/
உலக தமிழர்
/
வெளிநாட்டு தகவல்கள்
/
கனடா டொரோண்டோவில் தமிழரின் பெருமை பேசும் பாவலர் மணி Dr. புட்பா கிறிட்டி
/
கனடா டொரோண்டோவில் தமிழரின் பெருமை பேசும் பாவலர் மணி Dr. புட்பா கிறிட்டி
கனடா டொரோண்டோவில் தமிழரின் பெருமை பேசும் பாவலர் மணி Dr. புட்பா கிறிட்டி
கனடா டொரோண்டோவில் தமிழரின் பெருமை பேசும் பாவலர் மணி Dr. புட்பா கிறிட்டி
மார் 20, 2025

வட அமெரிக்க நாடுகளில் தமிழ் மொழியை நேசிக்கும், தமிழில் எழுதும் எழுத்தாளர்களைச் சந்திக்கும் எனதுப் பயணத்தின் தொடக்கமாக, கடந்த வாரம் கனடாவின் டொரோண்டோ நகரைச் சென்றடைந்தேன். அங்கு சில தமிழ் அறிஞர்களையும் எழுத்தாளர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
டொரோண்டோவிற்கு அருகிலுள்ள இசுக்கார்பரோ நகரில் வசிக்கும் பாவலர் மணி
புட்பா கிறிட்டியை சந்திக்கவும் நேர்ந்தது. இலங்கையில் பிறந்து, கனடாவில்
பல ஆண்டுகளாக வாழ்ந்துவரும் இவர் தமிழ் மொழியையும் கனடா மண்ணையும்
நேசித்து, மதித்து வாழ்பவர். தமிழ் இலக்கண நூல்களும், தொல்காப்பியம்,
திருக்குறள், சங்க இலக்கியங்களும் இவருக்கு மிகப் பிடித்தம். திருக்குறள்
ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவது, இலங்கை, இந்திய மாணவர்களுக்கு விஞ்ஞான பாடம்
கற்றுக் கொடுப்பது, திருக்குறள் கற்றுக் கொள்ள உதவுவது, தொல்காப்பியம்
கற்கும் மாணவருக்கு உதவுவது, கனடா தமிழாழி தொலைக்காட்சியில் செய்தி
வாசிப்பாளர் என்று மேலும் தமிழ் சார்ந்தப் பலப் பணிகளைச் செய்கிறார்.
தமிழ்நாட்டில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முனைவர் பட்டம்
பெற்ற இவர், கல்விக்குப் பருவம் கிடையாது என்பதைத் தனது சாதனைகளால்
நிரூபித்து விட்டார்.
மாபெரும் திருக்குறள் சாதனை:
உலகெங்கும் உள்ள திருக்குறள் அமைப்புகளோடு இணைந்து பல கருத்தரங்குகளிலும்
கவியரங்குகளிலும் பங்கேற்று, பல தமிழ் அறிஞர்களால் பாராட்டப்பட்டவர் புட்பா
கிறிட்டி. இவரது சாதனை அதன்மீது ஒரு முத்திரை பதிக்கின்றது. கனடாவில், 59
மணி நேரத்தில் 195 மேப்பிள் இலைகளில் 1330 குறள்களை எழுதிப் பதித்து,
உலகளாவிய சாதனை நிகழ்த்தியுள்ளார். கீழே விழுந்த மேப்பிள் இலைகளை எடுத்து
வந்து கழுவிக் காயவைத்து எழுதியுள்ளார். கனடாவில் மரங்களில் மேப்பிள்
இலைகள் பறிக்கக் கூடாது.
