உக்ரைன் மீது தாக்குதலை நிறுத்துமா ரஷ்யா: புடினுடன் டிரம்ப்பின் தூதர் சந்திப்பு
உக்ரைன் மீது தாக்குதலை நிறுத்துமா ரஷ்யா: புடினுடன் டிரம்ப்பின் தூதர் சந்திப்பு
ADDED : ஆக 06, 2025 04:02 PM

மாஸ்கோ: போரை நிறுத்துவதற்கு அமெரிக்கா விதித்துள்ள கெடு விரைவில் முடிவடைய உள்ள நிலையில், அதிபர் டிரம்ப்பின் தூதர் ஸ்டீட் விட்காப், ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசினார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் எவ்வளவோ தடை விதித்தும் ரஷ்யா அதனை கண்டுகொள்ளவில்லை. டிரம்ப் அதிபரான பிறகு எடுத்த முயற்சிகளுக்கும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இதனால், விரக்தியடைந்த அவர், உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால், கடுமையான பொருளாதார தடை விதிக்கப்படும் எனக்கூறி ரஷ்யாவுக்கு 50 நாட்கள் காலக்கெடு விதித்தார். ஆனால், அப்பாவி மக்களை புடின் கொல்கிறார் எனக்கூறி இந்தக் கெடு குறைக்கப்பட்டது. இது விரைவில் முடிவடைய உள்ளது.
மேலும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போவதாகவும் டிரம்ப் மிரட்டி வருகிறார்.
இந்நிலையில், டிரம்ப்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் மாஸ்கோ வந்தடைந்தார். அவர்,அங்கு கிரெம்ளின் மாளிகையில் அதிபர் புடினை சந்தித்து பேசினார். இதனை ரஷ்ய அதிபர் மாளிகையும் உறுதி செய்துள்ளது. இந்த சந்திப்பின் போது என்ன விஷயம் விவாதிக்கப்பட்டது என்பது குறித்து தகவல் இல்லை. அதேநேரத்தில், உக்ரைன் மீதான தாக்குதல், கச்சா எண்ணெய் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் பேசியிருக்கலாம் என தெரிகிறது.