/
உலக தமிழர்
/
வெளிநாட்டு தகவல்கள்
/
சட்ட விரோதக் குடியேறிகள் ( அமெரிக்கா அழைக்கிறது 4)
/
சட்ட விரோதக் குடியேறிகள் ( அமெரிக்கா அழைக்கிறது 4)
சட்ட விரோதக் குடியேறிகள் ( அமெரிக்கா அழைக்கிறது 4)
சட்ட விரோதக் குடியேறிகள் ( அமெரிக்கா அழைக்கிறது 4)
டிச 21, 2024

அமெரிக்காவுக்கு விசா வாங்கிக் கொண்டு சட்டமுறைப்படி லட்சக் கணக்கானோர் வந்து போகிறார்கள். இவர்களுக்கு எந்தவிதத் தொல்லையும் இல்லை.
ஆயினும், பல லட்சம்பேர் கனடா, மெக்சிகோ மூலமாகத் திருட்டுத் தனமாக நுழைகிறார்கள். இவர்கள் அகதிகளாக வருபவர் அல்லர். எப்படியாவது உள்ளே நுழைந்து பொருள் ஈட்டலாம் என்ற தவறான எண்ணம் இவர்களுக்குப் பலராலும் சமூக வலைத்தளங்கள், வாட்ஸ் அப் செயலி மூலமாகப் புகுத்தப்படுகிறது.
லட்சக் கணக்கில் படித்து வேலை தேடுவதற்குப் பதில், நேரடியாக உள்ளே நுழைந்துவிட்டால், எளிதில் வேலை கிடைக்கும் என்று ஏமாற்றுக்காரர்கள் வலை விரிக்கிறார்கள். கனடாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள எல்லை பல ஆயிரம் மைல்கள். காவலும் குறைவு. என்று இவர்களை நம்பி, சொத்து சுகத்தை விற்று, கனடாவுக்குச் சுற்றுலா பயணிகளாக வந்து, கடுங்குளிர் காலத்தில் (-35 0 C) அமெரிக்க எல்லைக்குப் பக்கத்தில் விடப்பட்டதால், குளிரில் உறைந்து குழந்தைகளுடன் ஒரு குஜராத்திக் குடும்பமே இறந்தது. இது செய்திகளிலும் வெளிவந்தது. சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மட்டும் 3000 இந்தியர் கனடா எல்லையிலிருந்து அமெரிக்காவுக்குத் சட்டவிரோதமாக நுழைந்துள்ளனர்.
இது இப்படியென்றால், தெற்கு எல்லையில் பாலைவனத்தைக் கடந்து வரவேண்டும். கோடைகாலத்தில் ஒருசொட்டு தண்ணீர் கூடக் கிடைக்காது. கடத்தல்காரர்கள் இவர்களின் குடும்பத்தைப் பிரித்துக் கூட போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுத்துவர். பெண்கள் பாலியல் தொந்தரவுக்கும், இன்னும் பல சொல்லக்கூடாத துயருக்கும் ஆளாகி வருகின்றனர்.
ஒரே ஆண்டில் 42 ஆயிரம் இந்தியர்கள்
சென்ற ஆண்டு 42,000 இந்தியர்கள் திருட்டுத் தனமாக மெக்சிகோ எல்லை வழியாக நுழைந்துள்ளனர். இத்தனை பேர்களில் 33,800 பேர் தனி மனிதர்கள். 7250 பேர் குடும்பம். 700 பேர் தக்க துணையில்லாத சிறுவர், வயதுக்கு வராதவர்.
இப்படிச் சட்டவிரோதமாக வரும் இந்தியரில் பெரும்பான்மையர் கைதாவதைத் தவிர்ப்பதற்காக, அமெரிக்கா நுழைந்தவுடன் எல்லைக் கண்காணிப்பு அதிகாரிகளிடம் தங்களை ஒப்புவித்து விடுவதாக பிரபல செய்தி நிறுவனம் த வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவிக்கிறது.
இப்படிச் செய்து தாங்கள் அகதிகள் என்று சொல்லலாம் என்ற நம்பிக்கைதான். ஆனால், அமெரிக்காவுக்கு இந்தியா நட்பு நாடு என்பதால், இவர்களுக்கு அடைக்கலம் கிடைப்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கும். அப்படிக் கிடைத்தாலும்கூட, சரியான வேலை கிடைக்காது. இந்தியாவில் கிடைத்த வாழ்க்கைத் தரமும் கிட்டாது. ஆகவே, சட்டவிரோதமாக நுழைந்து சொல்லொணாத் துயருக்கு ஆளாவதை இந்தியர்கள் தவிர்ப்பதே நல்லது.
இறுதியாக, இந்தியாவிலிருந்து சட்டப்படி அமெரிக்காவுக்கு வந்து வேலை செய்பவர்களின் நிலைமை பற்றி அடுத்துப் பார்ப்போம்.
- நமது செய்தியாளர் ஒரு அரிசோனன்