
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு...
'என் இடத்துக்கு வந்து என் ஆசிரியரை அவமானப்படுத்திட்டு போயிருக்கிறே நீ... உன்னை நான் சும்மா விட மாட்டேன்'னு மஹாவிஷ்ணு விவகாரத்துல சீறுன அமைச்சர் மகேஷ், 'அரசுப் பள்ளிக்கூடம்'ங்கிற அவரோட இடத்துல என் மகள் சந்திச்ச இழப்புக்கு என்ன நீதி வழங்குனார்னு கேளுங்க!
சம்பவம் நடந்த டிசம்பர் 21, 2023ல், சேலம் தலைவாசல் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில என் மகள் ஐந்தாம் வகுப்பு மாணவி. அன்னைக்கு, தலைமை ஆசிரியர் வீசின மூங்கில் குச்சியால என் மகளோட இடது கண்ணுல பெரும் காயம். அறுவை சிகிச்சை நடந்தும் பார்வை பறிபோயிருச்சு.
தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம், தலைவாசல் காவல் நிலையத்துல முதல் தகவல் அறிக்கை - 19/2024 பதிவு, இரண்டு மாதம் கழித்து 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம்னு தடதடன்னு இயங்கின உங்க அரசு அத்தோட ஒதுங்கிருச்சு.
எல்லா பேட்டியிலேயும், 'என் மாணவச் செல்வங்கள்... என் மாணவச் செல்வங்கள்'னு வாய் நிறைய சொல்ற அமைச்சர் மகேஷ் நினைச்சா, என் மகளுக்கு உயர்தர சிகிச்சை தந்து பார்வையை மீட்டுத்தர முடியாதா?
அவருக்கு அந்த மனசிருக்கான்னு கேட்டுச் சொல்லுங்க!
- அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் எறிந்த மூங்கில் குச்சியால் இடதுகண் பார்வை இழந்த, 11 வயது கங்கையம்மாளுக்கு நீதி கேட்கும் தாய் சுமதி, மும்முடி, சேலம்.