
இந்தியாவில் நலிந்தவர்களுக்கு உதவ வேண்டி அமெரிக்காவில் பல இந்திய அமைப்புகளும், இயங்கி வருகின்றன. சேவையை ஊக்குவிக்கவும், இளமையில் நற் செயல்களில் ஈடுபட வைக்கவும் அமெரிக்கா அரசாங்கமும் முழு ஒத்துழைப்பும் நல்கி வருகிறது. சேவையில் ஈடுபடும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி கலூரிகளில் ஊக்க மதிப்பெண்ணும் கொடுக்கிறது என்பது விஷேச தகவல்.
அமெரிக்கா என்றாலே பணக்கார நாடு. அங்கு ஏழைகள் இல்லை--; வறுமையில் வாடுபவர்கள் இல்லை என்கிற எண்ணம் பொதுவாக இருக்கிறது. அது சரி என்று ஏற்பதற்கில்லை. அங்கு பணம் கொட்டுகிறது-- சொகுசு என்பதெல்லாம் வெறும் மாயை.! பணம் கொடுக்கிறமாதிரி கொடுத்து எல்லாவற்றையும் அங்கேயே செலவழிக்க வைத்து விடுவது அவர்களது சாமார்த்தியம்.
நம்மூரில் அடிமட்டத்தில் ஒரு பிரச்சனை என்றால், அக்கம் பக்கம் புரட்டி.. அல்லது கூலி வேலைக்குப் போய் அதுவும் இல்லையென்றால் நகை நாட்டை வைத்தாவது தற்காலிகமாய் சமாளிக்கலாம். அமெரிக்காவில் வாழ்வாதாரம் என்பது கஷ்டமான ஒன்று. அதன் வறுமை என்பது சாதாரனமானது அல்ல. 'காஸ்ட்லியானது' ! நிறைய சம்பாதிக்கலாம் --சொகுசாய் இருக்கலாம் என்றுதான் அங்கு செல்கிறார்கள்.. வேலை கிடைத்து வசதி வாய்ப்புக்களுக்கு பழகினப்பின் அதில் சிக்கல் வரும்போது நிலை நிற்பு நரகமாகிவிடுகிறது.
இது தவிர வறுமை எப்படி வருகிறது?
ஆதரவற்றோர், ஆதரவு தேவைப்படும் முதியோர், வேலை இழந்தோர், மாற்றுத்திறனாளிகள், -உடல்நலம் பாதித்தோர், வேலையின்றி முறைகேடாய் நாட்டில் வசித்து வருபவர்கள், ஆதரவற்ற சிறுவர்கள், மன நலம் பாதிக்கப்பட்டோர், பாலியல் பலாத்காரத்துக்குண்டானவர்கள் என மிக அதிகம். அவைகள் வெளியே தெரிவதில்லை. விசா புதுப்பிக்க முடியாமல் முடங்கி, பதுங்கி வாழ்பவர்களும் உண்டு. சொந்த நாட்டுக்கும் போக முடியாமல் அங்கும் ஒப்பேற்ற முடியாமல் பசியில் வாடுவோரும் உண்டு.
அது தவிர தவிர கீழ் மட்ட தொழிலாளர்களும் நிறையவே இருக்கிறார்கள். அமெரிக்காவில் விசா என்பது படித்தவர்களுக்கே பிரச்சனை. அன்றாடம் காய்ச்சிகள், சின்ன சின்ன மராமத்து வேலை பார்ப்போருக்கு விசா கிடையாது. அந்த மாதிரி வேலைகளுக்கு பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்றவற்றிலிருந்து கடல் வழி எப்படியோ நுழைந்து விடுபவர்களும் இருக்கிறார்கள். அது மட்டுமின்றி பக்கத்து நாடான மெக்சிக்கோவிலிருந்து சுவர் ஏறி குதித்தும் கள்ள தோணிகளில் வருபவர்களும் அதிகம்.
எல்லாவற்றுக்கும் ஆட்கள் வேண்டும். விசா என்று கொடுக்க ஆராம்பித்தால் சமாளிக்க முடியாது. அவர்களுக்கான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தரனும். அதனால் அவர்களை அரசு கண்டுக் கொள்வதில்லை. கண்டும் காணா பாவனை. அது தவிர கட்டுமானம், சாலை விரிவாக்கம் போன்ற உடல் உழைப்பு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் கம்பனிகள் மெக்சிகோவிலிருந்து அழைத்து வருகின்றன.
அத்துடன் ஏதாவது காரணத்தால் வேலை இன்றி உணவுக்கு வாடுவோரும் உண்டு. அவர்களை அப்படியே விட்டுவிட்டால் திருடு-- பித்தலாட்டம் என முறைகேடுகளில் கிளம்பி விடுவார்கள் அதனால் அவர்களுக்கு தங்குவதற்கும் உணவுக்கும் காப்பகங்களை அரசு அமைத்திருக்கிறது. அதுமாதிரி காப்பகங்களை நடத்த கார்பரேட் கம்பெனிகளுக்கும், அனுமதி அளிக்கிறது. அதற்கு தொண்டு அமைப்புகள் உதவுகின்றன.
