மருத்துவர்களுக்கு திடீர் மாரடைப்பு வரக் காரணம் என்ன? விளக்குகிறார் பிரபல மருத்துவர்
மருத்துவர்களுக்கு திடீர் மாரடைப்பு வரக் காரணம் என்ன? விளக்குகிறார் பிரபல மருத்துவர்
PUBLISHED ON : ஆக 29, 2025

சென்னை: சென்னையைச் சேர்ந்த இருதய சிறப்பு மருத்துவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மருத்துவர்கள் மாரடைப்பால் அதிகம் பாதிக்கப்படுவது ஏன் என்பது குறித்து பிரபல மருத்துவர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த 39 வயதான இருதய சிறப்பு நிபுணர் கிரேட்லின் ராய் என்பவருக்கு, மருத்துவமனையில் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்த சக மருத்துவர்கள் சிபிஆர் உள்பட உடனடி மருத்துவ உதவிகளை வழங்கினர். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது மருத்துவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருதய நிபுணரான இளம் மருத்துவர் ஒருவருக்கே இந்த நிலைமையா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், ஹைதராபாத்தில் பயிற்சி பெற்று, சிஎம்சி வேலூர் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் சுதீர் குமார், மருத்துவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணத்தையும், அதில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் முறையையும் விளக்கியுள்ளார். 'மருத்துவர் ஒருவரே மாரடைப்பால் உயிரிழக்கும் போது, அது பிற மருத்துவர்களின் இருதய ஆரோக்கியத்தை வலியுறுத்தும் அழைப்பாக பார்க்க வேண்டும்' என்றும் அவர் கூறியுள்ளார்.
மருத்துவர்கள் மாரடைப்பால் பாதிக்கப்படுவதற்கான காரணங்கள்;
நீண்ட, நிலையற்ற பணி நேரம்: தொடர்ச்சியான தூக்கக் குறைபாடு மற்றும் உடலின் இயற்கை கடிகார சுழற்சியில் இடையூறு
அதிக மன அழுத்தம்: நோயாளிகள் மற்றும் குடும்பத்தினரின் அழுத்தம், மருத்துவ விதிகள் பற்றிய கவலைகள்
உடல் செயல்பாடு இல்லாத வாழ்க்கை முறை: அறுவை சிகிச்சை அறையில் நீண்ட நேரம் நிற்பது அல்லது வெளிநோயாளிகள் பிரிவில் நீண்ட நேரம் உட்கார்தல், பணி காரணமாக உடற்பயிற்சி தவறவிடுதல்
ஆரோக்கியமற்ற உணவு வழக்கங்கள்: முறையான உணவு நேரங்களை கடைபிடிக்காதது, மருத்துவமனை கேன்டீன் உணவு, டீ மற்றும் காபி அதிகளவு குடித்தல்
முன்னெச்சரிக்கை மருத்துவ முறைகளை புறக்கணித்தல்: பல மருத்துவர்கள் தங்கள் சொந்த ஆரோக்கிய பரிசோதனைகளை தள்ளிப்போடுவதும், ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை புறக்கணிப்பதும்.
மனச்சுமை: வேலைசோர்வு, மனச்சோர்வு மற்று உடல் சோர்வு இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.
புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதலால் அதிக அளவில் இருதய பாதிப்பு வருகிறதுமருத்துவர்கள் என்ன செய்ய வேண்டும்?
வழக்கமான உடல் பரிசோதனை; ரத்த அழுத்தம், கொழுப்பு, சர்க்கரை நோய், இசிஜி (ECG) மற்றும் தேவைப்படும் போது மன அழுத்த சோதனை ஆகியவற்றுக்கான வருடாந்திர பரிசோதனை.
தூக்கத்திற்கு முன்னுரிமை: குறைந்தது 7 மணி நேரம் தூங்க முயற்சிக்கவும். அறுவை சிகிச்சை நேரம் போலவே இதற்கும் முக்கியத்துவம் கொடுக்கவும்.
தினசரி உடற்பயிற்சி: குறைந்தது 30 நிமிடம் வேகமாக நடத்தல், ஜாக்கிங் அல்லது சைக்கிள் ஓட்டுதல் ஆகியவை கட்டாயமாக்கப்பட வேண்டும்.
உணவு: சமச்சீரான உணவு, வறுத்த உணவுகள் மற்றும் சர்க்கரை சாப்பிடுவதை குறைத்தல்.
மன அழுத்தம் போக்க: யோகா, தியானம், சுவாசப் பயிற்சிகள் அல்லது மன ஆரோக்கியத்தை புதுப்பிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டும்
புகையிலை மற்றும் மதுவை முழுமையாக தவிர்ப்பது மிக அவசியம்.
ஆதரவான சூழல்: சக மருத்துவர்களுடன் நேரத்தை செலவிடுவது மற்றும் மன ஆரோக்கிய பரிசோதனைகள், வேலைசோர்வு மற்றும் மனச்சோர்வை சமாளிக்க உதவும்.
உடலை கவனியுங்கள்: நெஞ்சு அசவுகரியம், காரணமில்லாத சோர்வு அல்லது மூச்சுத் திணறல் ஆகியவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது
விடுமுறை: இடைவேளைகள் எடுப்பது, விடுமுறைக்குச் செல்வது, குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவழிப்பது அவசியம்
இல்லை என்று சொல்ல கற்றுக்கொள்ளுங்கள்: நீங்கள் அதிக வேலையில் இருந்தால், இல்லை என்று சொல்ல கற்றுக்கொள்ளுங்கள். குறிப்பிட்ட சில அறுவை சிகிச்சைகள் மற்றும் வெளிநோயாளிகளுக்கு ஆலோசனைகளை உடனுக்குடன் வழங்குவது அவசரமானவை அல்ல, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.