ADDED : ஆக 28, 2025 11:12 PM

கர்நாடகாவில் நுாற்றா ண்டுகளுக்கு முன்பே கால்பந்து காலுான்றிய இடம் தங்கவயல். இங்கிலாந்து, ஜெர்மன் நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினர் தங்கச் சுரங்க தொழிலுக்காக வந்தனர்.
அவர்களின் பொழுது போக்கு, உடற் பயிற்சிக்காக தங்கவயலில் கால்பந்து விளையாட்டை விளையாடினர். அவர்களுக்கு உதவியாளர்களாக சென்ற தங்கச் சுரங்க தொழிலாளர்கள் அவர்களுடன் இணைந்து விளையாடுவதில் ஆர்வம் காட்டினர்.
வெளிநாட்டினர் பூட்ஸ்கள் அணிந்து விளையாட, இந்தியர் வெறும் காலில் விளையாடி அவர்களுக்கு நிகராக அசத்தினர்.
ஆங்கிலேயர் ஆதிக்கம் தங்கவயலில், 70 ஆண்டுகளாக இருந்தன. நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் கூட அவர்கள் வெளியேறவில்லை. 1956ல் தான் வெளியேறினர்.
அவர்களுடன் விளையாடி பயிற்சி பெற்ற கால்பந்து வீரர்களின் குடும்பத்தினரே கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுதும் உள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்களில் விளையாட்டுக்கென உள்ள ஒதுக்கீட்டில் பணியில் சேர்ந்தனர்.
சென்னை ஐ.சி.எப்., ஹார்பர், இந்தியன் ரயில்வே, கேரள போலீஸ், டைட்டன், மேற்கு வங்க மோகன் பேகன், சாசர், பெங்களூரில் ஐ.டி.ஐ., - ஹெச்.ஏ.எல்., - பி.இ.எல்., - எம்.இ.ஜி., 515 ஆர்மி, என்.ஜி.இ.எப்., - எல்.ஆர்.டி.இ., - பி.அண்ட் டி., பெமல், கே.இ.பி., என பல நிறுவனங்களில் கால்பந்து வீரர்கள் இடம் பெற்றனர்.
தேசிய கால்பந்து போட்டிக்கு கேப்டனாக தங்கவயலின் நடராஜன் தலைமையில் ரஷ்யா சென்று விளையாடி வெற்றி பெற்றனர். இவர், தங்கவயல் பெமல் கால்பந்து குழுவுக்கு பயிற்சி அளித்து வந்தார்.
தங்கச் சுரங்கம் மூடப்பட்ட பின், விளையாட்டை ஊக்கப்படுத்த யாரும் இல்லை. புகழ்பெற்ற ஜிம்கானா மைதானமும் புதர் வளர்ந்து பயனற்று உள்ளது.
கர்நாடக கால்பந்து கவுன்சிலில் தங்கவயலில் 17 கிளப்புகள் இருந்தன. இதில் நிரந்தரமாக தங்கவயலில் இருந்து கவர்னிங் கவுன்சில் உறுப்பினர் நிச்சயம் இடம் பெறுவார்.
தற்போதைய நிலையில் நான்கைந்து கிளப்புகள் கூட பெயர் சொல்லும்படி இல்லை. கால்பந்து போட்டி நடத்தினால் வெளியூர்களில் இருந்து வீரர்களை வரவழைத்து ஆடும் நிலை ஏற்பட்டுள்ளது.
தொழில் தேடி வெளியூர்களில் குடிபெயர்ந்தோர் பலர். அப்படி சென்ற குடும்ப வாரிசுகள் தான், கால்பந்து விளையாடி அசத்தி வருகின்றனர்.
ஓய்வு பெற்ற தங்கச் சுரங்க தொழிலாளியான தாத்தா அன்பழகன், ஓய்வு பெற்ற ராணுவ வீரரான தந்தை அழகிரி இவர்களின் வாரிசு ரூபினோ.
பெங்களூரு செயின்ட் ஜோசப் உயர் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் இவர், பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டியில் இவ்வாண்டின் சிறந்த கால்பந்து வீரராக தேர்வா கி கோப்பைகள் வென்றுள்ளார்.
விளையாட்டுத் துறையில் தங்கவயலின் வாரிசுகளான சிறுவர்கள், வீரர்களாக வெளியிடங்களிலும் அசத்துகின்றனர் என்பதற்கு இவர் ஓர் அடையா ளம்
- நமது நிருபர் -.