
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு...
நான் ஜானகி. பணியின் போது மின்சாரம் தாக்கி இறந்த மின்வாரிய ஊழியரின் மனைவி!
தமிழக மின்வாரியத்தின் வடபெரும்பாக்கம் துணை மின்நிலைய மின் கம்பியாளரா பணியாற்றின என் கணவர், நவம்பர் 6, 2023ல் பணியின் போது மின்சாரம் தாக்கி இறந்துட்டார். ஆறுதல் சொல்ல வந்த மின்வாரிய அதிகாரிகள் தரப்புல, நிவாரணம், பணிக்கால பணப்பலன்களுக்கு வாய் வார்த்தையா உத்தரவாதம் கிடைச்சது!
ஒரு வருஷமாச்சு... இதுவரைக்கும் எந்த நிவாரணமும், பணிக்கால பலன்களும் வரலை. பட்டதாரியான இளைய மகனுக்காக கேட்ட, 'கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற வழங்கப்படும் ஒருங்கிணைந்த சான்றிதழ்' இந்த ஆகஸ்ட் 22ம் தேதி பொன்னேரி வட்டாட்சியர் கையெழுத்தோட கிடைச்சிருக்கு! பணி எப்போ கிடைக்கும்னு அந்த கடவுளுக்கு மட்டும்தான் வெளிச்சம்!
அது எப்படிங்க... என் கணவர் இறந்த அடுத்த மாசம், துாத்துக்குடி கனமழையில் சேதமான மின்கம்ப பராமரிப்புல உயிரிழந்த ஊழியர் குடும்பத்துக்கு மட்டும் உடனே இரங்கல் சொல்லி, ரூ. 5 லட்சம் நிவாரணம் தந்தீங்க?
'அரசு ஊழியர்தான் அரசு'ங்கிற உங்க கருத்துல இன்னும் உறுதியா இருக்குறீங்களா?
- பணியின்போது மின்சாரம் தாக்கி கணவர் ஏழுமலை பலியாக நிவாரணம் மற்றும் பணிக்கால பலன்களுக்காகப் போராடும் மனைவி ஜானகி, ஆமூர், பொன்னேரி, திருவள்ளூர்.