
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு...
'திருவள்ளூர், பூந்தமல்லி நெடுஞ்சாலை, வேலப்பன் சாவடி சந்திப்பை இணைக்கிற திருவேற்காடு கூவம் ஆற்றுப்பாலத்தை கடக்கிற பாதசாரிகள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை'ன்னு நான் சொல்றேன். உங்களால இதை மறுக்க முடியுமா?
பாதிரிவேடு தனியார் நிறுவன துாய்மை பணியாளரான என் அம்மா, ஜூலை 18ம் தேதி காலை 8:45 மணிக்கு அந்த ஆற்றுப்பாலத்து ஓரமா நடந்து போயிட்டு இருந்தப்போ, தி.நகர் - திருவேற்காடு தட மாநகர பேருந்து பால தடுப்பு கம்பியோட சேர்த்து அவங்களை நசுக்கிருச்சு!
'ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் இயக்குவது, கவனக்குறைவால் மரணத்திற்கு காரணமாவது' பிரிவுகள்ல வழக்கு பதிவாச்சு; விபத்து நடந்த பகுதியில நெடுஞ்சாலைத்துறை சார்பா வேகத்தடை முளைச்சது; அவ்வளவுதான்!
போதிய வருமானம் இல்லாத என் குடும்ப சூழல்ல, மாற்றுத்திறனாளியான என் மூத்த மகளுடைய வளர்ப்புக்கு பெரும் துணையா இருந்தது என் அம்மாதான். அவங்க மரணத்துக்கு நீதி கேட்டு ஆகஸ்ட் 8ம் தேதி உங்க தனிப்பிரிவுக்கு அனுப்பின மனுவுக்கு, அடையாள எண்:9474476 மட்டும்தான் கிடைச்சது.
உங்க ஆட்சி நிர்வாகத்துல நீதி வழங்க ஏன் சார் இவ்வளவு தாமதமாகுது?
- மாநகர பேருந்து மோதி பலியான 52 வயது ஜெயாவின் மரணத்திற்கு நீதி கேட்கும் மகள் ஜெயந்தி மற்றும் மகன் கணபதி, திருவேற்காடு, திருவள்ளூர்.