PUBLISHED ON : ஆக 31, 2025

தன் உளியின் ஓசையில் வாழும் மரச்சிற்ப கலைஞர்... சேலம், தம்மம்பட்டி சந்திரன்!
உளி பிடிக்கத் துவங்கியபோது இவருக்கு வயது 18. தற்போது மகன் சீனிவாசனுக்கு வழிகாட்டியாய் தன் சிற்பக்கூடத்தில் இருக்கி றார். 'பொன்விழா' கண்ட இக்கலைஞருக்கு பல விருதுகளால் கவுரவம் தந்திருக்கின்றன மத்திய, மாநில அரசுகள். இந்த 78 வயது படைப் பாளி பேசப்பேச சிறகு விரிக்கின்றன உளியின் நினைவுகள்...
முதல் பிரமிப்பு
'அது 1975ம் ஆண்டு; உத்தரகண்ட், ரிஷி கேஷில் சுவாமி சிவானந்தா நிறுவிய ஆசிர மத்திற்கு வாயிற்கதவு செய்யும் வாய்ப்பு; ரூ.15 ஆயிரம் கூலி; அன்று இரவு, 'சாதித்துவிட முடியுமா?' என்று மனதிற்குள் பெரும் கேள்வி. பொழுது விடிகையில் இனம் புரியா தெளிவு!
'மூன்று மாத உழைப்பில் 12 அடி உயரத்தில், 8 அடி அகலத்தில் தேக்கு மரக்கதவு தயார்; மத நல்லிணக்கத்தை உணர்த்தும் வகையில் சர்வமத குறியீடுகள் கொண்ட கதவு அது! 'அந்த கதவை ஒருமுறை தரிசித்து வர வேண்டும்' என்ற எண்ணம் இல்லாமல் ஒரு நாளும் நான் உறங்குவதில்லை!'
முதல் வெகுமதி
'டில்லி, கண்காட்சிக் காக 1978ல் நான் செதுக்கிய கிருஷ்ணர் சிற்பத்தை ரசித்த ஒரு அமெரிக்கர், இந்திய மதிப்பில் ஒன்பது ரூபாய்க்கான டாலர் பரிசளித்தார். இன்றும் அதை பொக்கிஷமாய் வைத்திருக்கிறேன்!
'இதேபோல், 1980ல் மும்பை கண்காட்சி மூலமாக கிடைத்த தொடர்பில், மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான சிற்பங்களை கன்டெய்னரில் நிரப்பி ஜப்பானுக்கு அனுப்பினேன். எப்போது நினைத்தாலும் இனிக்கும் என் சாதனை அது!'
முதல் விருது
'சேலம், ராஜாஜி ஹாலில் 1992ல் மத்திய ஜவுளி அமைச்சகம் நடத்திய விருது விழா; 'தேநீர், தண்ணீர் லஞ்சமே' என தவிர்க்கும் ராமமூர்த்தி எனும் நேர்மைமிகு அதிகாரி என்னை விருதுக்கு தேர்ந்தெடுத்தார். டி.வி.எஸ்., குழுமத்தின் லட்சுமி அம்மா, 'உழைப்பால் நாங்கள் முன்னேறியது போல் நீங்களும் சிறக்க வேண்டும்' எனச்சொல்லி விருது கொடுத் தார். பரிசுப் பணத்தில் ஊர் மக்களுக்கு விருந்து வைத்து கொண்டாடினேன்!
'விருது வாங்கி வந்த சில நாட்களில், 'நம்மை கவுரவித்தவர்களை நாம் தேடிப்போய் கவுரவிப் பதுதான் முறை' எனத் தோன்ற, சென்னைக்கு வந்து லட்சுமி அம்மாவுக்கு கிருஷ்ணர் சிற்பம் வழங்கினேன். 'லட்சுமி அம்மா' என் வாழ்வில் மறக்க முடியாத நபர்!'
'அன்று சொன்னதுதான் என்றும்' எனும் வகையில் சிற்பி சந்திரன் என்ன சொல்வார்?
வடிக்கவிருக்கும் சிற்பங்களுக்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்தால் மட்டுமே நம் உளி சொல்படி மரம் கேட்கும்.