ADDED : ஆக 21, 2025 11:05 PM

விளையாட்டு வீரர்களுக்கு, தேவையான வசதிகள் செய்து தரும் நோக்கில், கர்நாடகா கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் கட்டப்படும், 'விளையாட்டு மையம்' பணிகள் கிடப்பில் போடப்பட்டதால், விளையாட்டு வீரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஹூப்பள்ளி நகரின் விளையாட்டு வீரர்களுக்காக ராஜநகரில் கே.எஸ்.சி.ஏ., விளையாட்டு அரங்கில், 'விளையாட்டு மையம்' கட்ட திட்டமிடப்பட்டது. ஹூப்பள்ளி நகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துவது, திட்டத்தின் நோக்கமாகும். 35 கோடி ரூபாய் செலவில், 2015ம் ஆண்டில் பணிகள் துவங்கின.
ஆரம்ப நாட்களில் பணிகள் மும்முரமாக நடந்தன. ஆனால், 2022 நவம்பரில் பணிகள் நிறுத்தப்பட்டன. ஏற்கனவே 30 கோடி ரூபாய் வரையிலான பணிகள் நடந்துள்ளன. விளையாட்டு வீரர்களின் உடை மாற்றும் அறை, பார்வையாளர்கள் கேலரி, நீச்சல் கு ளம், விளையாட்டு வீரர்கள் தங்க, படுக்கை வசதி கொண்ட அறைகள், விளையாட்டு மைய உறுப்பினர் களுக்காக 22 அறைகள் கட்டப்பட்டுள்ளன.
ரெஸ்டாரென்ட், டைனிங் ரூம், கிச்சன், ஜிம் கட்டுவது உட் பட சில பணிகள் பாக்கியுள்ளன. பணிகள் முடிந்து விளையாட்டு மையம் திறக்கப்பட்டிருந்தால், விளையாட்டு வீரர்களுக்கு உதவியாக இருந்திருக்கும். இதில் கே.எஸ்.சி.ஏ., அதிகாரிகள் ஆர்வம் காட்டாததால், விளையாட்டு வீரர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
இது குறித்து, ஹூப்பள்ளி விளையாட்டு பயிற்சியாளர் பிரமோத் காமத் கூறியதாவது:
தற்போது விளையாட்டு போட்டிகள் நடக்கும் போது, விளையாட்டு வீரர்கள், ஊழியர்கள் தங்க ஜிம்கானா கிளப் மற்றும் ஹோட்டல்களில் வாடகை அறைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. விளையாட்டு மையம் செயல்பட துவங்கினால், விளையாட்டு வீரர்கள் தங்கும் வசதி இருக்கும்; ஹோட்டல் வாடகை அறைகளுக்கு தரும் பணமும் மிச்சமாகும்.
கே.எஸ்.சி.ஏ.,வுக்கு புதிய நிர்வாகத்தினர் வந்த பின், விளையாட்டு மையம் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட் டன. பெங்களூரை தவிர மற்ற நகரங்களில் விளையாட்டு அரங்கங்களை மேம்படுத்த, கே.எஸ்.சி.ஏ., ஆர்வம் காட்டுவது இல்லை. வட மாவட்டங்களின் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான, அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து, ஊக்கப்படுத்துவதாக, கே.எஸ்.சி.ஏ., நிர்வாகம் தெரிவித்திருந்தது.
ஆனால் ஹூப்பள்ளியில் நடந்து வந்த விளையாட்டு மையம் அமைக்கும் பணியை நிறுத்தியுள்ளது. ஹூப்பள்ளி மட்டுமின்றி, பெலகாவியில் 25 கோடி ரூபாய் செலவில் துவக்கப்பட்ட விளையாட்டு மையம் அமைக்கும் பணிகளும் நிறுத்தப்பட்டன.
ஹூப்பள்ளி விளையாட்டு அரங்கில், தேவையான அடிப்படை வசதிகள் இல்லாததால், தேசிய, சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்த முடிவதில்லை. விளையாட்டு மைய பணிகள் தாமதமானதால், ஏற்கனவே செலவிட்ட 30 கோடி தொகையும் வீணாகிறது. மழைநீர் கசிந்து சுவர்கள் பாசி படர்ந்து உள்ளது; மேற்கூரை பெயர்ந்து விழுந்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -