
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு...
'சடலத்தின் புகைப்படங்களே வாதியின் கோரிக்கையை நியாயப்படுத்துகிறது. இதுவரையிலான வழக்கு விசாரணை அறிக்கையை இரு வாரங்களில் அளிக்க வேண்டும்!' - இது, பிப்ரவரி 8, 2023ல் நாமக்கல் டி.எஸ்.பி.,க்கான சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு!
இந்த உத்தரவுக்கான காரணம்...
செப்டம்பர் 19, 2022 இரவு; நாமக்கல், நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலக காவலாளியான என் கணவர், கை, கால்கள், இடுப்பு பகுதி எல்லாம் இரும்பு துாணோடு கயிறால் பிணைக்கப்பட்ட நிலையில துாக்குல தொங்கிட்டு இருந்தார். 'சந்தேக மரணம்'னு முதல் தகவல் அறிக்கை - 220/2022 நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்துல பதிவாச்சு!
'கொலைக்கான முகாந்திரம் இருக்கிறது; நேர்மையான விசாரணை வேண்டும்'னு நவம்பர் 17, 2022ல் தமிழக டி.ஜி.பி.,க்கு கடிதம் எழுதினார் உங்க கூட்டணி கட்சி தலைவர் திருமாவளவன். அந்த கடிதத்துக்கு மதிப்பு இல்லாததால நீதிமன்றம் போனோம். மேற்சொன்ன நீதிமன்ற உத்தரவு மதிக்கப்பட்டதான்னு நீங்கதான் சொல்லணும்!
'ஸ்காட்லாந்து காவல் துறைக்கு இணையான தமிழக காவல் துறை சீரழிந்து நிற்கிறது'ன்னு எதிர்க்கட்சி தலைவரா சொன்னீங்களே... அந்த சூழல் மாறியாச்சுன்னு இப்போ சொல்வீங்களா?
- பேரூராட்சி அலுவலக காவலாளி பரமசிவத்தின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்கும் மனைவி சின்னப்பிள்ளை, அண்ணா காலனி, ராசிபுரம், நாமக்கல்.