sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வெளிநாட்டு தகவல்கள்

/

“ஒருங்கிணைந்த மருத்துவத்திற்கான திருமூலர் தமிழ் இருக்கை”

/

“ஒருங்கிணைந்த மருத்துவத்திற்கான திருமூலர் தமிழ் இருக்கை”

“ஒருங்கிணைந்த மருத்துவத்திற்கான திருமூலர் தமிழ் இருக்கை”

“ஒருங்கிணைந்த மருத்துவத்திற்கான திருமூலர் தமிழ் இருக்கை”


ஆக 05, 2025

ஆக 05, 2025


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதன்முறையாக, 201 ஆண்டுகள் பழமை வாய்ந்த அமெரிக்க தென் கரோலினா மருத்துவப் பல்கலைக்கழகம் (MUSC) தொன்மையான தமிழ் யோக சித்த மருத்துவ மரபையும், நவீன உயிரியல் மருத்துவ அறிவியலையும் இணைக்கும் ஒரு சிறப்பான ஆய்வு இருக்கையை நிறுவி வருகிறது. இம்முயற்சிக்கு வித்திட்டவர் முனைவர் சுந்தர் பாலசுப்ரமணியன், தமிழார்வமுள்ள ஒரு உயிர் வேதியியல் அறிவியலாளரும், உலகளவில் அறியப்படும் மூச்சியல் ஆராய்ச்சியாளரும் ஆவார்.


அவருடைய முனைப்பான ஆராய்ச்சி, சித்தர் திருமூலர் இயற்றிய திருமந்திரத்தில் ஆழமாகப் பதிந்துள்ள பிராணாயாமம் போன்ற பண்டையத் தமிழ் வாழ்வியல் நடைமுறைகள் தற்கால புற்றுநோய் சிகிச்சை, நோய் எதிர்ப்பு மீட்பு மற்றும் தொடர் நோய்களுக்கான மேலாண்மையில் எவ்வாறு உதவக்கூடும் என்பதை வெளிக்கொணர்கிறது. தமிழ்ச் சமூகத்தினருடன் பல்லின மக்களும் முனைவர் சுந்தருக்குப் பெரிதும் ஊக்கமும் ஆதரவும் உலகளவில் வழங்கி வருகின்றனர்.


குறிப்பாக ஹார்வர்டு தமிழ் இருக்கையை நிறுவிய Tamil Chair Inc. நிறுவனத்தின் செயல் தலைவர்கள் மருத்துவர் விஜய் ஜானகிராமன், முனைவர் சொர்ணம் சங்கர் ஆகியோர் இதற்குப் பெரிதும் நிதி உதவி வழங்க இதனை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் முனைப்பில் உள்ளனர்.


இந்த இருக்கைக்கு “Thirumoolar Tamil Chair for Integrative Therapies” (TACIT ஒருங்கிணைந்த மருத்துவத்திற்கான திருமூலர் தமிழ் இருக்கை) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது முழுமையாக சுய நிதியுடன் செயல்படும் கல்வி அங்கமாக உருவாக $1.5 மில்லியன் பொது நிதி தேவைப்படுகின்றது. இதற்கு அந்தப் பல்கலைக் கழகமே சுமார் அரை மில்லியன் டாலர் நிதியை வழங்க ஒப்புக் கொண்டுள்ளது!


இது ஒரு வரலாற்று நிகழ்வாகும்! இது ஒரு தமிழினப் படைப்பின் சாதனையாக மட்டுமின்றி, தமிழரின் சித்த மரபு அறிவியலை சிறப்பிக்கின்ற வகையில் மனிதக்குலத்தின் நலனை நோக்கிய ஓர் உலகளாவிய மருத்துவ ஆராய்ச்சி முயற்சி ஆகும். முனைவர் சுந்தர் பாலசுப்ரமணியன், உடலாரோக்கியத்தையும் அறிவு வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் சக்திவாய்ந்த முயற்சிகளாகக் கருதி மிதிவண்டி(சைக்கிள்) ஓட்டுவது, நீண்ட நடைப்பயிற்சி, நூல், கட்டுரை, கவிதை எழுதுதல் ஆகியவற்றைத் தன் முனைப்புடனும் விழிப்புணர்வுடனும் ஊக்குவித்து வருகிறார்.


