/
உலக தமிழர்
/
ஆசியா
/
செய்திகள்
/
கொரிய தமிழ்ச் சங்கத் தமிழர் திருநாள் கொண்டாட்டம்
/
கொரிய தமிழ்ச் சங்கத் தமிழர் திருநாள் கொண்டாட்டம்
மார் 04, 2025

தமிழர்- -கொரியர் உறவின் பாலமாக அமைந்த கொரிய தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தென்கொரியாவில் வாழும் தமிழ் உறவுகள் தமிழ்நாட்டில் பொங்கலை முடித்த கையோடு, கொரியாவின் தலைநகர் சியோல் மாநகரிலும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாது பொங்கல் நிகழ்ச்சியைக் கொண்டாடிக் களித்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழர் பண்பாட்டினை நேசிக்கின்ற கொரியர்களும் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது உள்ளபடியே தமிழர் -கொரியர் கலாச்சாரத் தொடர்பைப் பறைசாற்றும் விதமாக அமைந்திருந்தது.
கொரிய தமிழ்ச் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2025 ஆண்டிற்கான பொங்கல் நிகழ்ச்சி, சியோல் மாநகரில் சியோல் தேசிய பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவில் கொரியாவில் வாழும் தமிழர்கள் மற்றும் கொரியா நாட்டைச் சேர்ந்த பெரியவர் மற்றும் சிறியவர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பெண்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கு ஏற்றினர். கொரிய தமிழ்ச் சங்க இணைச் செயலாளர் முனைவர் செலஸ்டின்ராஜா வரவேற்றுப் பேசினார்.
சிறப்பு விருந்தினர்கள்
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக புத்தகயா ஆராய்ச்சி நிறுவனத் தலைவரும், பொமொசா அருங்காட்சியகத் துணை இயக்குநருமாகிய புத்ததுறவி தோமியொங், பேராசிரியர் இஹியொன்ஓ, இந்தியத் தூதரகம் மற்றும் சமூக விவகாரங்கள் பிரிவின் தலைவர் சு. சுரேஷ்குமார், இந்தியத் தூதரகத் துணைத் தூதர் நிஷிகாந்த்சிங் பங்கேற்றனர். புத்ததுறவி தோமியொங் தமது உரையில், தாம் இந்தியக் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டில் எப்பொழுதும் ஆர்வம் கொண்டுள்ளதாகவும், தமிழர் திருநாளாம் பொங்கலும், கொரியர்களின் சுசொக் விழாவும் கொண்டாட்ட முறையில் ஒன்றுபோல் இருப்பது தமக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.
திருவள்ளுவர் சிலை
கொரிய தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் அரவிந்தராஜா தனது தலைமை உரையில் சங்கத்தின் செயல்பாடுகளையும், எதிர்காலத் திட்டமிடல்களையும் விவரித்தார். குறிப்பாக கொரியாவில் கொரிய தமிழ்ச் சங்கம் செய்து வரும் தமிழ்ப்பணிகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான உதவிகள் குறித்து விளக்கினார். கொரியாவில் திருவள்ளுவர் சிலை அமைக்கும் திட்டத்தைப் பற்றியும் அதற்குச் செய்து வரும் பூர்வாங்க வேலைகளைப் பற்றியும் எடுத்துக் கூறினார்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்களை மகிழ்விக்கும் விதமாக காலை முதல் மாலைவரை ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும், பல்வேறு குழும விளையாட்டுப் போட்டிகளும், குலுக்கல் முறையில் தேர்வுப் பரிசுகளும் இடம் பெற்றிருந்தன. சங்கத்தால் முதன்முறையாக முன்னெடுக்கப் பெற்ற சிறப்பு நகைச்சுவைப் பட்டிமன்றம், கொரியா கலாச்சாரத்தின் தாக்கம் பரிணாமமே! பகட்டே! என்ற தலைப்பில், முனைவர் இரா. இராஜ்மோகன் தலைமையில் நடைபெற்றது.
மாணவர்களுக்குப் பரிசு
கொரிய தமிழ்ச் சங்கத்தின் 'கற்ககசடற' என்னும் இணையவழித் தமிழ் கற்றல் திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களின் கலைத்திறனை வெளிக்கொணரும் விதமாக பல்வேறு அறிவுசார் கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. குழந்தைகளுக்கு தூய தமிழ்ப் பெயரிடுவதை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழ்ப்பெயர் சூட்டப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் மேடைக்கு வரவழைக்கப்பட்டு பாராட்டுச் சான்றிதழுடன் சிறப்பிக்கப்பட்டார்கள். மாலையில் சங்கத்தின் இணைச்செயலாளர் (நிகழ்ச்சி திட்டமிடல்) சம்பத்குமார் நன்றியுரை வாசிக்க விழா இனிதே நிறைவடைந்தது.
சங்கத்தின் சார்பாக நடைபெற்ற இப்பொங்கல் நிகழ்ச்சிக்கு, கல்வியாளர்கள் மற்றும் அரசியல் ஆளுமைகள் பலர், அழைப்பிதழ் பேரில் வாழ்த்துச் செய்தியினைக் காணொளியாகவும், மடலாகவும் அனுப்பிச் சிறப்பித்தார்கள்.
நிகழ்ச்சி சிறப்புற துணை நின்றவர்கள்
இந்நிகழ்ச்சியில், விழாவுக்கான பதிவினை ஸ்ரீரங்கநாயகி, முனைவர் ராஜிஅச்சுதன், பொறியாளர் இரா. சுவாமிராஜன் , முனைவர் இராஜாமணிகண்டன் மேற்கொண்டனர். பெரியவர்களுக்கான கலை நிகழ்ச்சிகளை பிரியா, விபின் முத்துசாமி வழிநடத்தினர். சிறார்களுக்கான நிகழ்ச்சிகளுக்கு முனைவர் பூங்கவிதைவடிவு, விஜயலட்சுமிபத்மநாபன், பூ.சுசித்ரா, சுமித்ரா, அபர்ணா, வைஷ்ணவி ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்பட்டு ஒழுங்குபடுத்தும் பணியைச் செவ்வனே செய்தனர். உணவு மற்றும் பயண ஏற்பாட்டினை முனைவர் பீட்டர் ஜெரோம், ஆறுமுகம்பாரதி மேற்கொண்டனர். நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாக பிரியதர்ஷினிஆனந்த்குமார், விபின்ஜியோ செயல்பட்டனர். பின்னணி இசைப்பதிவு, புகைப்படம், மற்றும் காணொளி வெளியிடுதலுக்கு மைக்கேல் இம்மானுவேல், பொறியாளர் ஆனந்த் உதவி புரிந்தனர். நிகழ்ச்சியின் பொது மேலாண்மையை முனைவர் செல்வசர்மா, முனைவர் மகேந்திரபிரபு, முனைவர் மருதுபாண்டி, முனைவர் வெங்கடேஷ், ரூகேஷ், ஜெகன் ஆகியோர் செய்தனர்.
- தினமலர் வாசகர் முனைவர் அரவிந்த ராஜா, தலைவர், கொரிய தமிழ் சங்கம்
Advertisement