/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
குவைத்தில் பிரதமர் மோடி நடத்திய முதல் சந்திப்பு
/
குவைத்தில் பிரதமர் மோடி நடத்திய முதல் சந்திப்பு
டிச 22, 2024

குவைத் வந்த பிரதமர் மோடி, ஒரு பெண்ணின் ஆசைப்படி அவரது 100 வயது தாத்தாவை சந்தித்து பேசியது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2 நாள் பயணமாக பிரதமர் மோடி குவைத்திற்கு வந்துள்ளார். 43 ஆண்டுகளில் குவைத் செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
குவைத் புறப்படுவதற்கு முன்பு ஸ்ரேயா ஜூனேஜா எனும் பெண் பிரதமர் மோடிக்கு ஒரு வேண்டுகோளை எக்ஸ் தளத்தின் மூலம் விடுத்திருந்தார். அந்தப் பதிவில், 'முன்னாள் ஐ.எப்.,எஸ்., அதிகாரியான என்னுடைய தாத்தா மங்கல் சாய்ன் ஹண்டாவை, இந்தப் பயணத்தின் போது, நீங்கள் சந்திக்க வேண்டும். உங்களால் ஈர்க்கப்பட்டவர் என்னுடைய தாத்தா. மேலும் விபரங்களை உங்களின் அலுவலக இ-மெயில் முகவரிக்கு அனுப்பியுள்ளேன்,' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பதிவைப் பார்த்த பிரதமர் மோடி, ' நிச்சயமாக, மங்கல் சாய்ன் ஹண்டாவை சந்திப்பேன்,' என்று பதிலளித்திருந்தார்.
பிரதமரின் பதிலால் நெகிழ்ந்து போன ஸ்ரேயா ஜூனேஜா, 'உங்களிடம் இருந்து பதில் வந்தது மிகவும் கவுரவமானது. மீண்டும் எங்களின் இதயத்தை நீங்கள் வென்று விட்டீர்கள். எனது தாத்தா மிகவும் சந்தோஷமடைந்துள்ளார். அவரது சிரிப்பு இந்த உலகம் எங்களுடையது என்பதை உணர்த்துகிறது,' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து, குவைத் வந்தடைந்த பிரதமர் மோடி, பேத்தியின் ஆசைப்படி, அவரது தாத்தாவை சந்தித்து பேசினார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார் .
இந்த சந்திப்பு குறித்து ஹண்டா விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில், 'பிரதமர் மோடிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. என்னுடைய 100வது பிறந்த நாளுக்கு அவர் வாழ்த்துக்களை தெரிவித்தார். பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா வளர்ச்சியடைந்து, முன்னேறுவதைக் காண 100 ஆண்டுகள் வாழ்வது தகுதியானது,' எனக் குறிப்பிட்டுள்ளார்.
- நமது செய்தியாளர் செல்லதுரை
Advertisement