/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
சக்லேஸ்புராவின் குட்டி நீர்வீழ்ச்சி
/
சக்லேஸ்புராவின் குட்டி நீர்வீழ்ச்சி
ADDED : ஆக 14, 2025 04:07 AM

ஹாசன் மாவட்டம், சக்லேஸ்புராவின் மகஜஹள்ளி கிராமத்தில் அமைந்து உள்ளது 'அப்பி ஹூண்டி நீர்வீழ்ச்சி'. இதனை, ஹன்பல் நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கின்றனர். சக்லேஸ்புராவின் பல சிறந்த சுற்றுலா பகுதியில் இதுவும் ஒன்றாக உள்ளது.
சாலையின் ஓரத்தில் அமைந்து உள்ளதால், நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் சாரல் நீர், சாலையிலும் விழுகிறது.
நீங்கள் நீர்வீழ்ச்சிக்கு சென்று குளிக்க வேண்டிய அவசியம் இல்லை. சாலையில் நின்றாலே அதன் சாரலால் நனைந்துவிடுவீர்கள்.
சுற்றுலா பயணியர் வசதிக்காக படிக்கட்டுகளும் அமைத்து உள்ளனர். நீர்வீழ்ச்சியின் மேலே செல்லவும், நீர்வீழ்ச்சிக்கு கீழே செல்லவும் தனித்தனியாக படிக்கட்டுகள் அமைத்து உள்ளனர்.
மேலே இருந்தபடி நீர்வீழ்ச்சியை பார்ப்பதை விட, கீழே இறங்கி பார்த்தால், 20 அடி உயரத்தில் இருந்து ஆர்ப்பரித்து கொட்டும் நீரை காணலாம்.
பாறைகள் இருப்பதால், சுற்றுலா பயணியர் ஜாக்கிரதையாக நடக்க வேண்டும். இல்லையெனில் வழுக்கி விழ நேரிடும். நீர்வீழ்ச்சியின் கீழ் பகுதியில் நின்று குளிக்கலாம். பருவமழைக்கு பின், கோடை காலம், குளிர்கால மாதங்களில் செல்வது சிறந்தது. காலை 7:00 முதல் மாலை 5:30 மணி வரை இதனை கண்டுரசிக்கலாம். அனுமதி இலவசம்.
எப்படி செல்வது?
▶ பெங்களூரில் இருந்து விமானத்தில் செல்வோர், மங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும். அங்கிருந்து பஸ், டாக்சியில் 130 கி.மீ., பயணித்து சக்லேஸ்புராவுக்கு செல்லலாம். அங்கிருந்து உள்ளூர் பஸ்சில் மகஜஹள்ளி செல்லலாம்.
▶ ரயிலில் செல்வோர், சக்லேஸ்புரா ரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து பஸ், டாக்சியில் 21 கி.மீ., பயணித்து மகஜஹள்ளி செல்லலாம்.
▶ பஸ்சில் செல்வோர், சக்லேஸ்புரா பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து உள்ளூர் பஸ், டாக்சியில் 21 கி.மீ., பயணித்து மகஜஹள்ளி செல்லலாம்.
- நமது நிருபர் -