/
உலக தமிழர்
/
ஆசியா
/
செய்திகள்
/
மலேசியா அருள்மிகு மகா மாரியம்மன் ஆலய திருக்குட நன்னீராட்டு பெருவிழா
/
மலேசியா அருள்மிகு மகா மாரியம்மன் ஆலய திருக்குட நன்னீராட்டு பெருவிழா
மலேசியா அருள்மிகு மகா மாரியம்மன் ஆலய திருக்குட நன்னீராட்டு பெருவிழா
மலேசியா அருள்மிகு மகா மாரியம்மன் ஆலய திருக்குட நன்னீராட்டு பெருவிழா
மார் 04, 2025

மலேசியாவில் சிலாங்கூர் மாநிலத்தின் பி ஜே எஸ் 1/35 பெட்டாலிங் உத்தாமா என்னும் புனித இடத்தில் அருள்மிகு மகா மாரியம்மன் என்னும் திருப்பெயருடன் திருக்கோயில் கொண்டு பேரருள் வழங்கி வரும் அன்னையின் ஆலயத்தில் தமிழ் நெறிய தெய்வத் தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது.
26.02.2025 புதன்கிழமை தொடங்கி, 02.03.205 ஞாயிற்றுக்கிழமை வரை திருக்குட நன்னீராட்டும் பெருவிழாவை திருக்கயிலாய மரபு மெய்கண்ட சன்னிதானம் திருப்பேரூர் ஆதீனம் 25ஆம் குரு மகா சன்னிதானம் திருவளர்சீர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கோவையிலிருந்து வந்து விழாவினை சிறப்பாக நடத்திக் கொடுத்தார். முனைவர் மா ஜெயப்பிரகாசம் (உதவிப் பேராசிரியர் தலைவர் வணிகவியல் துறை த. சா. ஆ. கலை அறிவியல் தமிழ்க் கல்லூரி பேரூர்), சிறப்பு வருகை தந்தார்.
தமிழ்நாட்டின் சாந்தலிங்கர் அருள்நெறி மன்றத்து அடியார்களும் மலேசிய மண்ணின் மலேசிய சுந்தரர் சிவயோக ஆசிரமத்து அடியார்களும் திருவண்ணாமலையைச் சேர்ந்த சிவத்திரு லோகேசு ஓதுவாரும் மலேசிய மண்ணின் சிவத்திரு சிவப்பிரகாசம் ஓதுவாரும் வேள்வி வழிபாடுகளை நடத்திக் கொடுத்தார்கள். சிவத்திரு ராமையா குழுவினர் மங்கல இசை வாசித்து விழாவினை சிறக்கச் செய்தனர்.
விழாவின் போது திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, இறையாணை பெறுதல், ஐம்பூத வழிபாடு, திருமகள் வழிபாடு, நிலத்தேவர் வழிபாடு என்று தொடங்கி முளைப்பாலிகை வழிபாடு, காப்பு கட்டுதல், புற்று மண் வழிபாடு, முதற்கால வேள்வி முதல் ஆறு கால வேள்விகளையும், திருமுறை விண்ணப்பம், செய்து ஆறாம் நாள் மூலிகைகள் ஆகுதியும் திருமஞ்சன ஆகுதியும் செய்வித்து அருட்கலைகளை மூலத் திருமேனிக்கு எழுந்தருள செய்து, திருக்குட நன்னீர் பெருவிழா இனிதே நடந்தது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்வில் நாலாயிரம் பேர் வரை கலந்து கொண்டு இறையருள் பெற்று அன்னதானம் உண்டு திரும்பினர். மலேசியா அரசில் அமைச்சராக இருக்கும் தத்தோ சரவணன் விழாவிற்கு வந்து சிறப்பித்தார்.
அன்னையின் ஆலய வளாகத்தில் மூத்த பிள்ளையார், முருகப்பெருமான், பைரவக் கடவுள், துர்க்கை அம்மன், ஒன்பான் கோள்களுக்கும் தனித்தனி திருக்கோயில்கள் உள்ளன. பலரது உதவியுடன் திருக்கோயில் திருப்பணி நடந்து, விழாவும் இனிதே நடந்தேறியது.
- நமது செய்தியாளர் டாக்டர் மெய்.சித்ரா
Advertisement