
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு...
நீதி வழங்குறதுல உங்க ஆட்சி நிர்வாகம் ஏன் பாகுபாடு காட்டுதுய்யா?
பிப்ரவரி, 2023; சேலம், கோவிந்தபாடி நபரோட மர்ம மரணத்தப்போ, கர்நாடக வனத்துறையினருக்கு கண்டனம் தெரிவிச்சு நிவாரணம் அறிவிச்ச நீங்க, திருவள்ளூர் வனக்கோட்டம், செங்குன்றம் வனச்சரகத்தினரோட அஜாக்கிரதையால என் மகன் இறந்ததுக்கு என்ன நீதி வழங்குனீங்க?
நவம்பர் 1, 2023; வெங்கல் - சீத்தஞ்சேரி நெடுஞ்சாலை கல்பட்டு சந்திப்புல பேருந்துக்காக காத்திருந்த என் மகனை, செங்குன்றம் வனச்சரகத்துக்கு சொந்தமான கண்காணிப்பு கோபுரம் பலி வாங்கிருச்சு. 'கண்காணிப்பு கோபுரம் பழுதாகி இருக்கு'ன்னு கல்பட்டு கிராமத்தினர் பலமுறை புகார் சொல்லியும் வனத்துறை அலட்சியமா இருந்தது ஏன்?
சி2 பெரியபாளையம் காவல் நிலையத்துல, முதல் தகவல் அறிக்கை எண்: 695/2023ன் கீழ் வழக்கு பதிவாயிருச்சு. 'நிவாரணம் தர தேவைப்படும்'னு ஆவணங்களை வாங்கிட்டுப் போனார் வனக்காவலர். பத்து மாதம் ஆச்சு... நிவாரணமும் இல்லை... வனத்துறையினர் மேல நடவடிக்கையும் இல்லை!
நீதி வழங்குறதுக்கு உங்க அரசு பயன்படுத்துற அளவுகோல் என்னய்யா?
- வனத்துறை கண்காணிப்பு கோபுரம் சாய்ந்து உயிரிழந்த 21 வயது தினேஷ்குமாரின் மரணத்திற்கு நீதி கேட்கும் தாய் புவனா, மாமண்டூர், திருவள்ளூர்.