/
உலக தமிழர்
/
ஆஸ்திரேலியா
/
செய்திகள்
/
ஆக்லாந்தில் தைப்பூசம் திருவிழா
/
ஆக்லாந்தில் தைப்பூசம் திருவிழா

ஆக்லாந்தில் உள்ள ஆஸ்திக பக்த சங்கீர்த்தன சமாஜத்தின் சார்பில் தைப்பூசம் திருவிழா முருகனுக்கு அபிஷேகத்துடன் ஆரம்பித்து பக்தர்களுக்கு காவடி மற்றும் பால்குடம் நேர்த்தி கடன் செய்பவர்களுக்கு கங்கணம் கட்டும் வைபவத்துடன் ஒனேஹுங்கவில் உள்ள சாந்தி நிவாசில் தொடங்கி வைக்கப்பட்டது. 8 ஆம் தேதியன்று காலை 9 மணியளவில் பக்தர்கள் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை பால்காவடிகள் , புஷ்பக்காவடிகள் மற்றும் பால்குடங்களை பக்தியுடன் எடுத்து வந்தார்கள்.
பிறகு முருகனுக்கு முதலில் பக்தர்கள் சுமந்து வந்த பாலை அவர்கள் கையாலே ஊற்றி அபிஷேகம் செய்தபின் வேதங்கள் ஓதி முருகனுக்கு வேத விற்பன்னரால் பால், தயிர், தேன், பன்னீர், பஞ்சமிர்தம் மற்றும் விபூதி அபிஷேகம் நடைபெற்றது. அவ்வமயம் பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடியும், கந்த சஷ்டி கவசம் துதித்தும் முருகனை போற்றி இசைத்தும் வணங்கினர்.. சுமார் 200க்கும் மேலே பக்தர்கள் திரண்டு 'முருகனுக்கு அரோஹரா ' என்ற கோஷம் விண்ணை பிளந்தது என்றால் மிகையாகாது.
பெரும்பாலான பக்தர்கள் சவுத் ஆப்ரிக்கா மற்றும் பிஜி தீவை சேர்ந்தவர்கள். அவர்களில் சில பக்தர்கள் உடம்பெல்லாம் அலகு குத்திக்கொண்டு தங்கள் வேண்டுதலையை நிறைவேற்றினார்கள். சிலர் மாவிளக்கேற்றி தங்கள் பிரார்த்தனையை முடித்தார்கள். பிறகு ருத்ரம் ஜபித்தும் அர்ச்சனை மற்றும் பலவித ஆர்த்தி காண்பித்தும் முருகன் வழிபாடு மிகச்சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் அனைவரும் நெஞ்சுருக வேண்டி முருகனின் அருளை பெற்றனர். நிறைவாக பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பான உணவு வழங்கப்பட்டது.
தைப்பூசத் திருநாளாம் 11/2/2025 செவ்வாய்க்கிழமை முருகனுக்கு எல்லா விதமான அபிஷேகங்கள் செய்யப்பட்டு விசேஷ அர்ச்சனை ஆராதனை காண்பிக்கபட்டது. பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு முருகன் அருளை பெற்றனர். பக்தர்கள் அனைவர்க்கும் அன்னதானம் செய்யப்பட்டது.
- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்
Advertisement