
ஹேமலதா, மதுரை: ஹோமியோபதியில் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய்க்கு மருந்து உள்ளதா. ஹோமியோபதி குணப்படுத்தும் முக்கியமான நோய்கள் எவை?
ஹோமியோபதியில் உயர் ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய், உயர் ரத்த கொலஸ்ட்ராலுக்கு பக்கவிளைவுகளற்ற நல்ல மருந்துகள் உள்ளன. இந்நோய்களுக்கு பல ஆண்டுகள் ஆங்கில மருந்து எடுத்துக்கொண்டவர்கள் ஹோமியோபதியில் சிகிச்சை பெற விரும்பினால் ஆங்கில மருந்து உட்கொள்வதை நிறுத்தக்கூடாது. எற்கனவே உட்கொள்ளும் ஆங்கில மருந்தோடு சேர்த்து ஹோமியோபதி மருந்தையும் ஆரம்பிக்க வேண்டும். அடுத்து வரும் மாதங்களில் டாக்டரின் ஆலோசனைப்படி ஆங்கில மருந்தின் வீரியத்தை குறைத்து உடல்நலம் தேறுவதற்கு ஏற்ப அதை நிறுத்தலாம்.
- டாக்டர் என்.ஆர்.ஏ.மதுமிதா, ஹோமியோபதி மருத்துவ நிபுணர், மதுரை
ஆர்.கண்ணன், வேடசந்துார்: முதுகு வலி எதனால் ஏற்படுகிறது. அதற்கு தீர்வு என்ன?
தசைகளில் ஏற்படும் பிடிப்பு, சுளுக்கு, ரத்தக் கட்டு, நீண்ட நேரம் உட்கார்ந்து இருத்தல் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களாலும், எலும்பு தேய்மானம், ரத்த சோகை ஆகியவைகளினாலும் முதுகு வலி ஏற்படுகிறது. முதுகு சவ்வு (டிஸ்க் தட்டுகள்) வீங்குவதாலும், கிழிந்து விடுவதாலும் முதுகெலும்பில் உள்ள மூட்டுக்கள் பாதிப்பதாலும் ஏற்படுகிறது. சில சிறுநீரக கற்கள், அலர்ஜி, வயிற்றுப்புண் ஆகியவற்றாலும் ஏற்படுகிறது.
- டாக்டர் எஸ்.லோகநாதன், தலைமை மருத்துவர், அரசு மருத்துவமனை, வேடசந்துார்
எல்.ராமர், கூடலுார்: எனக்கு 40 வயது ஆகிறது. மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறேன். இதற்கு காரணம் மற்றும் தீர்வு கூறுங்கள்?
வயது முதிர்வில் மூட்டு வலி வருவது இயற்கையே. ஆனால் கடுமையான வேலை மற்றும் கூடுதலான நடை பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு சிறு வயதிலும் மூட்டு வலி வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இதை மசாஜ் மற்றும் நீராவி குளியல் மூலம் ஆயுர்வேத முறையில் குணப்படுத்த முடியும். மஞ்சள், அஸ்வகந்தா, இஞ்சி போன்ற மூலிகை வலியை போக்கவும் வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது. கடுமையான உடற்பயிற்சிகளை தவிர்த்து மிதமான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் உணவு வகைகளை சாப்பிட வேண்டும். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதை தவிர்க்க வேண்டும்.
- டாக்டர் ஜினு, ஆயுர்வேத மருத்துவர், குமுளி
எல்.கிருஷ்ணன், உச்சிபுளி: எனக்கு 40 வயதாகிறது. ஆசைப்பட்டு பிரியாணி, மட்டன், சிக்கன் போன்ற உணவுகளை சாப்பிட்டால் வயிறு உப்புசமாகி புளித்த ஏப்பம் அடிக்கடி வருகிறது. இதற்கு என்ன காரணம், எப்படி சரிசெய்வது?
