
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு...
'சாலை பாதுகாப்பிலும், 'சாலை விபத்தில் ஒருவர் கூட உயிரிழக்கக் கூடாது' என்பதிலும் எனது அரசு இனிவரும் காலங்களில் தீவிரமாக செயல்படும்!' - இது, 2022ல் சட்டசபையில் நீங்க தந்த வாக்குறுதி!
அந்த வாக்குறுதியை நீங்க காப்பாத்துறதா நம்புறீங்களா; ஜூலை 12, 2024ல் சென்னை மாநகர சாலை பள்ளத்தால நிகழ்ந்த கோர நிகழ்வுல என் மகள் உயிர் இழந்த விஷயம் உங்களுக்குத் தெரியுமா?
அன்னைக்கு ராத்திரி 11:30 மணியளவுல, திருமங்கலம் 100 அடி சாலை - 18வது பிரதான சாலை சிக்னல் சந்திப்பு பக்கத்துல, மழைநீர் மூடிய சாலை பள்ளத்துல பைக் சிக்கி என் மகள் கீழே விழ, பின்னால வந்த லாரி அவளை சிதைச்சிருச்சு!
வி5 திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு வழக்கு பதிஞ்சு, முதல்வர் சாலை விபத்து நிவாரணத்துக்கு தேவையான ஆவணங்களை கேட்டு வாங்கிட்டுப் போனாங்க. அந்த பள்ளத்தை வழக்கம் போல உங்க அரசு போர்க்கால அடிப்படையில சீரமைச்சிருச்சு!
முதல் தலைமுறை பட்டதாரியான என் மகளோட கனவை சிதைச்சு, எங்க எதிர்காலத்தை நரகமாக்கி, எங்களுக்கு எந்த உதவியும் செய்யாத உங்க அரசு மக்கள் நலன் காக்கும் அரசா; நீங்க நடத்துறது மக்களுக்கான ஆட்சியா?
- மழைநீர் மூடிய சாலை பள்ளத்தால் 24 வயது மகள் ஹேமமாலினியை இழந்து தவிக்கும் தாயம்மாள், ஐ.சி.எப்., சென்னை.