
ராகைன் — இயற்கையும் அமைதியும் கலந்த மியான்மரின் ஒரு மீனவக் கிராமம்.
2017ஆம் ஆண்டு வரை, இங்கு வாழ்க்கை சுமுகமாகத் தொடர்ந்தது. ஆனால் அந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதம், துப்பாக்கிச் சத்தம் அந்த அமைதியைச் சிதறடித்தது.
அதற்கு முன், ரோஹிங்கியா முஸ்லீம் சமூகத்தினர் பல நூற்றாண்டுகளாக ராகைன் மாநிலத்தில் வாழ்ந்தாலும், மியான்மர் அரசு அவர்களை குடிமக்களாக ஏற்றுக்கொள்ளவில்லை. “அவர்கள் வெளிநாட்டவர்கள்” என்ற பெயரில், அவர்களை உரிமையற்றவர்களாக மாற்றியது. வேலை, கல்வி, சுகாதாரம் என அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன. அவர்கள் செல்லும் இடம், பேசும் உரிமை எல்லாமே கட்டுப்படுத்தப்பட்டன.
இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக மக்கள் போராடத் தொடங்கிய போது, அரசு மற்றும் ராணுவம் கொடிய வன்முறையில் ஈடுபட்டது. கிராமங்கள் எரிக்கப்பட்டன, ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர், பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
ஒரு நாள், இன்னும் குணமடையாத நிலையில் இருந்தபோதும், மியான்மரின் வேறு ஆயுதக் குழு கிராமத்தை மீண்டும் சூழ்ந்தது. இந்த முறைவும் சூறையாடல், பாலியல் வன்முறை நடந்தது. இந்த முறை எப்பிற்கு மீதமிருந்தது உயிர் மட்டுமே.
இந்த சம்பவங்கள் உலகின் மிக மோசமான இனப்படுகொலைகளில் ஒன்று என்று ஐ.நா. கண்டித்துவிட்டு தனது கடமையை முடித்துக் கொண்டது.அதுதான் அவர்களால் முடிந்தது. பாதுகாப்பான வாழ்க்கை அங்கு சாத்தியமில்லை என்பதால், பத்துலட்சத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியர்கள் அகதிகளாக பங்களாதேஷ் நோக்கி தப்பினர். அவர்களில் ஒருத்தி தான் எப்.
இன்று, உலகின் மிகப்பெரிய அகதி முகாமாக விளங்கும் குடுபாலோங் முகாமில், எட்டு ஆண்டுகளாக எப் வாழ்கிறாள் — பிளாஸ்டிக் மூடிய கூடாரம், குறைந்த உணவு, சுத்தமான தண்ணீர் இல்லாத சூழல். ஆனாலும், இங்கே அவளை யாரும் தீண்டுவதில்லை, சீண்டுவதில்லை — அது ஒன்றுதான் ஒரே ஆறுதல்.
'என் உள்ளமும் உடலும் இரண்டு முறை உருக்குலைந்தபோதும், நான் உயிரோடு இருந்தேன். இருக்கிறேன்' என்று அவர் கூறும்போது, வலியுடன் கூடிய வறட்சியான கண்களில் கண்ணீர். அந்த கண்ணீரில் பட்ட காயங்களின் தீராத வலி தெரிகிறது.
(இன்று ரோஹிங்கியாக்கள் இடம் பெயர்ந்த தினம்).
— எல். முருகராஜ்