2025 ஆகஸ்ட் 3ஆம் தேதி, நமது அயலகச் செய்தியாளர் முருகு வைத்தியநாதன், முனைவர் சுந்தருடன் உரையாடினார். அந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நேர்காணல் கீழே முழுமையாக வழங்கப்பட்டுள்ளது:


முருகு: முனைவர் சுந்தர், நேரம் ஒதுக்கியதற்கு நன்றி. உங்கள் ஆரம்ப வாழ்க்கையைப் பற்றிச் சுருக்கமாகக் கூற முடியுமா?


முனைவர் சுந்தர்: நன்றி, முருகு. நான் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி ஊராட்சியைச் சேர்ந்தவன். நான் ஒரு தமிழ் சித்த மருத்துவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன்; எனக்கு ஐந்து சகோதரிகள் உள்ளனர். என் அப்பாவின் பெயர் திரு பாலசுப்ரமணியன், அம்மாவின் பெயர் திருமதி சரோஜா. நான் என் இளங்கலைப் பட்டத்தை வேதியியலில் முடித்தேன். அதன் பிறகு, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களை பயோ-கெமிஸ்ட்ரியில் பெற்றேன். பின்னர், தென் கரோலினா மருத்துவப் பல்கலைக்கழகம் (MUSC)-இல் முனைவர் ஆராய்ச்சி (Post Doc ) பணிக்காக அமெரிக்காவுக்குச் சென்றேன். அப்போது முதல் அங்கேயே என் கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறேன்.


முருகு: தமிழ் சித்த மருத்துவ அறிவியலையும் இன்றைய அறிவியலையும் இணைக்கும் முடிவை எடுக்க எது உங்களைத் தூண்டியது?


முனைவர் சுந்தர்: இது ஒரு தனிப்பட்ட அனுபவத்தையும், தமிழரின் தொன்மையையும் ஆர்வத்தையும் இணைத்துச் செல்வதிலிருந்து தொடங்கியது. நான் தமிழ்நாட்டில் வளர்ந்தபோது, சித்த மருத்துவம், யோகம், பிராணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகள் என் அன்றாட வாழ்வில் இயல்பாகவே இருந்தன. சிறுவயதில் எனது சித்தப்பா மருத்துவர் பாலகிருஷ்ணன் நடத்திய சித்த வைத்தியசாலையில் நான் தன்னார்வமாக உதவி செய்தேன். அதனால், நம் கலாச்சாரத்தில் வேரூன்றிய சித்த சிகிச்சை முறைகளை இளமையில் நன்கு கற்க ஒரு வாய்ப்பாக அமைந்தது. அதே நேரத்தில், நான் கல்வியில் முற்றிலும் வேறுபட்ட துறையில் சென்று பயோ-கெமிஸ்ட்ரி படித்து, ஆய்வுக்கூடங்களில் பணியாற்றி, மூலக்கூறு அறிவியலில் பயிற்சி பெற்றேன். அப்போது என் மனதில் ஒரு கேள்வி உருவானது: நமது தமிழ்க் கலாச்சார சிகிச்சை முறைகளை ஆய்வுக்கூடத்துக்குள் கொண்டுவர இயலுமா? மருந்துகளைப் போலவே, இதையும் செல்லுலார் மூலக்கூறு மட்டத்தில் (Clinical Trials) ஆய்வு செய்ய முடியுமா? இக்கேள்விகள் என் ஆழ் மனதைத் துளைத்துக் கொண்டிருந்தன. அவைதான் என் ஆராய்ச்சி வாழ்க்கையின் பாதையை உருவாக்கிய முக்கியக் காரணியாக உருவெடுத்தது.


முருகு: உங்களின் ஆராய்ச்சிப் பயணத்தில் திருமூலரின் திருமந்திரம் எவ்வாறு வழிகாட்டியாக இருந்தது?


முனைவர்: சுனாமிக்குப் பிறகு, ஒரு முறை 2005-இல் இந்தியா வந்தபோது என் சொந்த ஊருக்குச் செல்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. அப்போது தான் நான் திருமந்திரம் நூலை வாங்கினேன். படிக்கத் துவங்கியதும், அது தமிழ் சித்த மருத்துவத்தையும், எனது அறிவியல் ஆராய்ச்சிப் பணியையும் எப்படி அணுகுவது என்பதை முற்றிலுமாக மாற்றியது. திருமந்திரம் என்பது தமிழ் யோகம் மற்றும் சித்த அறிவியலின் ஒரு களஞ்சியம். திருமூலர், மூச்சை ஒழுங்குபடுத்துவதன் (regulated breathing) சக்தியைப் பற்றியும், அது உடலின் உள் ஒளி (inner light), உடல்நலம் மற்றும் உணர்வறிவு (consciousness) மீது ஏற்படுத்தும் விளைவுகளையும் ஆழமாக விவரிக்கிறார். அவர் வாசி யோகம் கும்பகம் மூச்சை தடுக்கிற நடைமுறைகள் ஆகியவற்றைச் சிகிச்சை பெறும் வழிமுறைக் கருவிகளாக எடுத்துரைக்கிறார். எனக்கு இவை வெறும் தத்துவச் சொற்பொழிவுகளாகவும் இலக்கியமாகவும் அல்லாமல் அறிவியல் முறையில் சோதிக்கக் கூடிய கண்ணோட்டங்கள் போலத் தோன்றின.


அதாவது: “இந்தப் பழமையான மூச்சுப்பயிற்சிகளின் உயிரியல் விளைவுகளை நாம் மேலோட்டமாக கணிக்க முடியுமா?” “திருமூலர் நூற்றாண்டுகளுக்கு முன் விவரித்தவற்றை நவீன அறிவியலால் அளவிட முடியுமா?” 2013 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில், ஹார்வர்ட் தமிழ் இருக்கை உலகத் தமிழ்ச் சமூகத்திடையே பெரிய வரவேற்பும் ஆதரவும் பெற்றுக் கொண்டிருந்தது. அந்த சிந்தனையும் ஆக்கமும் என்னை மேலும் ஊக்கப்படுத்தியது. 'தமிழ் சித்த மருத்துவக் களஞ்சியத்தையும் நவீன மருத்துவ அறிவியலையும் இணைக்கும் ஒரு மருத்துவ தமிழ் இருக்கை ஏன் உருவாக்கக்கூடாது?' அதுவே, “ஒருங்கிணைந்த மருத்துவத்திற்கான திருமூலர் தமிழ் இருக்கை” என்ற எண்ணம் முதன்முறையாக என் மனதில் உருவானது. அது நம் தொன்மையான சித்த யோகம் உயிரியல் மருத்துவம் போன்றவற்றை நவீன மருத்துவத் தொழிநுட்பத்துடன் ஒருங்கிணைக்கும் பார்வையாக மலர்ந்தது.


முருகு: ஒருங்கிணைந்த மருத்துவத்திற்கான திருமூலர் தமிழ் இருக்கையின் நோக்கும் போக்கும் என்னென்ன?


முனைவர்: இந்த தமிழ் இருக்கையின் நோக்கம் மூன்று முக்கியத் தூண்களாவன: 1. செயல்முறை (Mechanism), 2. நன்மைகள் (Benefits), 3. பரவல் (Dissemination). முதலில், பிராணாயாமம் போன்ற மூச்சுப்பயிற்சிகள் மனித உடலுக்குச் செல் மற்றும் உடலியல் மட்டங்களில் என்ன விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்வதே எங்கள் முதன்மை இலக்கு. இதன் மூலம், மூச்சை அடிப்படையாகக் கொண்ட சிகிச்சைகள் குறித்த ஆழமான புரிதலை உருவாக்க விரும்புகிறோம். இரண்டாவது, தமிழ் சித்த யோக மரபை மருத்துவம் பரிசோதிக்கக் கூடிய மருத்துவப் பயன்களாக மாற்ற விரும்புகிறோம். இதற்காக பயோமார்க்கர் (biomarker) புரொஃபைலிங், ஜீன் வெளிப்பாடு (gene expression), மற்றும் நரம்பியல் கண்காணிப்பு போன்ற நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி நம் சித்த மருத்துவ உண்மைக் கூறுகளை உறுதிப்படுத்த முயல்கிறோம்.


மூன்றாவது, புற்றுநோய், நீடித்த நோய்கள், மற்றும் உணர்ச்சிப் பாதிப்புகள் போன்ற தாக்கங்களை எதிர்கொள்கிற மக்களுக்குக் குறைந்த செலவில், மூச்சை மையமாகச் சார்ந்த சிகிச்சை நடைமுறைகளை உருவாக்கும் பணியில் முழுமையாக ஈடுபட்டு இருக்கிறோம். இதில் மீட்பு, நோய் எதிர்ப்பு மேம்பாடு, மற்றும் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் பயிற்சிகளும் அடங்கும். திருமூலர் தமிழ் இருக்கை பின்பற்றும் ஆராய்ச்சி கோட்பாடு மிகவும் எளிமையானது, ஆனால் ஆழமானது: 'ஓர் சித்தப் பயிற்சி நடைமுறை உங்கள் உயிரணுக்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா? அப்படியானால், அதை அறிவியல் ரீதியாக அளவிட இயலும்.' இந்த அணுகுமுறைதான், தமிழர் அறிவின் நவீன அறிவியலின் துல்லியமான பரிசோதனை விதிகளையும் ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாக அமைக்கிறது.


முருகு: நீங்கள் மேற்கொண்ட சில அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி அளவீடுகளுக்கான எடுத்துக்காட்டுகளை வாசகர்களுக்குப் பகிர முடியுமா?


முனைவர்: நாங்கள் மேற்கொண்ட ஆய்வுகளில், கீழ்க்கண்ட முக்கியமான விளைவுகளை அறிவியல் ரீதியாக அளவிட்டுப் பதிவு செய்துள்ளோம்:


• பயத்தையும் மன அழுத்தத்தையும் குறைக்கும் திறன்


• மூளை, நோய் எதிர்ப்பு, மற்றும் நரம்பியல் செயல்பாடுகளில் ஈடுபடும் உமிழ் நீரின் (எச்சில்) புரதங்களை (salivary proteins) மேம்படுத்தும் செயல்பாடு


• மன அழுத்தம் குறைவாக இருப்பதாக உணரும் உளவியல் விளைவுகள்


• முழுமையான உடல் மற்றும் மன நலதை (overall well-being) மேம்படுத்தும் திறன்


எங்கள் ஆய்வுகளில் ஒன்றின் முடிவில், வெறும் 20 நிமிடங்கள் பிராணாயாமம் செய்த பிறகு, அதில் கலந்து கொண்டவர்களிடையே நரம்பியல் வளர்ச்சிக்குத் தேவையான NGF (Nerve Growth Factor) என்ற மூலக்கூறு அளவில் கணிசமான (statistically significant) உயர்வு ஏற்பட்டதை நாங்கள் அறிவியல் ரீதியாக பதிவு செய்தோம்.


புற்றுநோயிலிருந்து மீண்டவர்களிடம் செய்யப்பட்ட மற்றொரு ஆய்வில், GDNF (Glial cell-derived neurotrophic factor) போன்ற மற்ற நரம்பியல் வளர்ச்சிக்கு உதவும் மூலக்கூறுகளும் கூட அதிகரித்துள்ளன என்பதை காணமுடிந்தது. இவை அனைத்தும், தமிழ் சித்த மருத்துவ மூச்சுப் பயிற்சிகளை அறிவியல் ரீதியாக அளவிட்டு, அதன் பயன்களை உறுதிப்படுத்தும் முயற்சியில் ஒரு பெரிய முன்னேற்றமாகும்.


முருகு: இந்தப் பயனுள்ள தகவல் மற்ற புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை மேலும் விவரிக்கவும்.


முனைவர்: கண்டிப்பாக. புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் (cancer survivors) பெரும்பாலும் தளர்வு (fatigue), பயம் மற்றும் கவலை, உறக்கமின்மை, மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி தடுமாற்றம் (immune dysregulation) போன்ற சவால்களை எதிர்கொள்கிறார்கள். திருமூலரின் மூச்சுப் பயிற்சி முறைகள் (breathwork protocols) பின்வருமாறு உதவுகின்றன: Vagal tone-ஐ மேம்படுத்துகிறது, இது உடலில் ஏற்படும் 'பதுங்கு அல்லது பாய்ந்துவிடு' (fight-or-flight) நிலையைக்குறைத்து அமைதியை ஏற்படுத்துகிறது. உமிழ்நீர் சுரப்பி செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது, இது குறிப்பாக கதிர் வீச்சு radiation சிகிச்சைக்குப் பிறகு மிகவும் முக்கியமானது. கார்டிசால் (cortisol) அளவை குறைக்கிறது, இது நோய் எதிர்ப்பு மீட்பை (immune recovery) ஊக்குவிக்க உதவுகிறது. ஆக்ஸிஜன் எடுத்துக்கொள்வது மற்றும் செல் மறுவளர்ச்சி (cellular regeneration) ஆகியவற்றை அதிகரிக்கிறது. மொத்தத்தில், 'மனதின் நிலையை மாற்றுவதன் மூலம் நம் நோய் எதிர்ப்பு அமைப்பையும் மாற்ற முடியும்' என்பது நிரூபணமாகிறது. உடல், மனம், அறிவியல் அனைத்தையும் ஒன்றிணைக்கும் ஒரு பாலம் (bridge) போல மூச்சு என்பது செயல்படுகிறது.


முருகு: இந்தத் தொடர்ச்சியான ஆராய்ச்சி, உலகிலுள்ள பிற ஒருங்கிணைந்த மருத்துவ மையங்களில் நடைபெறும் பணிகளுடன் ஒப்பிடும்போது திருமூலர் தமிழ் இருக்கை எவ்வாறு மாறுபடுகிறது?


முனைவர்: பெரும்பாலான உலகளாவிய Integrative Medicine மையங்கள் மனது உடல் தொடர்பு வழிகளில் (mind-body interventions) அதீத கவனம் செலுத்துகின்றன. உதாரணமாக யோகம், அகுபங்க்சர் (acupuncture), தைச்சி (tai chi), கீகாங் (qi gong), மற்றும் ஞாபகத்திற்கான துணை மருந்துகள் (supplements) போன்றவை. ஆனால், நம்முடைய தமிழ் இருக்கை சில முக்கியமான விதங்களில் தனித்துவமானது: முதலில், நாங்கள் தமிழ் சித்த பாரம்பரியத்தில், குறிப்பாகத் திருமூலரின் எண்ண வழிகளில் ஆழமான கவனம் செலுத்துகிறோம். எங்கள் ஆராய்ச்சி பயோமார்க்கர் சார்ந்தது (biomarker-driven); அதாவது, மூலக்கூறு அடிப்படையிலான முடிவுகளைத் துல்லியமாகக் கணிக்கிறோம்.


மேலும், நாங்கள் புற்றுநோய் நிபுணர்கள் (oncologists), கதிரியக்க சிகிச்சை மருத்துவர்கள் (radiation oncologists), மற்றும் நரம்பியல் விஞ்ஞானிகள் (neuroscientists) உடன் குழுமமாக பயணிக்கிறோம். இந்த திருமூலர் தமிழ் இருக்கை, உலகிலேயே முதன்முறையாகத் தமிழ் யோக அறிவியலை மருத்துவ ஆய்வுக் கட்டமைப்புக்குள் கொண்டுவரும் ஒரு முன்மாதிரியான ஆராய்ச்சி முயற்சி ஆகும்.


முருகு: தாங்கள் அனைத்து சமூகத்தையும் சென்றடையும் பணிகளையும் மேற்கொண்டிருக்கிறீர்கள். Glow Blue Week மற்றும் LOWVELO பற்றிக் கூற முடியுமா?


முனைவர்: கண்டிப்பாக! LOWVELO அமைப்பு நடத்தும் Glow Blue Week நிகழ்வின்போது, புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன், நான் மூச்சுப்பயிற்சி வகுப்புகளை நடத்தினேன். அந்த வகுப்புகளில், எளிய மூச்சுப்பயிற்சிகள் எடுதுக்காட்டாக ஆழ் மூச்சு எடுப்பது, Box Breathing (நேர்த்தியான கால அளவுகளில் மூச்சை எடுத்து, பிடித்து, விட்டுவிட்டு மீண்டும் எடுக்கிற நடைமுறை), திருமூலர் பிராணாயாமம் (மூச்சை ஒரு குறிப்பிட்ட அளவில் எடுத்து, பிடித்து, விடும் நடைமுறை) ஆகியவற்றைக் கற்றுத்தருகிறோம். இதன் பின்னணியில் உள்ள அறிவியல் விளக்கத்தையும் பயனாளிகளுக்கு எளிதாகப் புரியும் வகையில் எடுத்துரைக்கிறோம். இதன் முக்கியக் கூறுகள் என்னவென்றால், பயிற்சி செய்பவர்கள் உடனடியாக நன்மைகளைப் பெறுகிறார்கள். மேலும் அவர்கள் அனுமதியுடன் முக்கியமான சுகாதாரத் தரவுகளையும் நாங்கள் சேகரிக்கிறோம். இது எங்கள் ஆய்வுகளுக்கு மிகவும் மெருகேற்றுகிறது.


முருகு: “தமிழ்” என்ற சொல்லை இந்த இருக்கையின் பெயரில் சேர்த்து வைத்திருப்பது ஏன்?


முனைவர்: ஏனெனில், தமிழ் மொழிதான் இந்த சித்த மருத்துவ மரபுத் தளத்தை உருவாக்கிய மூலமொழியாகும்.'தமிழ் இருக்கை' என்ற பெயர், இந்த மருத்துவச் சிகிச்சை அறிவின் அடித்தளமான கூறுகள் தமிழிலேயே உருவாகின என்பதை உலகறியச் செய்கிறது. சித்தர் திருமூலர், தனது யோக கோட்பாடுகளையும் சித்தக் கருத்துக்களையும் தமிழிலேயே எழுதினார். அவருடைய அறிவு கட்டமைப்பு, தமிழ் சைவ சித்தாந்தத்தில் ஆழமாக வேரூன்றியது. மேலும், இது உலகுக்கு ஒரு மிக முக்கியமான செய்தியைத் தெளிவாக தெரிவிக்கிறது: 'தமிழ் என்பது வெறும் இலக்கிய மொழியாக மட்டுமல்ல; அது ஒரு அறிவியல் மொழியுமாகும்.'


முருகு: TACIT உடைய எதிர்காலத்துக்கான உங்கள் திட்டம் என்ன?


முனைவர்: நமது குறிக்கோள்கள்: தமிழ் நலவாழ்வு மரபுகளுக்கான ஒரு உலகளாவிய மின்னணு தொகுப்பகம் (Global digital repository): இதில் சித்த, யோக மற்றும் மருத்துவ ஓலைச்சுவடிகள் அதன் உரை நூல்கள் உள்ளடங்கும். ஓர் உயிரியல் மருத்துவ பயிற்சி மையம்: இங்கு இளம் ஆராய்ச்சியாளர்கள் திருமந்திரம், செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் (cell and molecular biology) ஆகியவற்றை ஆழ்ந்து கற்கலாம். பிராணாயாமம் சார்ந்த மூச்சுப் பயிற்சிகளுக்கான மருத்துவப் பரிசோதனைகளை விரிவுபடுத்துவது. குறிப்பாகப் புற்றுநோய், நரம்பியல் செயலிழப்பு (neurodegeneration), மற்றும் மன பாதிப்பிலிருந்து மீட்பு போன்ற துறைகளில் இவை அனைத்தும் TACIT இன் மூலம் தமிழ் மரபுகளையும் நவீன அறிவியலையும் ஒருங்கிணைத்து உலக நலத்துக்காகச் சேவை செய்யும் பெரிய கண்ணோட்டத்தின் ஒரு பகுதியாகும்.


முருகு: Thirumoolar Tamil Chair for Integrative Therapies மற்ற ஹார்வர்ட், பெர்க்லி, டொராண்டோ போன்ற தமிழ் இருக்கைகளைவிட என்ன வித்தியாசமாக இருக்கிறது?


முனைவர்: ஹார்வர்ட், UC பெர்க்லி, டொராண்டோ பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ் இருக்கைகள் பொதுவாக மொழி, இலக்கியம் அல்லது தென்னாசியக் கல்வியியல் துறைகளுக்குள் அமைந்துள்ளவை. அவை கவனம் செலுத்தும் துறைகள்: தமிழ் இலக்கணம் மற்றும் சொற்பெயரியல் (Philology) சங்க இலக்கியம், பக்தி இலக்கியம் போன்ற செழுமையான தமிழ்ப் பாரம்பரியங்கள் தமிழ்ப் பண்பாட்டு வழிமக்கள் (diaspora) பற்றிய ஆய்வுகள் இந்த அங்கங்கள் நம் மொழி மற்றும் இலக்கிய காலச்சாரத்தை பாதுகாக்க மிகவும் அருமையான பங்களிப்புகளைச் செய்து வருகின்றன.


ஆனால், Thirumoolar Tamil Chair for Integrative Therapies (TACIT) என்பது தென் கரோலினா மருத்துவப் பல்கலைக்கழகத்தில் (MUSC) அமைந்துள்ள மருத்துவ ஆய்வு மற்றும் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் இயங்குகிறது. இது ஒரு மிக முக்கியமான வேறுபாடு. இதன் நோக்கம் செயல்திட்டம் முற்றிலும் மாறுபட்டது: இது தமிழ் மரபுப் பாரம்பரியத்தின் மருத்துவ/அறிவியல் மதிப்பை உலகளாவிய சுகாதாரக் கோட்பாடுகளுடன் இணைத்து நிரூபிக்க முயலுகிறது. இங்கு தமிழ் என்பது ஒரு மொழியாக அல்ல, மருத்துவ அறிவின் ஊற்று என எடுத்துக்கொள்ளப்படுகிறது. சுருக்கமாகச் சொல்வதானால்: ஹார்வர்ட், பெர்க்லி போன்ற தமிழ் இருக்கைகள் தமிழின் 'குரலை' பாதுகாக்கின்றன. TACIT தமிழ் மருத்துவ அறிவுக்களஞ்சிய 'மதிப்பை' உலகம் அறியச் செய்கிறது, மனித வாழ்வை மேம்படுத்துகிறது.


முருகு: இப்பணி முழுமையான வெற்றியடைய தமிழ்ச் சமூகத்திடமிருந்தும் உலக சமூகத்திடமிருந்தும் நீங்கள் எதிர்பார்க்கும் ஆதரவு என்ன?


முனைவர் சுந்தர்: இந்த இருக்கை தமிழ் அறிவுக்களஞ்சியத்தில் வேரூன்றியதாக இருந்தாலும், அதன் நோக்கம் உலக நலன் ஆகும். முதன்முறையாக ஒரு அமெரிக்க மருத்துவ பல்கலைக்கழகம் தென் கரோலினா மருத்துவப் பல்கலைக்கழகம் (MUSC) ஒரு தமிழ் சித்தரின் பெயரில் ஒருங்கிணைந்த மருத்துவத்திற்கான திருமூலர் தமிழ் இருக்கை உருவாக்க $500,000 நிதி ஒதுக்கியுள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நிகழ்வு. இப்போது, இந்த Thirumoolar Tamil Chair for Integrative Therapies (TACIT)-ஐ முழுமையாக நிறுவவும், நிரந்தரமாக இயக்கவும், $1.5 மில்லியன் நிதி தேவைப்படுகிறது. இது வெறும் தமிழ் மக்களுக்காக அல்ல, இது மனிதக்குலத்துக்கான ஒரு சேவை.


“யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்”


'May the joy we experience be shared by the whole world'


- சித்தர் திருமூலர்


எனவே, இனம், மொழி, தேசியம், பின்னணி என்பவற்றைக் கடந்து,


இந்த புனிதப் பணியை ஆதரிக்க அனைவரையும் நான் அழைக்கிறேன். நீங்கள் ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளராக இருந்தாலும், ஒரு ஆசிரியராக இருந்தாலும் ஒரு மாணவனாக இருந்தாலும் பழமையான சித்த மருத்துவம் நவீன நலத்திற்குச் சேவை செய்யும் என்று நம்பும் ஒரு சராசரி மனிதராக இருந்தாலும் இந்த வராலற்று சிறப்பு மிக்க இருக்கை அமைய ஒரு பகுதியாக இருக்க முடியும்.


நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால், திருமூலரின் அறிவியல் கூறுகளையும் பண்டைய சித்த முறைகளையும் நவீன செல்லியல் மருத்துவ உலகிற்கு எடுத்துச் செல்லவும் மனித வாழ்வை மேம்படுத்தவும் முடியும். அதுவே இவ்விருக்கையின் உண்மையான இலக்கு! அனைவரும் ஒன்று சேர்ந்து நன்கொடை அளிப்போம்!


ஒருங்கிணைந்த மருத்துவத்திற்கான திருமூலர் தமிழ் இருக்கை / TACIT முயற்சிக்கு நன்கொடை அளிக்கத் தொடர்பு கொள்ள:


முனைவர் சுந்தர் பாலசுப்ரமணியன், மின்னஞ்சரல்: balasubr@musc.edu


Tamil Chair Inc. https://tamilchair.org/thirumoolar-chair


MUSC வளர்ச்சி அலுவலகம் https://web.musc.edu/giving TACIT — Thirumoolar Chair for Integrative Therapies


- நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்







      Dinamalar
      Follow us