/
உலக தமிழர்
/
வெளிநாட்டு தகவல்கள்
/
உலக மொழிகளில் திருக்குறள் ஆவணப்படம்
/
உலக மொழிகளில் திருக்குறள் ஆவணப்படம்

திருக்குறளை உலக மொழிகளில் மொழிபெயர்ப்பது போதாது; உலகமக்களுக்கு அதை எளிதாகப் புரியும் வகையில் காட்சிப்படுத்தவும் அவசியம் என்கிறார் அமெரிக்கத் தமிழ் மூதறிஞர் திருக்குறளார் முனைவர் இர. பிரபாகரன். இதனை உணர்ந்து, அவர் நீண்ட கால கனவாகக் கொண்டிருந்த திருக்குறள் சார்ந்த ஆவணப்படம் தற்போது உருவாகி வருகிறது.
“The Ageless Wisdom of the Indian Poet Philosopher Thiruvalluvar” என்ற பெயரில் உருவாகும் இந்த ஆவணப்படம், tamilchair.org மற்றும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) ஆகிய அமைப்புகளின் ஒத்துழைப்புடன் உருவாகிறது. இப்படத்திற்கு முனைவர் பிரபாகரனே திரைக்கதையும் விவரணையும் எழுதியுள்ளார். கணினி, கணித, மேலாண்மை வல்லுநராக நாசாவிலும் அமெரிக்க இராணுவத்திலும் பணியாற்றிய இவர், சங்க இலக்கியங்களிலும் ஆழமான பங்களிப்பு செய்துள்ளார்.
இந்த ஆவணப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் அம்ஷன் குமார் இயக்குகிறார். “ஒருத்தி”, “மனுஷங்கடா” போன்ற திரைப்படங்களை இயக்கிப் புகழ் பெற்ற இவர், பாரதி, சர்.சிவி.ராமன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். இப்போதும் திருக்குறள் ஆவணப்படத்தில் முழுமையாக ஈடுபட்டு பணியாற்றி வருகிறார்.
முனைவர் இ.ஜே.சுந்தர், உலகத் தமிழ்க்களஞ்சியத்தின் முதன்மைப் பதிப்பாசிரியர், இப்படத்தின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றுகிறார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உருவாக்கத்தில் பங்களித்த இதய மருத்துவர் ஜானகிராமன் இப்பதிவிற்கு முழு ஆதரவை வழங்கியுள்ளார்.
இந்த ஆவணப்படம் வரும் ஜூலை 3 முதல் 5 வரை வடக்குக் கரோலினா மாநில ராலே நகரில் நடைபெறும் FeTNA மாநாட்டில் வெளியிடப்பட உள்ளது.
30 நிமிடங்கள் மட்டுமே கொண்ட இந்த ஆவணப்படம் முதற்கட்டமாக ஆங்கிலத்தில் வெளியானாலும், பின்னர் ஸ்பானிஷ், பிரஞ்சு, ஜெர்மன், சீனம், ஜப்பானியம், இந்தி உள்ளிட்ட பல உலக மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படும். மேலும், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களில் திரையிடப்படும் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, மயிலை, திருச்சி, செஞ்சிக்கோட்டை, வேலூர் கோட்டை போன்ற தமிழின் பண்பாட்டு மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
இத்திரைப்படம் திருக்குறளின் ஆன்மீக, தத்துவச் செல்வங்களை உலக மக்கள் முன் கொண்டு சென்று, அவர்களிடையே ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்