மனிதன் தனது வேட்டையாடும் காலத்திலிருந்தே அனுபவங்களையும் அறிவையும் பகிர்ந்து கொள்ள எழுத்து முன்னோடியான ஒரு கருவியாக இருந்துள்ளது. தொல்பொருள் ஆய்வுகளில் குகைகளின் அடுக்குகளில், உயர்ந்த பாறை இடுக்குகளிலும் கண்டுபிடிக்கப்பட்ட கோட்டுச் சித்திரங்கள், மனிதனின் ஆரம்ப தருணங்களில் கூட அவன் தகவல் பரிமாற்றத்தை அவசியமாகக் கருதியதை உறுதிப்படுத்துகின்றன. காலப்போக்கில் இவை ஒழுங்கமைந்த எழுத்து முறைகளாகப் பரிணமித்து, மொழிகளாகவும், இலக்கியமாகவும், வரலாற்று ஆவணங்களாகவும் உருமாறின.
எழுத்து என்பது வெறும் வார்த்தைகளின் கூடுகை அல்ல, அது மனித உள்ளத்தின்
ஆழ்ந்த உணர்வுகளையும், சமூகம் கண்டுபிடித்த நுணுக்கமான அறிவுகளையும்,
தலைமுறைகள் கடந்து செல்லும் சிந்தனைகளையும் கொண்ட ஒரு நிலையான நினைவகம்.
ஒரு எழுத்தாளன் தனது எண்ணங்களையும் அனுபவங்களையும் எழுத்து வடிவில்
பதிக்கும்போது, அவனது ஆயுள் அதன் பக்கங்களின் ஆயுளாக நீடிக்கிறது. கனடாவின்
தேசிய அடையாளமான மேப்பிள் இலைகளின் மீது திருக்குறளை எழுதி, தமிழ்
மொழியின் பெருமையைக் கனேடியர்களுக்கும் உலகத்திற்கும் கொண்டு
சேர்த்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது.
தொல்காப்பியத்தை உலகத்திற்கு அளித்த பெரும் நிகழ்வு:
தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்ற வரிகளை உயிர்ப்பிக்கும்
வகையில், தொல்காப்பியத்தின் பெருமையை உலகறியச் செய்யும் மாபெரும் இலக்கிய
சேவை ஒன்று நடைபெற்றது. பெங்களூருவைச் சேர்ந்த 'ஷியாம்ஸ் ஆர்ட் அண்ட்
கிராஃப்ட் அகாடமி' மற்றும் அதன் நிறுவனர் ஓவியர், தொல்காப்பியத் தூதர்,
முனைவர் ஷியாமளா சந்தீப் ஆகியோர் முன்னெடுத்த அரிய இலக்கிய நிகழ்வில்,
உலகம் முழுவதிலுமிருந்து 45 தமிழ் அறிஞர்கள் மார்ச் 15, 2025 அன்று
பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில், 39 மணி நேரத்திற்குள் 1612 தொல்காப்பிய நூற்பாக்கள், தொல்காப்பியரின் உருவம் வரையப்பட்ட 60 அடி நீள பதாகையில் எழுதி உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. இதில் தமிழில் 41 பேர், ஆங்கிலத்தில் 4 பேர் எழுதியனர். 13 வயது குழந்தைகள் முதல் 70 வயது முதியவர்களும் இதில் பங்கேற்றது வியப்பூட்டுகிறது. 28 பெண்கள், 5 ஆண்கள், 9 சிறுமியர், 3 சிறுவர் எனப் பலர் தொல்காப்பியத்தை 'ஓவியத்தில் காவியமாக' பதித்தனர். அதில் வாய்ப்பு கிடைத்தது. இதில் முனைவர் புட்பா கிறிட்டியும் பங்கு பெற்று சாதனைப் புரிந்துள்ளார்.
பாவலர் மணி புட்பா கிறிட்டி - தமிழுக்காக வாழும் கவிஞர்: தன் கணவர் மறைந்த
பின்னரும் வாழ்க்கையைத் தயக்கமின்றி எதிர்கொண்டு, தமிழ் மீது தனது ஆர்வத்தை
வண்ணக் கைவினைகளிலும் எழுத்து வழியாகவும் பரப்பி வருபவர் பாவலர் மணி
முனைவர் புட்பா கிறிட்டி. இவரது அரும்பெரும் இலக்கியச் சேவை தமிழ் உலகில்
நீடிக்கட்டும் என்று வாழ்த்துவோம்!
- நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்