PUBLISHED ON : அக் 25, 2026

நளினி, மதுரை: கர்ப்பிணிகள் உணவுப்பழக்கம் எப்படி இருக்க வேண்டும். பிரசவத்திற்கு பிறகு பால் போதவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?
கர்ப்ப காலத்தில் சர்க்கரைநோய், ரத்தஅழுத்தம், ரத்தசோகை வரும் வாய்ப்பு அதிகம். எனவே தொடர் கண்காணிப்பு, பரிசோதனை அவசியம். காய்கறி, முட்டை, பால், பழங்கள் அதிகமாகவும் இனிப்பு, கிழங்கு, எண்ணெய் பதார்த்தங்கள் குறைவாக உட்கொள்ள வேண்டும். வயிற்றில் குழந்தை பெரிதாக வளர்ந்து, ஆப்பரேஷன் தேவைப்படுமோ என பயந்து உணவைக்குறைக்கக் கூடாது. சத்தான சரிவிகித உணவு நல்லது.
உப்பைக்குறைத்து, புரோட்டின் அதிகம் எடுப்பதும் அவசியம். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். எந்த அம்மாவுக்கும் தாய்ப்பால் போதவில்லை என்ற குறை வராது. மனம் தான் காரணம். குழந்தை பிறந்தவுடன் சீம்பால், சொட்டு சொட்டாக தான் வரும். இந்த அளவு பால் குழந்தைக்கு போதாது என சிலர் நினைப்பர். குழந்தை மார்பில் உறிஞ்சும் போது பால் தானாக சுரக்க ஆரம்பிக்கும். இது தான் இயற்கை.
சர்க்கரை நோயாளிகள், உடற்பருமன் உள்ளவர்கள், தாமத வயதில் குழந்தை பெற்றவர்களுக்கு சிலநேரங்களில் தாய்ப்பால் சுரப்பதில் பற்றாக்குறை ஏற்படலாம். அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்கள் திட உணவு சாப்பிட ஆரம்பித்த பின் பால் நன்றாக சுரக்க ஆரம்பிக்கும். சுகப்பிரசவமோ, அறுவை சிகிச்சையோ குழந்தை வெளியே வந்தவுடனேயே தாய்ப்பால் கொடுக்க வேண்டும். எவ்வளவு சீக்கிரம் குழந்தைக்கு பால் கொடுக்க ஆரம்பிக்கிறீர்களோ அவ்வளவுக்கு இயல்பாக பால் சுரக்க ஆரம்பிக்கும். மிக அரிதாக பால் சுரப்புக்கென ஒரு சிலருக்கு மருந்துகள் தரவேண்டியிருக்கும். குழந்தை மீண்டும் மீண்டும் அழுவதால் பால் போதவில்லை என நினைத்து ஒருசிலருக்கு மனச்சோர்வு, மனஅழுத்தம் ஏற்படும்.
பாலுக்காக மட்டும் குழந்தை அழுவதில்லை. அழுவது ஒன்றே குழந்தைக்கு தெரிந்த மொழி. சிறுநீர், மலம் கழித்திருக்கலாம், குழந்தை படுத்திருக்கும் நிலையோ கையில் வைத்திருக்கும் நிலையோ அசவுகரியத்தை தந்திருக்கலாம். உடல் சூடு, குளிர்ச்சி எதுவாகவும் இருக்கலாம். காரணத்தை நாம் தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
- டாக்டர் ரேவதி ஜானகிராம், மகளிர் மற்றும் மகப்பேறு நிபுணர், மதுரை.
கே.மஞ்சுளா, போடி: சூடான டீ, காபி, குளிர்பானம் குடிக்கும் போது திடீரென பல் கூச்சம் ஏற்படுகிறது. இது எதனால் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு கூறுங்கள்?
பல் தேய்மானம் ஏற்பட்டால் பல் கூச்சம் ஏற்படும். இது வயதானவர்களுக்கு ஏற்படலாம். பல் துலக்கும் போது பிரஷால் அழுத்தி தேய்ப்பதாலும், தரமற்ற பிரஷ்களால் துலக்குவதால் பல் தேய்மானம் ஏற்படுகிறது. தேவையற்ற நேரங்களில் நொறுக்கு தீனி சாப்பிட கூடாது. இதனால் பல் இனாமல் தேய்ந்து போகும். பல் சொத்தை இருந்தாலும் பல் கூச்சம் ஏற்படும்.
பல் கூச்சத்தை சரி செய்ய பேஸ்ட் உள்ளது. மிகவும் தேய்மானம் ஏற்பட்டால் கவர் போட்டுக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு பல் முளைத்த பிறகு பல் துலக்க பழக்கி விட வேண்டும். அதிக பட்சம் 2 முதல் 3 நிமிடம் பல் துலக்கினால் போதும். வெறும் கையால் துலக்குவதை விட பிரஷால் துலக்கினால் பல் இடுக்குகளை சுத்தம் செய்ய முடியும். சாப்பிட்ட பின் ஒவ்வொரு முறையும் வாயை கொப்பளிக்க வேண்டும். காலை, இரவு பல் துலக்க வேண்டும். உணவு பல் இடுக்கு, ஈறுகளில் சிக்கி இருந்தால் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதிக அளவில் பல் தேய்மானம் ஏற்பட்டு இருந்தால் பல் டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
- டாக்டர் கே. கவிதா, பல் மருத்துவ நிபுணர், போடி
சுப்புராஜ், சிவகங்கை: எனக்கு வயது 37. அடிக்கடி தோள்பட்டை வலி எவ்வாறு சரிசெய்வது?
அதிக வேலை செய்வது, முறையான இருக்கையில் அமராமல் கணினியை பார்த்து பணி செய்வது, துாங்கும் போது கைகளை தலைக்கு வைத்து துாங்குவது, டூவீலர் ஓட்டுவது போன்ற காரணத்தால் கூட தோள்பட்டை வலி உண்டாகும். அடிக்கடி உபயோகப்படுத்தக்கூடிய கையில் தோள்பட்டை வலி வந்தால் அவற்றிற்கு முறையான உடற்பயிற்சி மூலம் சரி செய்து விடலாம். 30 வயதை கடந்தவர்களுக்கு இது அதிகமாக ஏற்படும்.
சாதாரண தோள்பட்டை வலியை ஆரம்பத்தில் பிசியோதெரபி மூலம் சரி செய்யலாம். விளையாட்டுத்துறையில் உள்ளவர்களுக்கு அதிகமாக தோள்பட்டை வலி வருகிறது. நாள்பட்ட தோள்பட்டை வலி இருந்தால் உடல் பரிசோதனை செய்ய வேண்டும். தோள்பட்டை வலி வயிற்று புண்ணாலும், இதயத்தில் உள்ள பிரச்னையாலும் கூட ஏற்படும். வலி அதிகரித்தால் டாக்டரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
- டாக்டர் நபிஷாபானு, வட்டார மருத்துவ அலுவலர், அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், பிரான்மலை
கி.குமரகுரு, ராஜபாளையம்: எனக்கு 35 வயதாகிறது. சில ஆண்டுகளாக கடினமான பொருட்கள் மெல்லும் போது பற்களில் சிறு பகுதிகள் உடைவதுடன் பெரும்பாலான பற்கள் சிதைந்து கூர்மையாக மாறி நீட்டியபடி உள்ளன. இதனால் உணவு மெல்லும் போது வாய் உட்பகுதியில் காயம் ஏற்படுகிறது. இதே நிலை நீடித்தால் உடலுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா?
சொத்தையான, உடைந்த பற்கள் ஒன்றும் செய்யாது என மருத்துவம் பார்க்காமல் விடுவது தவறு. அவை நாளடைவில் சீழ் பிடித்து கட்டி போன்று உருவாகி பிரச்னைகளை ஏற்படுத்தி விடும். சொத்தை, உடைந்த பற்களை கண்டிப்பாக அகற்றிவிட வேண்டும். பற்கள் உடைந்து வாயின் உள்ளே ஏற்படும் தொடர் காயங்கள் கேன்சர் வரை பாதிப்பை கொண்டு சென்று விடும். டாக்டரிடம் ஆலோசித்து சேதமான பல் காப்பாற்றும் நிலை இருந்தால் வேர் சிகிச்சை கொடுத்து பல் அடைப்பு, செயற்கை மூடி பொருத்துவது அவசியம்.
- டாக்டர் தினேஷ் பாபு, பல் மருத்துவர், ராஜபாளையம்
