/
உலக தமிழர்
/
ஆஸ்திரேலியா
/
செய்திகள்
/
ஆக்லாந்தில் உபன்யாச நிகழ்ச்சி
/
ஆக்லாந்தில் உபன்யாச நிகழ்ச்சி

ஆக்லாந்தின் சரணாகதி அமைப்பினர் பிப்ரவரி 14 மற்றும் 15 ஆகிய இரண்டு தினங்களில் உ.வே.வேங்கடேஷின் உபன்யாச நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இரு தினங்களும் பால்மோரல் கம்யூனிட்டி சென்டரில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. ஆஸ்திக உபந்யாசர்களில் இளையவரான வேங்கடேஷ் ராமாயணம் மஹாபாரதம் மற்றும் பாகவதத்தை சிறந்த முறையில் ஆராய்ந்து இந்தியா மற்றும் உலக நாடுகள் முழுவதும் சென்று உபன்யாசம் செய்து வருகிறார். ஆன்மீகத்திற்கு இவர் ஆற்றும் தொண்டு இவ்வகையில் மிகவும் பாராட்டுக்குரியது.
வெள்ளியன்று 14/2/25 மாலை 6.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. வெங்கடேஷ் முதல் நாள் கம்பராமாயணத்தில் சுந்தரகாண்டம் என்ற தலைப்பில் அவருக்கே உரிய பாணியில் நகைச்சுவையுடனும் உபன்யாசம் நிகழ்த்தினார். இந்த கால சூழ்நிலைகளையும் மேற்கோள் காட்டியும் விவரித்தது ரசிக்கும்படி இருந்தது. ஸ்ரீ ராமருக்கும் ஹநுமானுக்கும் கண்ட நொடியில் ஏற்பட்ட நட்பும், சீதா ஸ்ரீலங்காவில் இருந்த நிலையையும் விவரித்த விதம் சிறப்பாக இருந்தது
ஆஞ்சநேயர் சமுத்திரத்தை அவருக்கு ஏற்பட்ட தடங்கல்களை தாண்டியதை வெகு சுவாரசியமாக கூறினார். பின்னர் இலங்கையில் சீதையைத் தேடி அலைந்தது முதல் அவரிடமிருந்து கணையாழியை பெற்றது வரை கம்பராமாயணத்திலிருந்து தொடர்ந்து முக்கிய பாடல்களை விடாமல் கூறி அவையோர்களின் கவனத்தை ஈர்த்து மிகுந்த கரவொலிகளை பெற்றார்.
மறுநாள் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் 8.30 வரை இன்றைய வாழ்வில் சனாதன தர்மத்தின் நிலை மற்றும் அதை எப்படியெல்லாம் கடை பிடிக்கலாம் என்று ராமாயணம், பாகவதம் மற்றும் பகவத் கீதையிலிருந்து மேற்கோள் காட்டி அதன் நெறிகளை திறம்பட விளக்கினார். நிறைவாக வேங்கடேஷின் உபன்யாசம் சிறுவர்களையும் கவர்ந்தது என்று சொன்னால் மிகையாகாது. அனைவரும் அவருக்கு எழுந்து நின்று கரவொலி எழுப்பி பாராட்டு தெரிவித்தார்கள். அவரது உபன்யாசம் கருது மிக்கதாகவும் மிகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தது.
இரண்டு நாளும் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு வேங்கடேஷ் அவர்களின் உபன்யாசத்தை கேட்டு மகிழ்ந்தனர். இரண்டு நாட்களும் நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் மஹாப்ரசாதம் வழங்கப்பட்டது.
- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்
Advertisement