/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
மலை உச்சியில் 12ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை
/
மலை உச்சியில் 12ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை
மலை உச்சியில் 12ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை
மலை உச்சியில் 12ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை
ADDED : ஆக 14, 2025 04:06 AM

காபி தோட்டம்' என்று அழைக்கப்படும் சிக்கமகளூரு மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில், பசுமையால் சூழப்பட்டு பல்லாலராயன துர்கா கோட்டை அமைந்து உள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து, 1500 மீட்டர் உயரத்தில் மலையின் உச்சியில் அமைந்து உள்ள இக்கோட்டை, 12ம் நுாற்றாண்டில் ஹொய்சாளா மன்னர் முதலாவது வீர பல்லாலராயனால் கட்டப்பட்டதாகும். இக்கோட்டை, கர்நாடக திராவிட கட்டட கலையில் கட்டப்பட்டு உள்ளது.
மலையின் உச்சிக்கு நீங்கள் செல்ல வேண்டுமானால், புறவைகள், பூச்சிகள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதி வழியாக நடந்து செல்ல வேண்டும். சிறிது துாரம் மட்டுமே அடர்ந்த வனப்பகுதியாக தென்படும். அதன்பின், திறந்த நிலையில் புற்களால் சூழப்பட்ட வழித்தடங்கள், கோட்டைக்கு அழைத்து செல்லும்.
மழை காலத்தில் இங்கு சென்றால், உங்கள் மனதில் உள்ள பாரம் நீங்கி, பசுமை சூழ்ந்த எண்ணத்தை தரும். அத்துடன் இங்கு பயணிப்பது அவ்வளவு கடினமாக இருக்காது. உடல் தகுதி இருக்கும் யார் வேண்டுமானாலும் மலை ஏறலாம்.
இங்கு மொபைல் போன் நெட்ஒர்க் இணைப்பு இல்லாததால், இந்த இடம் ஓய்வெடுக்கவும், இயற்கையை ரசிக்கவும் ஏற்ற இடமாக அமைகிறது. மலையேற்றம் செய்வோருக்கு ஏற்ற இடமாகும்.
முடிகெரேயில் இருந்து சுமார் 41 கி.மீ., தொலைவில் துர்கதஹள்ளி கிராமம் உள்ளது. இங்குள்ள காலபைரவேஸ்வரா கோவிலில் இருந்து மலையேற்றம் துவங்கலாம் அல்லது கோவிலில் இருந்து வனத்தின் குறிப்பிட்ட பகுதி வரை, ஜீப், எஸ்.யு.வி., வாகனத்தில் செல்லும் வகையில் மண் சாலை அமைந்து உள்ளது.
அங்கு வாகனத்தை நிறுத்திவிட்டு, அங்கிருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள பல்லாலராயன துர்கா கோட்டைக்கு நடந்து செல்லலாம்.
திடகாத்திரமான நபர்கள் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரத்தில் மலையின் உச்சியை சென்றடையலாம்.
நவம்பர் மற்றும் மே மாதங்களில் இங்கு மலையேற்றம் செய்யலாம். நடந்து செல்லும் வழித்தடத்தில், பாறைகள் இருப்பதால் வழுக்கி விழும் வாய்ப்பு உள்ளது. எனவே, மழை காலத்தில் இங்கு செல்வதை தவிர்க்கலாம்.
மலையேற்றம் செய்வோர் கை பையில் உணவு, தின்பண்டங்கள், குடிநீர் எடுத்து செல்லுங்கள். காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை சென்று வரலாம்.
எப்படி செல்வது?
▶ பெங்களூரில் இருந்து விமானத்தில் செல்வோர், மங்களூரு விமான நிலையம் செல்ல வேண்டும். அங்கிருந்து பஸ், டாக்சியில் 150 கி.மீ., பயணித்து, முடிகெரே டவுனுக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து துர்கதஹள்ளி கிராமத்திற்கு செல்ல வேண்டும்.
▶ ரயிலில் செல்வோர், சிக்கமகளூரு ரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து 50 கி.மீ., தொலைவில் உள்ள துர்கதஹள்ளி கிராமத்திற்கு செல்ல வேண்டும்.
▶ பஸ்சில் செல்வோர் முடிகெரே பஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து சன்கசலேவுக்கு உள்ளூர் பஸ்சில் பயணிக்க வேண்டும். அங்கிருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ள துர்கதஹள்ளி கிராமத்திற்கு செல்லலாம்.
- நமது நிருபர் -