/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
கத்தரில் இந்திய கலாச்சார மையத் திருவிழா
/
கத்தரில் இந்திய கலாச்சார மையத் திருவிழா
மே 23, 2025

கலாச்சாரமே ஒரு தேசத்தின் ஆன்மா, அதுவே நம்மை நாமாக ஆக்குகிறது நமக்கான அடையாளத்தையும் தருகிறது. அதற்கேற்ப கத்தார் ஐடியல் இந்திய பள்ளி மைதானத்தில் நடைபெற்ற, இந்திய கலாச்சார மையம் நடத்திய திருவிழாவில், கத்தர் தமிழர் சங்கம் கும்மி, பொய்க்கால் குதிரை மற்றும் திரைப்பட பாட்டிற்கான நடன நிகழ்ச்சி போன்றவற்றில் பங்கேற்றது. கத்தர் தமிழர் சங்கத்தின் கலாச்சார குழு,மேலாண்மை குழு ஆதரவோடும் துணைக் குழு மற்றும் தன்னார்வலர்களின் ஒத்துழைப்போடும் இந்நிகழ்ச்சியை சிறப்பாக அரங்கேற்றியது.
கும்மி ஆட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பாரம்பரிய உடை அணிந்தும், மின்னும் நகைகள் அணிந்தும், கைவளையல் சலசலக்க, காற்சலங்கை ஒலிக்க, கிராமிய இசைக்கு நன்றாக கும்மியாடி அனைவரது மனதையும் கொள்ளை கொண்டனர். பறையிசை கலைஞர்கள் நமது பறையை இசைத்து விண்ணை அதிரவைத்து பார்வையாளர்களின் பாரட்டை பெற்றனர்.
பொய்க்கால் குதிரை மற்றும் மாடு வேடம் அணிந்து வந்து கலைஞர்கள் நடனம் ஆடி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தனர். திரைப்பட பாட்டு நடனத்திலும் நம் இளைஞர்கள் செவ்வனே ஆடி பார்வையாளர்களை ஸ்தம்பிக்க வைத்தனர். இப்படிப்பட்ட ஒரு பிராமணடமான நிகழ்சியை நமது தமிழ் சங்கம் இந்திய அரங்கில் முதன் முதலாக நடத்தி தமிழர்களின் பாரம்பரிய கலைகளை பறைசாற்றி பெருமை சேர்த்தது. இந்த நிகழ்ச்சியை காண பெரும் திரளான பார்வையாளர்கள் வந்திருந்தனர்.
நம்முடைய கும்மி ஆட்டத்திற்கு நடன பயிற்சி கொடுத்த புனிதாமுனியப்பன் அனைவராலும் பாராட்டப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற கலைஞர்கள், தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு கத்தர் தமிழர் சங்க தலைவர் நன்றி கூறினார். மேலும் நம்முடைய தமிழர் கலை, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை வெளி நாட்டிலும் பேணி காப்பது நம்முடைய கடமை என அவர் கூறினார்.
இந்நிகழ்வை செம்மையுற நடத்த உதவிய கலசார குழு மற்றும் தன்னார்வல தொண்டர்கள் அனைவருக்கும் கத்தர் தமிழர் சங்கம் தனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறது. தகவல்:கத்தர் தமிழர் சங்க மேலாண்மை குழு.
- தினமலர் வாசகர் வி.நாராயணன், பொதுச் செயலாளர், கத்தர் தமிழ்ச்ங்கம்
Advertisement