
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு...
விமானப்படை சாகச நிகழ்ச்சியை பார்த்து முடிச்சிட்டு நீங்களும் உங்க அதிகாரிகளும் அடுத்தடுத்த பணிகளுக்கு நகர்ந்துட்டீங்க. ஆனா, என் வாழ்க்கை நகரலை!
அக்டோபர் 6ம் தேதி, தீவுத்திடல்ல இடமில்லாததால நேப்பியர் பாலம் பக்கம் பைக்கை நிறுத்திஇருந்தோம். நிகழ்ச்சியை பார்த்துட்டு கிளம்புறப்போ கடுமையான தாகம். எங்கேயும் தண்ணீர் கிடைக்கலை. தாகத்தோட பைக் எடுக்கப் போன என் கணவர் திரும்பி வரலை.
பி - 3 கோட்டை காவல் நிலையத்துல, சட்டப்பிரிவு 194ன் கீழ் முதல் தகவல் அறிக்கை - 44/2024 பதிவாச்சு. 'போதுமான வசதிகள் செய்யப்பட்டிருந்தன. வெயிலின் தாக்கமே உயிரிழப்புக்கு காரணம்'னு உங்க சுகாதாரத்துறை அமைச்சர் சொல்ல, 'கடும் வெயில் மற்றும் மருத்துவ காரணங்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டன'ன்னு சொல்லிருச்சு உங்க அறிக்கை!
50 வயதை கடந்த அமைச்சர்களும், அதிகாரிகளும், நீங்களும் பத்திரமா வீடு திரும்பினப்போ, 34 வயதேயான என் கணவர் மரணத்துக்கு வெயில் மட்டுமா காரணம்?
நீங்க தந்த இழப்பீடு, எங்க எதிர்காலத்துக்கு போதும்னு நம்புறீங்களா? மூணு வயசு மகனோட தடுமாறி நிற்கிற என் வாழ்க்கைக்கு ஒரு வழி காட்டுங்க!
- விமானப்படை சாகச நிகழ்ச்சியை காண வந்து பலியான 34 வயது கார்த்திகேயனின் பட்டதாரி மனைவி சிவரஞ்சனி மற்றும் தாய் கீதா, திருவொற்றியூர், சென்னை.