
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு...
ஒரு திட்டம் துவக்கப்படுறதுக்கும் செயல்படுறதுக்கும் காரணம் நீங்கன்னா, திட்டப்பணிகளோட நிர்வாக குளறுபடியால உயிர்பலி ஆகுறப்போ அதுக்கு பொறுப்பாளியும் நீங்கதானே; ஆனா, பொறுப்பேற்க வேண்டிய உங்க நெடுஞ்சாலைத்துறையும் ஒப்பந்ததாரர் தரப்பும் மவுனமா இருக்குறதோட மர்மம் என்ன?
ஆகஸ்ட் 25ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு இருசக்கர வாகனத்துல தலைக்கவசத்தோட வந்த என் கணவர், செல்லப்பகவுண்டன் புதுார் பிரிவு சிறுவாணி சாலையோட மையப்பகுதியில, நெடுஞ்சாலைத்துறை தோண்டியிருந்த 16 அடி பள்ளத்துல விழுந்துட்டார்; சம்பவ இடத்துலேயே மரணம். பள்ளம் பறிச்ச ஒப்பந்த நிறுவனம் மேல ஆர் 2 பேரூர் காவல் நிலையத்துல வழக்கு பதிவாச்சு!
ஆனா, சம்பவ இடத்துல எந்தவொரு முன்னெச்சரிக்கை அறிவிப்பும் வைக்காத அந்த நிறுவனம் மேல இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. சம்பவத்துக்கு மறுநாள் அந்த பள்ளத்தை மூடி சாலையை சீரமைச்சிட்டாங்க!
'இது, மக்கள் நலன் காக்கும் அரசு'ன்னு எல்லா மேடைகள்லேயும் முழங்கிட்டு இருக்குறீங்களே... அந்த மக்கள் கூட்டத்துல என் குடும்ப உறுப்பினர்களும் ஓர் அங்கம்தானே?
- நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் 36 வயது கார்த்திகேயன் பலியாக, எட்டு வயது மகள், மூன்று வயது மகனுடன் நீதி கேட்கும் மனைவி நீலாமணி, தேவராயபுரம், தொண்டாமுத்துார், கோவை.