/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
* ஹனிமூன் கொண்டாட்டம் இளம் தம்பதியர் விரும்பும் இடங்கள்
/
* ஹனிமூன் கொண்டாட்டம் இளம் தம்பதியர் விரும்பும் இடங்கள்
* ஹனிமூன் கொண்டாட்டம் இளம் தம்பதியர் விரும்பும் இடங்கள்
* ஹனிமூன் கொண்டாட்டம் இளம் தம்பதியர் விரும்பும் இடங்கள்
ADDED : ஆக 14, 2025 04:05 AM

புதிதாக திருமணமான தம்பதியர், ஹனிமூனுக்கு எங்கு செல்லலாம் என, யோசிக்கிறீர்களா. எங்கும் தேட வேண்டாம். கர்நாடகாவிலேயே, 'ரொமான்டிக்' சுற்றுலா தலங்கள் உள்ளன.
திருமணமான புது ஜோடிகள், தனிமையை விரும்புவது சகஜம். ஹனிமூனுக்காக, குளிரான மலை பிரதேசங்களுக்கு செல்வர். இதற்காக இந்தியாவில் சிம்லா, டார்ஜிலிங், மூணாறு, காஷ்மீர், குலுமனாலி, ஊட்டி, கொடைக்கானல் உட்பட பல்வேறு மலைப் பிரதேசங்கள் உள்ளன. வசதியானவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதுண்டு.
ஹனிமூனுக்காக வெளி மாநிலமோ, வெளி நாடுகளுக்கோ செல்ல வேண்டியது இல்லை. கர்நாடகாவிலேயே, இளம் தம்பதியரை குஷிப்படுத்தும் ரொமான்டிக் தலங்கள் உள்ளன. அவற்றின் பட்டியலை பார்ப்போமா.
குடகு கூர்க் என்றும் அழைக்கப்படும் குடகு மாவட்டம், அழகான மலை பிரதேசங்களில் ஒன்றாகும். 'இந்தியாவின் ஸ்காட்லாந்து' என, அழைக்கப்படுகிறது. குறைந்த பட்ஜெட்டுக்குள் ஹனிமூன் செல்ல, குடகு பெஸ்ட். மனதுக்கும் மகிழ்ச்சி கிடைக்கும். செலவும் அதிகமாகாது. வெளிநாட்டில் இருப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
குடகில் அடர்த்தியான வனப்பகுதி, கண்ணுக்கு எட்டிய துாரம் வரை, பசுமையான காபி, டீ தோட்டங்கள், கண்களுக்கு இனிமையான இயற்கை காட்சிகள், நீர் வீழ்ச்சிகளுக்கு பிரசித்தி பெற்றதாகும். அப்பே நீர் வீழ்ச்சி, துபாரே யானைகள் முகாம், ராஜா சீட், தலக்காவிரி உட்பட பல்வேறு சுற்றுலா இடங்கள் உள்ளன.
குறைந்த கட்டணம் உள்ள சாதாரண ரிசார்ட்டுகள், அதிக கட்டணம் வசூலிக்கும் சொகுசு ரிசார்ட்டுகள், ஹோம் ஸ்டேக்கள் உள்ளன.
கோகர்ணா கர்நாடகாவின் புண்ணிய தலமாக விளங்குவது கோகர்ணா. உத்தரகன்னடா மாவட்டத்தின் கோகர்ணா, இளம் ஜோடிகள் தனிமையில் பொழுதை கழிக்க, அற்புதமான இடமாகும்.
அனைவரும் விரும்பும் அமைதியான சூழ்நிலை இங்குள்ளது. கடற்கரைகளுக்கு பிரசித்தி பெற்றது. ஓம் கடற்கரை, குட்லே கடற்கரைகள் மிகவும் பிரபலமானவை.
நிம்மதியை விரும்புவோருக்கு, சிறந்த இடம் இதுதான். கோகர்ணாவில் படகு சவாரி, நீர் சாகச விளையாட்டுகள் உள்ளன. கடற்கரை அருகிலேயே உள்ள சொகுசு ரிசார்ட்டுகள், இளம் தம்பதியரின் தனிமையை இனிமையாக்கும். இயற்கை காட்சிகள் நிறைந்த வனப்பகுதிகளும் இங்குள்ளன.
இதன் நடுவில் அமைதியான சூழ்நிலையில் நீர் வீழ்ச்சிகள் உள்ளன. இவைகள் காதலர்கள், ஹனிமூன் ஜோடிகளை சுண்டி இழுக்கின்றன. பெருமளவிலான சுற்றுலா பயணியரும் வருகின்றனர்.
சிக்கமகளூரு 'காபி லேண்ட்' என, அழைக்கப்படும் சிக்கமகளூரு, அழகான மலைப் பிரதேசமாகும். இங்கு பசுமையான காபி எஸ்டேட்கள், பச்சை பசேல் மலைகளை காணலாம்.
இந்த சூழ்நிலை புதுமண தம்பதியின் மகிழ்ச்சியை அதிகரிக்கும். கர்நாடகாவின் மிக உயரமான முல்லய்யன கிரி சிகரமும் இங்குள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
மழைக்காலம் என்பதால், சிக்கமகளூரின் நீர் வீழ்ச்சிகளில் நீர் வரத்து அதிகரித்து, புதிய களை வந்துள்ளது. அனைத்து நீர் வீழ்ச்சிகளும், அடர்த்தியான வனப்பகுதிகளில் அமைந்துள்ளன.
கரடுமுரடான பாதைகளில் நடந்து சென்று, நீர் வீழ்ச்சிகளை காண்பது, புதிய அனுபவத்தை அளிக்கும். இந்த நீர் வீழ்ச்சிகளுக்கு காதலர்கள் அதிக அளவில் வருகின்றனர்.
கபினி கபினி, கர்நாடகாவின் முக்கியமான சுற்றுலா தலமாகும். இளம் தம்பதியர், சாகச பிரியர்கள், வன விலங்கு ஆர்வலர்களை கவர்ந்த இடமாகும். ஒரு காலத்தில் பிரிட்டிஷார் வேட்டையாடும் இடமாக இருந்ததாம். இங்கு புலிகள், சிறுத்தைகள், யானைகள், கரடி, முயல், மான் உட்பட, பல்வேறு விலங்குகள், பறவைகைள காணலாம்.
கபினி, நாகரஹொளே தேசிய பூங்கா அருகிலேயே உள்ளது. இங்கு ஹனிமூன் ஜோடிகள் தங்க, சொகுசு ரிசார்ட்டுகள் உள்ளன.
சில நாட்கள் தங்கினால், மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கும். அமைதியான சூழ்நிலையை விட்டு விட்டு திரும்பவே மனம் வராது.
குதுரேமுக் சிக்கமகளூரு, குடகுவை போன்று குதுரேமுக்கும், கர்நாடகாவின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாகும். பசுமையான காபி தோட்டங்கள் உள்ளன. இயற்கை ஆர்வலர்கள், இளம் ஜோடிகளின் சொர்க்கம். மலையேற்றம், ஸ்கூபா டைவிங் போன்ற சாகச விளையாட்டுகள் உள்ளன.
குதுரேமுக்கில், களசா, கங்காமூலா, ஹொரநாடு, கதம்பி, குதுரேமுக் தேசிய பூங்கா, ஹனுமான் குன்டி உட்பட, பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. குதுரேமுக்கில் சொகுசு ரிசார்ட்டுகள் ஏராளம். இளம் ஜோடிகள் இங்கு தங்கி, சுற்றுலா தலங்களை ரசிக்கலாம்.
- நமது நிருபர் -