ADDED : ஆக 21, 2025 11:05 PM

கபடி... கபடி... கபடி... கபடி... என்று கபடி வீரர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலான புரோ கபடி போட்டிகள் 11 சீசனாக நடந்து உள்ளன. வரும் 29ம் தேதி புரோ கபடி 12வது சீசன் நடக்கிறது. விசாகபட்டினத்தில் முதல் நாள் இரண்டு போட்டிகள் நடக்கின்றன .
முதல் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் - தமிழ் தலைவாஸ்; இரண்டாவது போட்டியில் பெங்களூரு புல்ஸ் - புனேரி பால்டன் அணிகள் மோதுகின்றன.
பெங்களூரு புல்ஸ் அணி 2018ம் ஆண்டும்; புனேரி பால்டன் 2023ம் ஆண்டும் சாம்பியன் பட்டம் வென்ற அணிகள். முன்னாள் சாம்பியன்கள் மோதுவதால், ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. முதல் போட்டியை வெற்றியுடன் துவங்க வேண்டும் என்று, இரு அணியினரும் ஆர்வமாக உள்ளனர்.
குறிப்பாக பெங்களூரு புல்ஸ் அணிக்கு இம்முறை கர்நாடகாவை சேர்ந்த பி.சி.ரமேஷ் பயிற்சியாளராக உள்ளார். போட்டிக்கு இன்னும் ஏழு நாட்களே இருக்கும் நிலையில், பெங்களூரு புல்ஸ் அணியினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
நம்பிக்கை இதுகுறித்து பயிற்சியாளர் பி.சி.ரமேஷ் கூறியதாவது:
என் தலைமையில் பெங்கால் வாரியர்ஸ் அணி கடந்த 2019ம் ஆண்டும்; புனேரி பால்டன் அணி 2023ம் ஆண்டும் சாம்பியன் பட்டம் வென்று உள்ளது. பெங்களூரு புல்ஸ் அணியை இம்முறை கோப்பையை வெல்ல வைக்க வேண்டும் என்பது என் குறிக்கோள். ஆறு ஆண்டுகளுக்கு பின், பெங்களூரு புல்ஸ் அணிக்கு பயிற்சியாளராகும் வாய்ப்பு கிடைத்து உள்ளது.
கடந்த இரண்டு சீசன்களிலும், பெங்களூரு புல்ஸ் அ ணி வீரர்கள் செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அனுபவம் வாய்ந்த வீரர்களை கைவிட்டு, புதிய வீரர்களை அணியில் எடுத்து உள்ளோம். வீரர்கள் அனைவரும் 23 வயதுக்கு உட்பட்டோர் தான். தங்கள் அனல் பறக்கும் விளையாட்டின் மூலம், அரங்கை தெறிக்க விட தயாராக உள்ளனர். ரசிகர்களை ஏமாற்ற மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
ஆட்டத்தின் போக்கு அங்குஷ் ரதி, லக்கிகுமார், சஞ்சய், ஆகாஷ் ஷிண்டே, ஆஷிஷ் மாலிக், கணேஷ், பங்கஜ் ஆகிய வீரர்கள் ஆட்டத்தை போக்கை மாற்றும் திறன் கொண்டவர்களாக உள்ளனர். வீரர்களை தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுத்தினால், அவர்கள் காயம் அடையவும் வாய்ப்பு உள்ளது. வீரர்கள் உடல்நலன் மீது கவனம் செலுத்துகிறோம்.
பெங்களூரில் போட்டியை நடத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் இது பற்றி நாங்கள் கவலைப்பட போவது இல்லை. ஒவ்வொரு போட்டிக்கும் எங்கள் யுக்தியை மாற்றுவோம். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற அணியாக செயல்படுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -