
'அப்பாவோட செருப்பை நனைச்சிட்டேன் பாரும்மா'ன்னு, என் ரெண்டு வயசு பொண்ணு பிகு கத்துறா; என்னால, அவ நிற்கிற இடத்துக்கு போக முடியலை.
'பசிக்குதும்மா... எழுந்திரும்மா'ன்னு என் மேல விழுந்து கெஞ்சுறா; என்னால கண் திறக்க முடியலை. 'அயர்ன் பாக்ஸ்' ரொம்ப சூடாகி புகை கிளம்புது; 'வேண்டாம் பிகு... வேண்டாம்...
அதை தொடாதே... விரல் பொசுங்கிரும்' - நான் கத்துறது என் குட்டிப் பொண்ணுக்கு கேட்கலை;
விரல் லேசா பொசுங்கி, 'அம்மா... அம்மா...'ன்னு வலியில துடிக்கிற பிகுவை என்னால போய் துாக்க முடியலை. அவளே அழுது ஓய்ஞ்சு துாங்கிட்டா! வீட்டுக்கதவு உடைக்கப்படுற சத்தம். ஏதேதோ குரல் கேட்குது. கதவை உடைச்சு என் கணவர் ஓடி வர்றார். படுக்கையில கண் மூடி கிடக்குற என்னைப் பார்த்து, 'என்னை மன்னிச்சிடு'ன்னு கதறுறார். என்னால அவரை ஆறுதல்படுத்த முடியலை. என்னைச் சுத்தி நிறைய துாக்க மாத்திரைகள். ஆமா... என் உயிர் போய், 12 மணி நேரத்துக்கு மேல ஆகுது.
'அழகான வீடு கட்டியிருக்கேன்ப்பா!' - கட்டிலுக்கு கீழே விளையாடிட்டு இருந்த பிகு சொன்னப்போ, என் கணவர் வீறிட்டு அழுதார். 'சின்ன குடும்ப பிரச்னைக்காக, அவசரப்பட்டு இப்படி ஒரு முடிவை எடுத்துட்டேனே'ன்னு, எனக்குள்ளே நானும் அழுதேன்.

