
தன்னுடைய 20ம் வயதில் திருமணத்தின் போது தேன்மொழிக்கு இருந்ததை லட்சியமென்று சொல்ல முடி யாது; அது கேள்வியாக மட்டுமே இருந்தது. 'பெண்ணுக்கென்று ஒரு வாழ்க்கை உண்டா; அந்த வாழ்க்கை உயர்தட்டு பெண்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடியதா?' - இக்கேள்விக்கான பதிலாகவே 2018ல் சுய தொழில் துவக்கினார் தேன்மொழி.
ஒரு கேள்வி எப்படி லட்சியமாக மாறியது?
யாராவது லட்சியம் பற்றி கேட்டா பதில் சொல்ல ரொம்ப யோசிப்பேன். 'என் வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்'னு மனசுல எப்பவும் ஒரு தேடல். விடுதியில இருந்த என் மூத்த மகளுக்கு கடலை உருண்டை, எள் உருண்டை செஞ்சு கொடுப்பேன். அங்கே என் கைப்பக்குவம் பிரபலமாகி எல்லாரும் கேட்க ஆரம்பிச்சாங்க. அந்த வரவேற்பால இதையே தொழிலா செய்யலாம்னு முடிவு பண்ணினேன். 'எது லட்சியம்'னு எனக்கு புரிஞ்சது!
ஈரோடு, வில்லரசம்பட்டியில் கடலை உருண்டை, எள் உருண்டை என இரு தயாரிப்புகளுடன் துவக்கப்பட்ட தேன்மொழியின் தொழில், தற்போது அதிரசம், மிக்சர், ராகி ரிப்பன் முறுக்கு என பத்துக்கும் மேற்பட்ட தயாரிப்புகளுடன் கிடுகிடுவென வளர்ந்து நிற்கிறது.
உங்கள் தொழிலின் முதல் எதிரி?
இந்த தொழிலாலதான் நம்ம வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் வரப்போகுதுன்னு முடிவு பண்ணி இதை லட்சியமா வைச்சுக்கிட்டேன். ஆனா, பிளஸ் 2 மட்டுமே முடிச்சுட்டு, 43 வயசுல புதுசா ஒரு கனவை கண்டுபிடிச்சு, அதுல பணத்தை முதலீடு பண்ணி சமாளிச்சிட முடியுமான்னு தயக்கம் இருந்தது. முதல் எதிரியான அந்த தயக்கத்தை எதிர்கொள்ள எனக்கு சிலரோட உதவி தேவைப்பட்டது!
தோழிகள் பிரேமாவதி, தாமரைபாவையை தொழிலில் பங்குதாரர்களாக இணைத்துக் கொண்டதும் தேன்மொழியின் பலம் கூடியது. மருந்து கடை நடத்தி வந்த தேன்மொழியின் கணவர் பாலாஜி சுந்தரும் தற்போது இவர்களுடன் இணைந்திருக்கிறார்.
வெற்றிக்கு பிறகான மனமாற்றம்?
சுயதொழில்ல சாதிக்கிற பெண்களைப் பற்றி பத்திரிகைகள்ல படிச்சிட்டு, 'இவங்க எல்லாம் எப்படி சாதிக்கிறாங்க'ன்னு ஆச்சரியப்பட்டிருக்கேன். இப்போ, 'சுய அடையாளத்தை எப்படி உருவாக்கணும்'னு எனக்கு நல்லா தெரியும். பத்து பெண்களுக்கு நான் ஊதியம் தர்றது என் தன்னம்பிக்கையை ரொம்பவே அதிகப்படுத்தி இருக்கு.
சாதிக்க வேண்டும் என ஆசை கொண்ட பெண்களே...
'எனக்குன்னு ஒரு வாழ்க்கை இல்லையா'ங்கிற கேள்விதான் இந்த இடத்துக்கு என்னை கூட்டிக்கிட்டு வந்திருக்கு. அப்படி உங்களை வழிநடத்துற கேள்வியை உருவாக்குங்க; அது உங்க லட்சியத்தை அடையாளம் காட்டும்.
தேன்மொழியின் புதுப்புது அர்த்தங்கள்
* லட்சியம்? அடையாளம்* தொழில்? முகவரி* பணம்? தைரியம்