PUBLISHED ON : ஆக 24, 2025

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, போதுமான துாக்கம் மிகவும் முக்கியம். துாக்கம் சார்ந்த பிரச்னைகள் இருப்பின், காரணத்தை அறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்கிறார்,ஆக்குபேசனல் தெரபிஸ்ட் ராகுல்.
அவர் கூறியதாவது:
ஆட்டிசம் குழந்தைகளுக்கு, பெரும்பாலும் துாக்கம் சார்ந்த பிரச்னைகள் இருப்பதாக பெற்றோர் கூறுகின்றனர். காரணங்களை அறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளித்தால், எளிதாக சரி செய்து விடலாம்.
* நரம்பியல் குறைபாடு மற்றும் வளர்ச்சி சார்ந்த பிரச்னைகள் இருக்கலாம். பொதுவாக, சாதாரண குழந்தைகளுக்கே வளர்ச்சி சமயங்களில் சில உடல் வலிகள் இருக்கும். ஆட்டிசம் குழந்தைகளால் அதனை வெளிப்படுத்த தெரியாது.
* சென்சரி அதாவது உணர்ச்சி, உணர்வு ரீதியான சிக்கல்கள் இருக்கலாம். ஒரு சில குழந்தைகளுக்கு இருட்டு, சிலருக்கு வெளிச்சம், இரவு நேரங்களில் தாயின் அருகாமை அல்லது தொடு உணர்வு, போர்வை முழுவதுமாக போர்த்திக்கொள்வது, போர்வையில்லாமல் துாங்குவது, விரும்பாத உடைகள் அணிவது போன்ற, உணர்வு சார்ந்த பாதிப்புகள் இருக்கலாம்.
* மருத்துவ காரணங்கள் இருக்கலாம். உட்கொள்ளும் மருந்துகளின் விளைவாகவும் துாக்கமின்மை ஏற்படலாம். அவர்களால் வெளிப்படுத்த முடியாத வலிகள் இருக்கலாம்.
* துாங்கும் முன், தேவையற்ற உணவு, ஸ்கிரீன் டைம் கொடுப்பதும், துாக்கமின்மைக்கு முக்கிய காரணங்கள்.
* சுற்றுப்புறம் மற்றும் அன்றாட செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களாலும் துாக்கமின்மை ஏற்படலாம். குழந்தைகளின் சுற்றுப்புறங்கள் வழக்கத்தை காட்டிலும் மாறி இருப்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, நீண்டதுாரம் பயணம் சென்று வருவது போன்றவையும் காரணங்கள்.
* தனக்கு ஏற்படும் பயம், பதட்டம் போன்றவற்றை வெளிப்படுத்த முடியாததால், ஏற்படும் பாதிப்புகளின் விளைவாகவும் துாக்கமின்மை ஏற்படும்.
இந்த காரணங்களை கண்டறிந்து, சரிசெய்தாலே நன்றாக துாங்குவார்கள். இரவெல்லாம் துாங்குவதில்லை என்று அலட்சியமாக விடுவது தவறு. அது, அவர்களின் பிரச்னையை மேலும் அதிகரிக்கச் செய்து விடலாம்.