ADDED : ஆக 28, 2025 11:13 PM

கர்நாடகாவையும், விளையாட்டையும் பிரித்து பார்க்கவே முடியாது. அனைத்து விளையாட்டிலும் கர்நாடகாவில் இருந்து யாராவது ஒரு வீரர், வீராங்கனை இடம்பிடித்து இருப்பர். கிரிக்கெட்டில் தான் கர்நாடக வீரர், வீராங்கனைகள் நிறைய பேர் இருக்கின்றனர் என்று நமக்கு தெரிந்து இருக்கலாம்.
ஆனால், பல விளையாட்டுகளில் சத்தமே இல்லாமல் சாதித்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். இவர்களில் ஒருவர் அனுாப் டி கோஸ்டா, 32. இந்திய வாலிபால் அணியின் வீரர்.
கடந்த 2007ம் ஆண்டு முதல் வாலிபால் விளையாடுகிறார்.
விளையாட்டில் சிறப்பாக செயல்பட்டதற்காக கர்நாடக அரசின் ஏகலைவா, கெம்பேகவுடா, கர்நாடகா ஒலிம்பிக் அசோசியேஷன் விருதுகளை வென்றுள்ளார்.
இதுகுறித்து அனுாப் டி கோஸ்டா கூறியதாவது:
எனது சொந்த ஊர் உடுப்பியின் குந்தாபூர். கடற்கரைகள் நிறைந்த பகுதி என்பதால் மாலை நேரத்தில், எங்கள் ஊர் இளைஞர்கள் கடற்கரை மணலில் வாலிபால் விளையாடுவர். இதனை பார்த்து எனக்கும் வாலிபால் விளையாட ஆசை வந்தது.
என்னை விட வயதில் மூத்தவர்களுடன் சேர்ந்து, நானும் விளையாட ஆரம்பித்தேன். உள்ளூர் அளவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால், 2008ல் கர்நாடக ஜூனியர் அணியில் இடம் கிடைத்தது. 2010ல் இந்திய அணியில் இடம் கிடைத்தது.
ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடினேன். 2011ல் கர்நாடக காளை; 2012ல் துனிசியா நாட்டில் நடந்த போட்டி; 2013ல் துருக்கி உலக சாம்பியன்ஷிப் உள்ளிட்ட நிறைய போட்டிகளில் விளையாடி உள்ளேன். கடந்த 2015ல் வருமான வரி துறையில் பணி கிடைத்தது.
தற்போது , வருமான வரி அணிக்காக விளையாடி வருகிறேன். நான் பிறந்தது ஜனவரி 7ம் தேதி என்பதால், எனது ஜெர்சி நம்பரும் 7 ஆக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. வாலிபால் போட்டிகளில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்பது எனது குறிக்கோள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -