/
உலக தமிழர்
/
வெளிநாட்டு தகவல்கள்
/
அம்மாபாளையம் முதல் அமெரிக்க அதிபர் விருது வரை - முனைவர் அரசு செல்லையாவின் சாதனைப் பயணம்
/
அம்மாபாளையம் முதல் அமெரிக்க அதிபர் விருது வரை - முனைவர் அரசு செல்லையாவின் சாதனைப் பயணம்
அம்மாபாளையம் முதல் அமெரிக்க அதிபர் விருது வரை - முனைவர் அரசு செல்லையாவின் சாதனைப் பயணம்
அம்மாபாளையம் முதல் அமெரிக்க அதிபர் விருது வரை - முனைவர் அரசு செல்லையாவின் சாதனைப் பயணம்
ஆக 17, 2025

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் எனும் சிறிய ஊரில் பிறந்து வளர்ந்து, இன்று அமெரிக்காவின் மேரிலாந்தில் தமிழுக்கும் கல்விக்கும் ஒளிக்கீற்றாகத் திகழ்கிறார் பேராசிரியர் முனைவர் அரசு செல்லையா . 2025 ஆகஸ்ட் 14ஆம் தேதி, நமது அயலகச் செய்தியாளர் புதுவை முருகு வைத்தியநாதன், முனைவரின் நீண்ட கல்விப் பயணம், தமிழ்த் தொண்டு, சமூக சேவை, வாழ்க்கைப் பயணம் ஆகியவை குறித்துக் கலந்துரையாடினார். அதன் கட்டுரைத் தொகுப்பு இங்கே வாசகர்களுக்காக முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.
1960-களில் அரசு செல்லையா அவர்கள் பள்ளிப் பயில்கையில் மின்சாரம் வந்து சேராத ஊராட்சியாகவே தான் அம்மாபாளையம் இருந்திருக்கிறது.
விவசாயக் குடும்பம்
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்” -குறள் 1033 என்ற திருக்குறளிற்கு இணங்க தன் சகோதர சகோதரியுடன் செல்லையா-அழகம்மாள் என்ற பெற்றோர்களுக்கு ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் வழிக்கல்வியில் படிதிருக்கிறார். பின் பீயூசி (PUC) ஆங்கில வழியில் படித்திருக்கிறார். சிறு வயதிலிருந்தே அனைத்துவிதமான விவசாய வேலைகளிலும் பெற்றோருக்குத் துணையாகச் செயல்பட்டு வந்துள்ளார். தமிழ் மாணவர்கள் ஆங்கில வழிக் கல்வி தொடர அன்றையக் காலகட்டத்தில் (PUC) Birdge-course இருந்ததாகவும் அதிலும் சேர்ந்து கற்றதாகவும் கூறுகிறார். தன் தந்தை அரசியல் கட்சியில் உள்ளவர்களிடம் சென்று ஒரு சிபாரிசு கடிதம் வாங்கி இருந்தால் அவர் எடுத்த மதிப்பெண்களுக்குக் கண்டிப்பாக நல்ல மருத்துவராகவோ அல்லது கால்நடை/விவசாயக் கல்லூரிகளிலோ சேர்ந்திருக்க முடியும் என்கிறார். ஆனால் அப்படி இல்லாமல் உயிரியல் பட்டப் படிப்பில் சேர்ந்திருக்கிறார்.
இன்றைய இணைய உலகில் செய்திப்பகிர்வு தகவல் பரிமாற்றம் என்பது அனைவரிடமும் மிக எளிமையாகச் சென்றடைகிறது, எவரும் எளிதில் பயன் பெறமுடிகிறது. நூலகம் கூட இல்லாத ஒரு கிராமத்திலிருந்து அதிகப் பணவசதி இல்லாமல் பள்ளிப்படிப்பு, கல்லூரி, பல்கலைக் கழகம், முனைவர் பட்டம், மேலும் அமெரிக்காவில் ஆராய்ச்சி முனைவர் படிப்பு (PostDoc) என்று எப்படி இவரால் சாத்தியமானது என்பது ஒரு பிரமிப்பாகத்தான் இருந்தது.
தன்னம்பிக்கை
முன்னாள் மாணவர் நெட்வொர்க்கிங் (Alumni Networking), கல்வி மாநாட்டில் கலந்து கொள்வது (Attending Conferences), கட்டுரை எழுதுதல், ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி வெளியிடுதல், கல்விப் பட்டறைகளில் (Educational Workshops) கலந்துகொள்வது, அனைத்து சாத்தியமான உயர்கல்விகளுக்கும் விண்ணப்பிப்பது, பகுதிநேர வேலைகள் செய்தல் எனப் பல வழிமுறைகளையும், மற்றவர் கூறும் அறிவுரைகளையும் பின்பற்றி தன்னை வளர்ந்து வரும் நவீன அறிவியல் உலகிற்குத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறார். துன்பத்தைத் தாங்குபவர்கள், உண்மையில் இடர்பாடு கொண்டவர்கள் அல்ல; அவர்களுக்கே உண்மையான இன்பம் கிட்டும் என்ற சங்கச் சொல் போல, தளராத முயற்சியால் அவர் வாழ்வில் முன்னேறினார். பின்தங்கிய கிராமத்தில் பிறந்தாலும், தன்னம்பிக்கையை இழக்காமல், வாழ்க்கையில் முன்னேறத் தொடர்ந்து புதியப் புதிய விருப்பங்களை முயன்றார். தன் முயற்சிகள் வெற்றி பெற மனிதவளத் தொடர்புகளை வளர்த்துக் கொண்டே இருப்பதன் அவசியத்தை அந்தக் காலத்திலேயே உணர்ந்திருக்கிறார்.
முனைவர் அரசு செல்லையா மூலக்கூறு உயிரியல், நுண்ணுயிரியல் துறைகளில் ஆய்வு செய்து பேராசிரியராக, அமெரிக்கக் கல்லூரி, பல்கலைக்கழக அளவில் பல ஆண்டுகளாகப் பயிற்றுவிக்கிறார். தற்போது பால்டிமோர் மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார். கடந்த 40 ஆண்டுகளாக அமெரிக்காவில் பல்வேறு தமிழ் அமைப்புகளில் தொண்டாற்றுகிறார். பேராசிரியர் அவர்கள் தொடர்ந்து தமிழ் மொழி, தமிழ்க் கல்வி, பகுத்தறிவு வளர்ச்சியிலும்; சுற்றுச்சூழல் காப்பிலும் தன்னார்வலராகச் செயல்பட்டு வருகிறார்.
பல்வேறு பதவிகள்
அவர் பங்கு பெரும் முக்கியமான சில அமைப்புகள்:
நிறுவனர், மிசொரி தமிழ்ப்பள்ளி;
நிறுவனர் தலைவர், மிசொரி தமிழ்ச் சங்கம் ;
மேனாள் தலைவர், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை (FeTNA);
ஒருங்கிணைப்பாளர், 1998 FeTNA Conventions, Edwardsville, Illinois;
நிறுவனர் தலைவர், அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகம்;
Global Ambassador, USA வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் அமைப்பு (நடவு);
பொதுவாக மக்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்; அவற்றுக்கான தீர்வுகள், மேம்படுத்தும் எண்ணங்கள் மனதில் தோன்றினாலும், செயல்படுத்த நேரத்தை ஒதுக்குவது சிலருக்கே சாத்தியம். முனைவர் அரசு செல்லையா அவர்கள், அந்தச் சிலரில் ஒருவராகத் திகழ்கிறார். மிசௌரியில் வசித்த காலத்தில், அங்கு தமிழுக்கென தனி அமைப்பு இல்லை; இருந்தது பொதுவான தென்னிந்தியக் கலாச்சாரச் சங்கம் மட்டுமே. அப்போது அவர், தமிழ் என்ற அடித்தளத்தில் தமிழர்கள் தழைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், நண்பர்களோடு இணைந்து 'மிசௌரி தமிழ்ச் சங்கம்' என்ற புதிய சுடரொளியை ஏற்றி, அங்கிருந்த தமிழர்களின் பண்பாட்டுப் பெருமையை உலகுக்கு வெளிப்படுத்தினார். பகுத்தறிவு, சுய மரியாதை போன்ற கருத்துகளில் தீவிர ஈடுபாடு கொண்ட இவர், நாத்திகக் கொள்கையிலும் உறுதியான பற்றுடன் செயல்பட்டு வருகிறார்.
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.- குறள் 115
வாழ்வில் ஏற்றத் தாழ்வுகள் தவிர்க்க முடியாதவை. ஆனால் அவற்றை சமநிலையுடனும் பகுத்தறிவுடனும் எதிர்கொள்வதே சான்றோரின் மேன்மை என்ற பாங்கில், தன் நம்பிக்கைகளை வலியுறுத்தியும், பிறரின் உரிமைகளைக் காப்பதிலும் முன்னிலை வகிக்கிறார்.
அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகம்
அமெரிக்காவில் தமிழ் கற்பித்தல் என்பது, “நானும் கற்றுக் கொடுக்கிறேன்” என்ற தனிப்பட்ட எண்ணத்தில் அல்லாமல், அங்குப் பிறந்த பிள்ளைகளின் கல்வித் தேவையை முன்னிட்டு, அவர்களுக்கு அமெரிக்க வரலாறு, அமெரிக்கத் தலைவர்கள், அமெரிக்கச் சுற்றுலாத் தளங்கள் ஆகியவற்றோடு, தமிழ்நாட்டின் மரபு, பண்பாடு, கலை, இலக்கியங்களைச் சேர்த்துக் கற்பிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கிலேயே அரசு செல்லையா செயல்பட்டார். அமெரிக்கா முழுவதும் தனித்தனியாகச் செயல்பட்ட தமிழ்ப் பள்ளிகளை ஒன்றிணைத்து, “அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகம்” என்ற தேசிய அளவிலான கல்வி அமைப்பை உருவாக்கி, வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளார். இதுவரை ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த முயற்சியின் மூலம் பயன் பெற்று வருகின்றனர்.
மாணவர்கள் உயர்கல்விக்குச் சென்றபின், வேலைப்பளுவினால் தமிழை விட்டு விடாமல், மருத்துவம், பொறியியல் போன்ற தொழில்துறைகளோடு, மொழியியல், தொல்லியல் போன்ற கல்வித் துறைகளிலும் தமிழைத் தம்மோடு கொண்டு செல்ல வேண்டும் என்பதையே அவர் தொடர்ந்து வலியுறுத்துகிறார். வார இறுதிகளில் தமிழ்ப் பள்ளிகளில் தன்னார்வப் பணியில் ஈடுபடவும் இளைஞர்களை ஊக்குவிக்கிறார். இவரின் நோக்கம் பழமையான தமிழ் மொழியின் பெருமையை, 'மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்ற வள்ளுவன் வழியில், இந்தத் தலைமுறைக்கு மட்டுமல்லாமல், வருங்கால சந்ததிகளுக்கும் கடத்துவதே.
இயல், இசை, நாடகம்
குழந்தைகளைத் தமிழில் பேசவும், எழுதவும் மட்டுமல்லாமல், நம் தமிழ்க் கலாச்சார இசைக்கருவிகள் மீதும் ஆர்வம் கொள்ளச் செய்வதில் முனைவர் அவர்கள் தனித்துவமான முயற்சிகளை மேற்கொள்கிறார். குறிப்பாக, நம் தொல் தமிழர்களின் அடையாளமான “பறை” போன்ற இசையை கற்றுக் கொள்ள மாணவர்களை ஊக்குவிக்கிறார். தமிழ் மொழி ஒரு பாடநூலின் கருப்பொருளாக இல்லாமல், இயல், இசை, நாடகம் என்ற மூன்று நிலைகளிலும் வளர வேண்டும் என்ற கருத்தில் செயல்படுகிறார். மாணவர்களிடம் திருக்குறள் பற்றும், தமிழ்ப்பற்றும் அதிகரிக்க, திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை எழுதுதல் போன்ற போட்டிகளை நடத்துபவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.
அமெரிக்காவில் கடந்த 40 வருடங்களாக தமிழ்ப் பணியைச் செய்து வருவதால், முனைவரின் இத்தகைய சேவைகளை போற்றும் விதமாக அமெரிக்க அதிபரிடம் இருந்து “வாழ்நாள் சாதனையாளர்” விருதினைப் பெற்றுள்ளார். ஆனால் அவர் சொல்வதாவது, “இளையத் தலைமுறை தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதே, எனக்குக் கிடைக்கும் உண்மையான விருது”
இத்தனை வருடங்கள் ஆகியும் முனைவர் புதிய முயற்சிகளில் ஈடுபடத் தயங்குவதில்லை. நான் இங்கு செயல்படும் 'Fun Cycle Riders' என்ற சைக்கிள் அமைப்பைப் பற்றி அவரிடம் கூறியதும், உடனே, “நானும் புதிய சைக்கிள் வாங்கி உங்களோடு இணைந்து சைக்கிள் ஒட்டுகிறேன்” என்கிறார் இந்த 70 வயதைக் கடந்து பயணிக்கும் இளைஞர் அரசு செல்லையா அவர்கள். இவரின் ஆற்றல், 'அகன்ற அறிவும், அஞ்சாமையும், ஆயுள் வளமும்' கொண்ட வாழ்வின் உதாரணமாகும். இவரின் வாழ்க்கை நமக்கு கற்றுத் தரும் பாடம்: பிறந்த இடம், சூழல் எதுவாக இருந்தாலும், 'தன்னம்பிக்கையே துணை' என்பது போல், முயற்சி, பணிவு, பகிர்வு என்ற மூன்று குணங்களோடு நடந்தால் உலகமே நம் மேடை என்பதை முனைவர் அரசு செல்லையா அவர்கள் வாழ்வில் நிரூபித்துள்ளார்.
“மனத்தின் நிலை உயர்ந்தோர்க்கு, மண்ணின் எல்லைகள் இல்லை” உயர்ந்த மனப்பாங்கும் உறுதியான முயற்சியும் கொண்டவர்களுக்கு பிறந்த இடமும், சூழலும், எல்லைகளும் தடையாக நிற்காது. முனைவர் அரசு செல்லையா அவர்களின் வாழ்க்கைப் பயணம் இதற்கே உயிர்ப்பான சான்று.
“ஒழுக்கம் உடைமை குடிமை, இழுக்கம்
இலாமை புகும் துறவு” - குறள் 133:
வள்ளுவர் கூறியது போல, தனி மனிதன் தனது முயற்சிகளை வெற்றியடையச் செய்யும் அடிப்படை ஒழுக்கமே. ஒழுக்கம் உடையவர் எவ்வளவு எளிய சூழலில் இருந்தாலும் உயர்ந்து விளங்குவர்; ஆனால் ஒழுக்கம் இல்லாவிட்டால் எடுக்கும் முயற்சிகள் பலன் அளிக்காது. முனைவர் அரசு செல்லையா வாழ்வுப் பாதை இந்த வள்ளுவ வாக்கியத்தை நமக்கு நினைவூட்டுகிறது.
தமிழுக்காகவும், கல்விக்காகவும், சமூக நலனுக்காகவும் முனைவர் அரசு செல்லையா ஆற்றும் தொண்டுகள் மேலும் செழித்து, நீண்ட நாள் ஆரோக்கியத்துடனும் ஆனந்தத்துடனும் வாழ நாம் அனைவரும் மனமார வாழ்த்துவோம்.
- நமது செய்தியாளர், முருகவேலு வைத்தியநாதன்.