
பணியில் சேர்ந்த மூன்றாம் தினம் இரட்டை பெண் குழந்தை பிரசவத்தை கையாண்டது; சமீபத்தில், அதே இரட்டை சகோதரியருக்கு பிரசவம் பார்த்தது என, 56 வயது செவிலி பிரேமலதாவின் நினைவுகளில் பல இனிய தருணங்கள். இவர், கடந்த செப்டம்பர் முதல் விருதுநகர் ஆலமரத்துப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மேற்பார்வையாளர்.
பணி துவக்கம்: 1998ம் ஆண்டு
முதல் களம்: துணை சுகாதார நிலையம், நீராவி,
ராமநாதபுரம்.
பதவி: செவிலிதுறை
அனுபவம்: 26 ஆண்டுகள்
சுருக்: 'இனி நல்லவனா
வாழணும்'னு நோய்ல கிடக்குறப்போ முடிவெடுக்குறோம்; நோய் குணமானதும் ஏன்
மாறிடுறோம்?
கற்றனைத் துாறும் அறிவு
ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் ஒரு நோய் பற்றி மருத்துவர்கள் எங்களுக்கு வகுப்பு எடுப்பாங்க. அந்த வகுப்பை நான் தவறவிடுறது இல்லை. என் ஓய்வுக்காலம் நெருங்குதுன்னாலும் நோய்கள் பற்றி தெரிஞ்சுக்கிற ஆர்வம் எனக்கு இன்னும் குறையலை!
பிரேமலதாவுடன் பிறந்த இரண்டு இளைய சகோதரர்களும் இருவேறு சாலை விபத்தில் 2008ம் ஆண்டு இறந்துவிட, ஒரு சகோதரரின் மனைவி மற்றும் கல்லுாரி செல்லும் அவரது இரு பிள்ளைகளை இவர்தான் கவனித்துக் கொள்கிறார்!
இல்லெனினும் ஈதலே நன்று
எனக்கு வாரத்துல ஒருநாள் தான் விடுப்பு. சில நேரங்கள்ல அந்த விடுப்பு அன்னைக்கும் இலவச மருத்துவ முகாம்கள்ல தன்னார்வ செவிலியா வேலை பார்ப்பேன். உடல்நலம் மேல அக்கறை இல்லாததால, சில உறவுகள் இழப்புகளை சந்திச்சிருக்காங்க. அதனால, இயன்றவரைக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு தரணும்ங்கிறது என் நோக்கம்!
பத்து ஆண்டுகளுக்கு முன் பிரேமலதாவின் கணவர் சிறுநீரக செயலிழப்பால் காலமாகி விட்டார். மகன் தீனசுந்தர்நாத் மாற்றுத்திறனாளி. கணவர் மற்றும் பூர்வீக வழியிலான சொத்துக்கள் இன்னும் இவர் வசம் சேரவில்லை!
உள்ளத்தின் உள்ளக் கெடும்
எவ்வளவு சொல்லியும் என் கணவர் அவரோட மதுப்பழக்கத்தை கைவிடலை. கடைசியில, அதுவே அவர் உயிருக்கு எமனா வந்து நின்னப்போ, 'இன்னும் வாழணும்'னு ஏங்கினார். அவர் போனதுக்கப்புறம் எங்க வாழ்க்கை தலைகீழா மாறிடுச்சு. ஆனாலும், இந்த துயரத்துல வீழ்ந்திடக் கூடாதுங்கிற மனவுறுதியோட வாழ்றேன்.
மன உறுதியை வளர்த்துக் கொள்வது எப்படி?
பொருளாதார ரீதியில யாரையும் சார்ந்திருக்காம இருக்குறது தான் மன உறுதிக்கான அடிப்படை! துரோகம், ஏமாற்றங்களை சந்திக்கிற நேரங்கள்ல மன உறுதி நொறுங்கத்தான் செய்யும். அந்த சூழல்ல மனசுல இருக்குற கருணையும் வற்றிப் போயிரும். ஆனா, ஒரு செவிலியா இப்போவரைக்கும் என் கருணை உணர்வை இழந்தது இல்லை.