ஆனால் கொரோனா காரணமாக பொருளாதார பாதிப்பு ஏற்படவே கம்பெனிகள் பலவற்றுக்கும் அவற்றை தொடர முடியாத நிலைமை ஏற்பட்டது. அந்த நேரத்தில் கை கொடுத்ததும் -இப்போதும் கை கொடுத்து வருவதும் நம் இந்தியர்கள் தான்! அதுவும் பெண்கள் ! அமெரிக்கா முழுக்கவே உணவு, உடை, ஆதரவற்றோருக்கு படிப்பு வசதிகள் என பல குழுக்கள் அதிலும் குறிப்பாய் இந்திய அமைப்புக்கள் செய்து வருகின்றன.
அப்படி வர்ஜீனியா பகுதிகளில் செயலாற்றி வரும் பலரையும் நானும் பார்த்திருக்கிறேன். சாப்ட்வேர் துறையில் படித்து இந்த சேவைக்காகவே ஸ்ரீஷா மற்றும் நுபுர் ஷர்மா போன்றோர் தங்களை அர்ப்பணித்துக்கொண்டுள்ளார்கள். வாஷிங்டன் DC யின் வட வர்ஜீனியாவில் இந்த மாதிரி இல்லங்களில் உள்ளவர்களுக்கு இலவசமாய் உணவு வழங்கி வருகிறது “அன்னசுதா” மற்றும் 'GREEN BEYOND CHARITY அமைப்புகள்!.
இதற்காக பெண்கள்-- மாணவர்களை திரட்டி பல குழுக்களாக இவர்கள் செயல்படுகிறார்கள். வழங்கும் உணவும் ப்ரெஷ் ஆக இருக்கணும், இயற்கையாகவும் இருக்கணும் என்பதில் இவர்கள் தீவிரம். இதன் மூலம் நம் பாரம்பரிய இயற்கை உணவுகள், கீரைகளை வைத்து உணவு தயாரித்து ஷெல்டரில் உள்ள ஆதரவற்றவர்கள், ஏழைகள், நோயாளிகள் என வழங்கி வருகிறார்கள். தரமான சுவையான-- இலவச வீட்டு உணவு!
இதற்காகவே துளசி, வில்வா, பாரிஜாதம் சரஸ்வதி மதுங்கலி போன்ற மருத்துவ குணம் கொண்ட இந்திய மூலிகைகளை இங்கே பயிரிட்டு விற்கிறார்கள். இதன் முலம் வரும் வருமானம் பாவப்பட்டவர்களுக்கு உதவியாக திருப்பப் படுகிறது. எல்லாமே இக் குழுவினரின் வீடுகளில் அன்றாடம் அவரவர்களின் சொந்த செலவில் சமைத்து விநியோகம்.! இதில் 800 க்கும் மேற்பட்ட வாலண்டியர்களுடன் மாணவர்களும் இருக்கிறார்கள்.
அதற்கு பலத்த ஆதரவு! இந்த சேவையை அறிந்து தன்னார்வத்துடன் குடும்பம் குடும்பமாய் இணைந்து கொண்டிருக்கின்றனர். மாணவர்களின் நேரம் தகாத வழியில் திரும்பிவிடாது- அவர்களை சேவையில் ஈடுபடுத்துகிறார்கள். அவர்களும் கொடுப்பதில் பிறருக்கு உதவுவதில் உள்ள சந்தோஷத்தை அனுபவிக்கிறார்கள். கிறிஸ்துமஸ் தீபாவளி முதல் பல பண்டிகள் சமயம் ஏழைகளை சந்தித்து பரிசு பொருட்கள் விநியோகம் என்று ஆர்வமுடன் வருகிறார்கள்.
இதன் மூலம் வீட்டில் உள்ளவர்களுக்கும் மகிழ்ச்சி! அத்துடன் திருப்தியாய் பொழுது போகிறது. பெண்களுக்கு மனத் தெம்பளித்தல், வன்கொடுமை தடுப்பு, டென்னிஸ் பயிற்சி, யோகா, தியானம், இயற்கை செடி-கொடிகளை பெரிய நிலப்பரப்பில் வளர்த்தல், பசங்களுக்கு கலை- கலாச்சார போட்டிகள் என எல்லாமே ஜோர்!. இதன் மூலம் இந்திய குடும்பங்களை ஒன்றிணைப்பதுடன் இந்திய பொருள்களுக்கு மட்டுமின்றி இந்தியர்களுக்கும் மதிப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்..
அத்துடன் இந்த அமைப்புக்கள் இந்தியாவிலும் ஆதரவற்ற முதியோர்கள், பாதிக்கப்படும் பெண்கள் என்று இங்குள்ள சில அமைப்புகள் மூலம் உதவி வருவதை பாராட்டியே யாக வேண்டும்..
- -என்.சி.மோகன்தாஸ் with அபர்ணா விஜய்