/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூரில் இந்திய இசைக் கலைஞருக்கு அரசின் உயரிய விருது
/
சிங்கப்பூரில் இந்திய இசைக் கலைஞருக்கு அரசின் உயரிய விருது
சிங்கப்பூரில் இந்திய இசைக் கலைஞருக்கு அரசின் உயரிய விருது
சிங்கப்பூரில் இந்திய இசைக் கலைஞருக்கு அரசின் உயரிய விருது
நவ 28, 2024

பன்முகத் தன்மையுடன் மிளிரும் சிங்கப்பூரின் கலை, கலாச்சாரச் சூழலுக்கு சிறப்பான பங்களிப்பு நல்கிய சிங்கப்பூரின் புகழ் பெற்ற இந்தியக் குழலிசைக் கலைஞர் முனைவர் கானவினோதன் ரத்தினத்திற்கு சிங்கப்பூரின் மிகச் சிறப்பு வாய்ந்த கலை இலக்கிய விருதான கலாச்சாரப் பதக்கம் வழங்கி அதிபர் தர்மன் சண்முகரத்னம் கவுரவித்தார். நாட்டின் மதிப்புமிகு கலாச்சாரப் பதக்கத்தைத் தமது 63 ஆவது வயதில் பெற்ற செய்தியறிந்து ஆனந்தக் கண்ணீர் விட்ட விருதாளர் இவ்விருதை மறைந்த தம் பெற்றோருக்கு அர்ப்பணிப்பதாக நெஞ்சுருகத் தெரிவித்தார்.
ஏறத்தாழ நாற்பதாண்டுத் தொடர் முயற்சிக்குக் கிடைத்த விருதாகக் கருதுவதாக அறிவித்தார். பல்வேறு வகையில் தமக்கு உதவிய நல்லுள்ளங்கள், ஆதரவளித்த சமூகம், உடன் பயணித்த சக கலைஞர்கள் என அனைவருக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டிருப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தேசியக் கலைக் கூடத்தில் நவம்பர் 27ஆம் தேதி மாலை நடைபெற்ற சிங்கப்பூரின் கலைத் துறைக்குத் தனித்துவமிக்க பங்களிப்புகளை நல்கிய கலைஞர்கள் அறுவருக்கு கலாச்சாரப் பதக்கமும் இசைக் கலைஞர் விருதும் வழங்கப்பட்டன.
முனைவர் கானவினோதன், சியு ஹொக் மெங் ஆகியோருக்கு கலாச்சாரப் பதக்கமும் வயலின் இசைக் கலைஞர் ஆலன் சூ ஸீ ஹோ- இசையமைப்பாளர் இவான் லோ ஜீன்பெங், திரைப்படத் தயாரிப்பாளர் டான் சி என் அச்சுச் சிற்பி ஸாங் புமிங் ஆகியோர் இளம் கலைஞர் விருது பெற்றனர்.
கலாச்சாரப் பதக்கம் 1979 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வரை 137 பேர் இப்பதக்கம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத் தகுந்ததாகும்.
நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
Advertisement