ரஷ்யா உடன் அமெரிக்கா வர்த்தகம்; இந்தியா குற்றச்சாட்டுக்கு டிரம்ப் பதிலளிக்காமல் நழுவல்!
ரஷ்யா உடன் அமெரிக்கா வர்த்தகம்; இந்தியா குற்றச்சாட்டுக்கு டிரம்ப் பதிலளிக்காமல் நழுவல்!
ADDED : ஆக 06, 2025 03:40 PM

வாஷிங்டன்: ரஷ்யாவிலிருந்து யுரேனியம், உரங்களை அமெரிக்கா இறக்குமதி செய்ததாக இந்தியா கூறியது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ' எனக்கு எதுவும் தெரியாது' என அதிபர் டொனால்டு டிரம்ப் பதிலளித்துவிட்டு நழுவி சென்றார்.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே பல்வேறு நாடுகளுக்கு அதிக வரிகளை விதித்து வருகிறார். தற்போது அவரது கவனம் இந்தியா மீது திரும்பி உள்ளது.
கடந்த இரு தினங்களாக இந்திய பொருளாதாரம் குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார்.
அதுமட்டுமின்றி, இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி என்று டிரம்ப் அறிவித்தார்.
இந்தியா ரஷ்ய எண்ணெயை பெருமளவில் வாங்குவது மட்டுமல்லாமல், வாங்கிய எண்ணெயில் பெரும்பகுதியை திறந்த சந்தையில் அதிக லாபத்திற்கு விற்கிறது. ரஷ்ய போர் இயந்திரத்தால் உக்ரைனில் எத்தனை பேர் கொல்லப்படுகிறார்கள் என்பது அவர்களுக்கு கவலையில்லை என டிரம்ப் கடுமையாக குற்றம் சாட்டி இருந்தார்.
இதற்கு மத்திய அரசு கடும் பதிலடியையும், கடும் எதிர்ப்பையும் பதிவிட்டது.ரஷ்யாவிடம் யுரேனியம், உரங்களை அமெரிக்கா இறக்குமதி செய்கிறது என்று இந்தியா திட்டவட்டமாக கூறி இருந்தது. இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது அதிபர் டிரம்பிடம் ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.
மேலும் டிரம்ப் கூறியதாவது: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது அதிகரிக்கப்பட்ட வரி விகித சதவீதம் என்ன என்பதை நான் தெரிவிக்கவில்லை. அடுத்து வரக்கூடிய குறுகிய நாட்களில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். இவ்வாறு டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.