PUBLISHED ON : ஆக 01, 2025 12:00 AM

பத்திரிகையாளர்கள் என்றால், நிகழ்வுகளைப் பதிவு செய்து, உண்மையை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் ஒளிவிளக்குகள். அவர்கள் சமுதாயத்தின் கண்கள் மற்றும் காதுகள். ஒரு அரசியல் பேச்சுவார்த்தையோ, ஒரு சமூக பிரச்சினையோ, அல்லது அண்டை நாட்டின் எல்லையில் நடக்கும் ராணுவ மோதலோ — எது நடந்தாலும், அதை வெளிப்படையாக உலகிற்கு தெரிவிக்க அவர்கள் முன் வருகின்றனர்,
போர் நிலம் அபாயகரமான இடம். அங்கு வெடிக்கும் குண்டுகளுக்கும், பாயும் தோட்டக்களுக்கும் இடையில், பத்திரிகையாளர் தனது கேமரா அல்லது குறிப்பேட்டுடன் நிற்பார். அவரது ஆயுதம் — உண்மை. அவருக்கு பாதுகாப்பு ஆடை, தலைக்கவசம் இருந்தாலும், அது எப்போதும் உயிர் காக்கும் என்று உத்தரவாதமில்லை.
பல பத்திரிகையாளர்கள், செய்தி சேகரிக்கும் வேலையில் உயிரை இழந்துள்ளனர்.இன்றும் அப்படித்தான்.
அல் அஜீரா பத்திரிகையின் மூத்த பத்திரிகையாளர்களான அனஸ் ெஷரீப் மற்றும் மொகமத் உள்ளீட்ட ஐந்து பேர் காசா நகரின் ஷிபா மருத்துவமனை அருகே செய்தி சேகரிக்க சென்றிருந்த போது இஸ்ரேல் விமான தாக்குதலில் பலியாகியுள்ளனர்.போர்க்களம் என்பது பாதுகாப்பான இடமல்ல அது மரணத்தின் நிழலில் வாழும் பகுதி என்பது தெரிந்திருந்தாலும், மனிதர்களின் துயரக் குரலை உலகம் கேட்கச் செய்வதற்காக கேமரா, மைக்ரோஃபோன், குறிப்பேடு ஆகியவற்றுடன் நின்றிருந்தார்கள். காசா நகரின் குண்டுவெடிப்புகளையும், துப்பாக்கிச் சத்தங்களையும்,அப்பாவி மக்களின் உயிரிழப்புகளையும் உலகிற்கு செய்தியாக சொல்லிக் கொண்டே இருந்தவர்கள் இன்று அவர்களே செய்தியாகிவிட்டனர்.
அவர்கள் கேமரா பிடித்திருக்கும் கைகள், அடுத்த நொடி உயிரற்றதானது.பையில் வைத்திருந்த குறிப்பேடுகள் ரத்த சகதியில் உறைந்துவிட்டது.
உண்மைக்கு தரப்பட்ட அதிகபட்ச விலை பத்திரிகையாளர்களின் உயிராகவும் இருக்கிறது.
-எல்.முருகராஜ்