PUBLISHED ON : ஆக 01, 2025 12:00 AM

கலிஃபோர்னியாவின் சோனோமா கவுண்டி திருவிழா கடந்த சில நாட்களாக களை கட்டியிருந்தது.காரணம், உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றுள்ள உலகின் அழகற்ற நாய் போட்டி தான்.
“அழகற்ற நாய் போட்டி” என்ற வார்த்தையைப் பார்த்ததும் - இது தவறல்லவா? அந்த அழகற்ற ஜீவன்களை மேடையேற்றி கேலிப்பொருளாக்கும் தன்மையல்லவா? - என்று மேலோட்டமாக நினைக்கத் தோன்றும்.ஆனால், உண்மையில் இது பாசத்தையும், அன்பையும், தனித்துவத்தையும் வெளிப்படுத்தும் போட்டியாகும்.
1970களில், ஐந்து-ஆறு நாய்களுடன் சாதாரணமாகத் தொடங்கிய இந்தப் போட்டி, இன்றைக்கு நூற்றுக்கணக்கான நாய்களும், ஆயிரக்கணக்கான பார்வையாளர்களும் கலந்து கொள்கின்ற சர்வதேச விழாவாக மாறியுள்ளது.இந்தப் போட்டியை காண, பல நாடுகளில் இருந்தும் பயணிகள் தேதியை குறித்துக் கொண்டு வருகிறார்கள்.
இந்த ஆண்டு, “பெட்டூனியா” என்ற சிறிய வயதான நாய், தனது உரிமையாளரின் அன்பும், தனித்துவமான முகபாவங்களும் காரணமாக முதல் பரிசை பெற்றது. வயதும் உடல் அமைப்பும், போட்டியாளர்களிடையே “பெட்டூனியா” வை வித்தியாசமாக காட்டின, மேடையில் நம்பிக்கையுடன் நடந்து நீதிபதிகளின் மனதை கவர்ந்து பரிசைப் பெற்றாள்.தொடர்ந்து, பல்வேறு நாய்கள் பலவிதமான பரிசுகளைப் பெற்றன. நாய்களை விட, நாய்களின் உரிமையாளர்களே அதிக மகிழ்ச்சி கொண்டனர்.
போட்டியின் முக்கிய அம்சமே - வெற்றிக்கு தேவையானது அழகு அல்ல, தனித்துவமே என்பதுதான்.அழகின் அளவுகோல் அனைவருக்கும் ஒன்றாக இருக்க வேண்டியதில்லை.உண்மையான அழகு - அன்பிலும், பாசத்திலும் இருக்கிறது.
இது நாய்களுக்கு மட்டுமல்ல, நம்மில் பலருக்கும் பொருந்தும் அல்லவா?
— எல். முருகராஜ்
.