நாங்க என்ன சொல்றோம்னா...: ஹிருதயபூர்வம் (மலையாளம்)
நாங்க என்ன சொல்றோம்னா...: ஹிருதயபூர்வம் (மலையாளம்)
PUBLISHED ON : ஆக 31, 2025

மலை... மழை... குடை... நடை... இசை... ஹிருதயபூர்வம் !
' டைட்டில் கார்டு' முதல் காட்சியாய் மாறும் தருணத்தில் துவங்கி விடுகிறது உற்சவம். அக்காட்சியில் ஹெலிகாப்டர் தரையிறங்கி விட்டாலும், உற்சாகத்தில் பறக்கத் துவங்கிய நம் மனம் இரண்டரை மணி நேரத்திற்கு பின்பும் தரையிறங்க மறுக்கிறது!
தந்தையின் இதயம் பொருத்தப்பட்ட திருமணமாகாத மனிதரை தன் வீட்டிற்கு அழைத்து வரும் மகளும், அவள் தாயும் அவரிடம் சொல்லியும் சொல்லாத உணர்வுகள்தான் கதை; அவற்றை உணர்ந்தவர் போலவும், உணராதவர் போலவும் காட்டிக் கொள்ள வேண்டிய திரைக்கதை முழுவதும்... 'மோகன்லால்' ஊர்வலம்!
'தலைப்பு' போலவே இதயத்தில் இருந்து நம்முடன் பேசியிருக்கிறார் லாலேட்டன்; வழக்கம் போல உடலை வருத்தாத நடிப்பு; ஆனால், உச்சம் தொடும் முகபாவங்கள்; பரிச்சயமில்லா வீட்டின் விசேஷ நாளில் தேடிவந்து அறிமுகமாகும் மனிதர்களை சந்திக்கும் அவரது கண்களில்... நவரசம்!
இதயம் தந்தவரது மனைவி பாத்திரத்தில் சங்கீதா, மகளாக... மாளவிகா மோகனன்; லாலேட்டனின் கன்னத்தில் கன்றும், கை விரல்களில் பசுவும் முத்தமிடும் காட்சிகளில், காதல் அல்லாத, காமம் அல்லாத ஏதோ ஒன்று நம்மையும் குப்பென்று பற்றிக் கொள்கிறது. நாம் இன்னும் பெயர் வைத்திராத உணர்வுகள் நமக்குள் இருக்கத்தான் செய்கின்றன போலும்!
விடிய விடிய விரட்டியும், அணைத்தும், விடுவித்தும் விளையாடும் 'மேகம் - நிலா' போல், காட்சிகளுடன் விளையாடி தீர்க்கிறது பின்னணி இசை. 'நன்றியைத் தவிர எனக்குள் வேறெந்த உணர்வும் இல்லை' என்று அவ்வீட்டு இதயம் கொண்ட மோகன்லால் 'பொய்' சொல்லி கிளம்ப, சங்கீதா அவரை முந்திக்கொள்ள, மாளவிகா தன்னை ஒளித்துக் கொள்ள... நிறைகிறது நம் இதயம்.
இப்படைப்பு... தலைப்பு இல்லா கவிதை.
ஆக...
முகமூடிகள் அனைத்தையும் கழற்றி வைத்துவிட்டு பார்த்தால் முகம் பார்த்த திருப்தி கிடைக்கும்!