செரிமானக்கோளாறு தான். ஆரம்ப நிலையில் உள்ளீர்கள். பொதுவாக உணவை அவசர அவசரமாகவும், நன்றாக மென்று சாப்பிடாமல் அப்படியே விழுங்கி விடுகின்றனர். அதாவது வாயில் உமிழ்நீர் மூலம் நடைபெற வேண்டிய செரிமான வேலையை அப்படியே வயிற்றுக்குள் தள்ளிவிடுவதால் ஏற்படும் பிரச்னைதான் வயிறு உப்புசமாகி விடுவது, புளித்த ஏப்பம் வருவதற்கு காரணம். இதை ஆரம்ப நிலையில் சரி செய்து விடலாம். பசிக்கும் போது சாப்பிட வேண்டும். வயிறு முட்ட சாப்பிடக் கூடாது. நமது உடல் உழைப்பிற்கு ஏற்றவாறு உணவு உட்கொள்ள வேண்டும். அடிக்கடி புளிச்ச ஏப்பம் உள்ளவர்கள் இருவேளை உணவும், ஒரு நேரம் பழங்கள், பச்சை காய்கறிகள் சாப்பிடலாம். இல்லை நன்றாக சாப்பிட விரும்புகிறோம் என்றால் இருவேளை அதாவது காலை 9:30 மணிக்குள் மற்றும் மாலை 5:30 முதல் இரவு 7:00 மணிக்குள் என இருவேளை மட்டும் சாப்பிடலாம். உமிழ் நீர் சுரப்பு பிரச்னை மற்றும் அல்சர் அதாவது வயிற்றில் புண் இருந்தால் கட்டாயம் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- டாக்டர் எல்.டி.சர்மிளா, யோகா, இயற்கை மருத்துவ வாழ்வியல் மையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், புதுமடம்
ச.சுஜாதா,சிவகங்கை: தொடர் இருமல் எதனால் ஏற்படுகிறது. எவ்வாறு சரி செய்வது?
சாதாரணமாக துவங்கும் இருமல் சில வேளையில் மயக்கத்தை ஏற்படுத்தும் அளவு தீவிரமாகும். இதை கட்டுப்படுத்தவில்லை என்றால் தலைவலி, குடல் இறக்கம் எனப்படும் ஹெர்னியா போன்ற பாதிப்புக்கு வழி வகுக்கும் .
பொதுவாக ஜலதோஷம், அலர்ஜியினால் ஏற்படும் இருமலே அதிகம். ஜலதோஷ இருமல் முதலில் சளி இன்றி துவங்கி பின் சளி பாதிப்பு ஏற்படும். இது 5 முதல் 7 நாட்கள் வரை இருக்கலாம். மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல் போன்ற பாதிப்பு இருக்கும்.
ஆஸ்துமா, இருமல் சளியின்றியோ, சளியுடனோ இருக்கலாம். அதிகாலையில் நெஞ்சு இறுக்கத்துடன் வரும் இருமலும் ஆஸ்துமாவாவின் அறிகுறியே.
சிகரெட் புகைப்பவர்களுக்கு துவக்கத்தில் லேசான இருமல் இருக்கும். நாளடைவில் தினமும் காலையில் சளியுடன் கூடிய இருமல், சளியில் ரத்தம் வருதல் பாதிப்பு ஏற்படும். படுத்தவுடன் வரும் இருமல் சைனஸ் , உணவுக் குழாய், இதய பிரச்னைகளில் ஒன்றாக இருக்கும். ஒரு வாரத்திற்கும் மேலாக இருமல் தொடர்ந்தால் நிச்சயம் டாக்டரை சந்தித்து பரிசோதனை, முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
- டாக்டர் பெ.சஜித்ரா, மருத்துவ அலுவலர், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஏரியூர்
அய்யனார், சிவகாசி: எனக்கு வயது 38. எனது கடைவாய் பல்லில் சில நாட்களாக வலி ஏற்பட்டுள்ள நிலையில் மாத்திரை சாப்பிட்டும் சரியாகவில்லை. தற்போது பல் சிறிது ஆடுகிறது. இதனை அகற்ற வேண்டுமா?
வெறும் வலி என்றால் மாத்திரை எடுத்துக் கொண்டாலே போதுமானது. பல் ஆட்டம் கண்டுள்ள நிலையில் தொடர்ந்து வலி இருந்து கொண்டே இருக்கும். அதனை உடனடியாக அகற்றுவது நல்லது. தேவைப்பட்டால் செயற்கைப் பல் பொருத்திக் கொள்ளலாம்.
- டாக்டர் விஜய், பல் மருத்துவ நிபுணர், சிவகாசி