம் எனலாம்.


செயலவை உறுப்பினர் பிரேமா மகாலிங்கம் வரவேற்பரை ஆற்றினார். செயலாளர் கவிஞர். கோ.இளங்கோவன் நன்றி நவின்றார். மூன்று மணி நேரம் கவியரசின் இலக்கியச் சுவை நனி சொட்டச் சொட்டப் பொங்கித் ததும்பிப் பூரணமாய்ப் பொலிந்த கண்ணதாசன் கவி மழையில் நனைந்த சிங்கப்பூர்த் தமிழர் ' இனி இப்படி ஒரு விழா எப்போது நிகழும் ' என ஏங்கித் தவிக்கும் வண்ணம் விழா நிறைவு கண்டது.


- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us