
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு...
கடந்த ஜூன் 8ம் தேதி, தேர்தல்ல ஜெயிச்சிருந்த உங்க கட்சி எம்.பி.,க்கள் கூட்டத்தை அண்ணா அறிவாலயத்துல நீங்க சந்தோஷமா நடத்திட்டு இருந்தப்போ, என் மகன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைச்சிட்டு, திருநின்றவூர் - பெரியபாளையம் நெடுஞ்சாலையில கசுவா கிராம மக்களோட நாங்க போராட்டம் நடத்திட்டு இருந்தோம்!
அன்னைக்கு சாயங்காலம் மேய்ச்சலுக்காக பசுமாடுகளை ஓட்டிட்டுப் போன என் மகன் வீடு திரும்பலை. பாக்கம், ராமநாதபுரம் கிராம சாலை மின்கம்பத்துல இருந்து மறுபக்கம் வயல்வெளிக்கு போன மின்கம்பிகள் தாழ்வா தொங்கினதுதான் என் மகன் உயிர் போக காரணம்!
இந்த பிரச்னை தொடர்பா கசுவா கிராம மக்கள் பலதடவை புகார் தந்தும், 'காலாவதியான விவசாய மின்இணைப்பு அது; அந்த கம்பிகளில் மின்னோட்டம் கிடையாது'ன்னு பொறுப்பை தட்டிக்கழிச்சிருக்கு மின்வாரியம்.
'இந்த நிர்வாக அலட்சியத்துக்கு பொறுப்பேற்று, பிரகாஷின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்'னு பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ் எங்க துக்கத்துல பங்கெடுத்துக்கிட்டார். எங்க துக்கத்துல பொறுப்புள்ள முதல்வரா உங்க பங்கு என்ன?
- மின்வாரிய அலட்சியத்தால் பலியான 32 வயது பிரகாஷின் தாய் லட்சுமி, புலியூர், பாக்கம், திருவள்ளூர்.