/
உலக தமிழர்
/
வெளிநாட்டு தகவல்கள்
/
கதையல்ல... நிஜம்!!- நமது செய்தியாளரின் அனுபவம்
/
கதையல்ல... நிஜம்!!- நமது செய்தியாளரின் அனுபவம்
ஜூன் 14, 2025

நான் எழுதுவது ஒரு கதையைப் போலத் தோன்றலாம். ஆனால் இன்று இதை எழுதத் தூண்டியது, ஏர் இந்தியா விமான விபத்தில் 11A இருக்கையில் இருந்தவர் உயிர் பிழைத்த செய்தி. அந்த இருக்கை எண்ணை வாசித்தவுடன், என் வாழ்வில் நடந்த ஒரு பயங்கர நிகழ்வு மறைந்த நினைவிலிருந்து எழுந்தது.
எனக்குக் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் சீட் கிடைத்திருந்தாலும், மெக்கானிக்கல் துறையையே விரும்பினேன். காரணம் என் கனவு. ஒரு தொழிற்சாலையில் மெக்கானிக்கல் இன்ஜினியராக வேலை செய்ய வேண்டும் என்பதுதான். அதனால்தான் நானாகவே தேர்ந்தெடுத்தேன். அப்போது நான் பணியாற்றிய இடம் ஓடிசா மாநிலத்தின் பராதிப் துறைமுக நகரம். அங்கு ஒரு பியர் தொழிற்சாலை கட்டும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. முதலில், மூன்று மாடிகளைக் கொண்ட நிர்வாகம் மற்றும் சேமிப்பு பயன்பாட்டிற்கான கட்டடத்தின் கட்டுமானம் தொடங்கப்பட்டது.
நாங்கள் கட்டுமான இன்ஜினியர்கள். பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வந்த தொழிலாளர்கள் அங்குத் தங்கியிருந்தனர். அவர்களுக்காக அந்தக் கட்டடத்தின் பக்கத்தில் தற்காலிகமாகச் சில அறைகள் அமைக்கப்பட்டிருந்தன. அங்குதான் நாங்களும் தங்கியிருந்தோம். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் ஒருவர் வீதம் பணிக்கு வந்திருந்த அந்த இடம், நிஜமாகவே இந்தியாவின் ஒற்றுமையை உணர வைத்தது. இந்தி, ஒரியா, பெங்காலி போன்ற மொழிகளில் நான் பேசத் தொடங்கிய காலமிது.
ஒரு இரவு, வேலை முடிந்து உறங்கிக் கொண்டிருந்தபோது என் படுக்கை ஈரமாக இருப்பதை உணர்ந்தேன். “ஏதோ கனவோ?” என்று நினைத்தேன். ஆனால் அந்த ஈரம் மாறவேயில்லை. உண்மையில் அது கனவல்ல என்பதையும், வெள்ளம் அறையைச் சூழ்ந்துவிட்டதையும் உணர்ந்தேன். காலைக் கீழே வைக்க முடியவில்லை அறை முழுக்க நீர் நிரம்பியிருந்தது.
வீட்டின் கதவைத் திறந்து வெளியே சென்று அனைவரையும் எழுப்பினேன். சில குடும்பங்கள் அலறிக்கொண்டு ஓடி வந்தனர். வெள்ளத்தில் நாய்கள், பாம்புகள், கழிவுகள் - எல்லாம் மிதந்து கொண்டிருந்தன.
ஓடிக்கொண்டு எட்டிப் பார்த்தபோது, மூன்று மாடிகளைக் கொண்ட புதிய கட்டடமே பாதுகாப்பானதாகத் தோன்றியது. ஒரு மாதத்திற்கு முன்புதான் அதன் அடித்தளம் இடப்பட்டது. அப்போது அது எந்தப் பயன்பாட்டுக்காக என்பதென்பது எங்களுக்குத் தெரியாது. எச்சரிக்கையாக எடுத்துவைத்த சில உடைகளைப் பையில் போட்டுக்கொண்டு அந்தக் கட்டடத்தின் மூன்றாவது மாடிக்கு ஓடினோம்.
நாங்கள் தங்கியிருந்த அறைகள் அனைத்தும் வெள்ளத்தில் முழுகி விட்டன. முதல் மாடி முழுவதுமாக நீரில் மூழ்கியது. ஒரு நாள்... இரண்டு நாள்... மூன்றாவது நாள் நிலைமை சற்று சீரானதாகத் தோன்றியது.
வெள்ளம் குறைந்த பிறகு முதலில் நான் கண்டது நாய்கள், பாம்புகள், கழிவுகள். பின்னர்... மனிதப் பிணங்கள். லாரிகளில் குப்பையை வாரி எடுப்பது போல, மனித உடல்களை எடுத்துச் செல்கிறார்கள் என்பதைக் கண்டதும் நெஞ்சு உருகியது. ஒன்று, இரண்டு அல்ல... ஆயிரக்கணக்கில். அந்தச் சூப்பர் சைக்லோனில் 15,000க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோனது.
வாழ்வு அனுபவம் .. நீண்ட நடைப் பயணம் ...ஹெலிகாப்டர் இட்ட உணவுப் பொட்டலம்... என் காலில் செருப்பு இல்லை, ஒரே ஒரு சட்டை, ஒரு பனியன் - அந்த உடையிலேயே வேன், பேருந்து, ரயில் என்று பல முறை மாறி மாறிப் பயணித்து, இறுதியாகப் புதுச்சேரிக்கு உயிருடன் வந்து சேர்ந்தேன். அன்பே சிவம் திரைப் படம் என் வாழ்வின் பல அனுபவங்களைத் திரையில் கண்டேன்.
சற்றே சிந்தித்துப் பார்ப்போமே… ஒரு சில மாதம் முன் அந்த மூன்று மாடிக் கட்டடம் கட்டப்படவில்லை என்றால்? அல்லது அந்தச் சூப்பர் சைக்லோன் சில மாதங்கள் முன் வந்திருந்தால்? நானும் அந்த 15,000க்கும் மேற்பட்ட உயிர்களில் ஒன்றாக இருந்திருப்பேனா?
இன்று, நான் மெக்கானிக்கல் துறையையே வேண்டாம் என்று கம்ப்யூட்டர் துறையில், அமெரிக்காவில் ஒரு தொழில்நுட்ப வேலையில் இருப்பது, அதுவே இந்த அனுபவத்தின் பின் திரை மாற்றங்கள். 1999 ஓடிசா சூப்பர் சைக்க்லோன் என் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. அதுபோல், ஏர் இந்தியா விமான விபத்தில் 11A இருக்கையில் இருந்த நபரின் வாழ்வும் மாறிவிடும். உயிரிழந்த அனைவருக்கும் என் ஆழ்ந்த அஞ்சலிகள்.
- புதுவை முருகு