அதிகரிக்கிறது மார்பக புற்றுநோய் சுயபரிசோதனையில் கண்டுபிடிக்கலாம்
அதிகரிக்கிறது மார்பக புற்றுநோய் சுயபரிசோதனையில் கண்டுபிடிக்கலாம்
PUBLISHED ON : ஆக 24, 2025

பெண்களுக்கு வாழ்வியல் மாற்றங்களால் மார்பக புற்றுநோய் அதிகரித்து வரும் சூழலில், அவ்வப்போது சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
தமிழ்நாடு புற்றுநோய் பதிவேடு திட்ட அறிக்கை 2019ன் படி கன்னியாகுமரி, கோவை, காஞ்சிபுரம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில், அதிகளவில் இப்பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்த முடியும். ஆனால், பல பெண்கள் விழிப்புணர்வு இன்றி இரண்டு, மூன்றாம் நிலையில் சிகிச்சைக்கு வருவதாக, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து,அரசு மருத்துவமனை புற்றுநோய் பிரிவு நிபுணர் டாக்டர்செல்வராஜிடம் கேட்டபோது,
மார்பக புற்றுநோய் 50, 60 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கே முன்பு கண்டறியப்பட்டது. சமீபகாலங்களில், 35 வயதிலும் இப்புற்றுநோயால் பாதிக்கப்படுவதை காண்கிறோம்.
உணவு, அதிக கொழுப்பு உள்ள உணவு, தவறான டயட் முறை காரணங்களால் மார்பக புற்றுநோய் அதிகரித்துள்ளது.
மேற்கத்திய உணவு பழக்கவழக்கங்கள் இதற்கு முக்கிய காரணம். குழந்தைகளுக்கு ஆரம்பம் முதலே சரியான உணவு பழக்கவழக்கங்களை, சொல்லிக்கொடுக்க வேண்டியது அவசியம்.
மார்பக புற்றுநோய் இருக்கிறதா இல்லையா என்பதை, ஆரம்ப நிலையில் கண்டறிய சுய பரிசோதனை அவசியம். கட்டிகள் ஏதும் தென்பட்டாலோ, மார்பகங்களில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தாலோ, மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
தற்போது, ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக இப்பரிசோதனை செய்யப்படுவதால், பெண்கள் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இப்பரிசோதனைக்கு வர, பல பெண்கள் தயங்குவதை காணமுடிகிறது. பெண்கள் ஒவ்வொருவரும் இப்பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
கோவை அரசு மருத்துவமனையில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து பரிந்துரையின் பேரில் வருபவர்களுக்கு, தாமதமின்றி 'மேமோகிராம்' செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டிகள் இருந்தால் உடனுக்குடன் அடுத்தகட்ட பரிசோதனை செய்கிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.