பாலியல் தொழிலுக்காக பெண் குழந்தைகள் கடத்தல்: பாக்., குழுக்கள் மீது புகார்
பாலியல் தொழிலுக்காக பெண் குழந்தைகள் கடத்தல்: பாக்., குழுக்கள் மீது புகார்
ADDED : ஆக 29, 2025 06:43 AM
லண்டன்: பெண் குழந்தைகளை கடத்தி, வளர்த்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதில், பாகிஸ்தானைச் சேர்ந்த குழுக்கள் செயல்பட்டு வந்துள்ளதாக, பிரிட்டன் எம்.பி., கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு, கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரிக்க அந்த நாட்டின் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், அந்த நாட்டின் சுயேச்சை எம்.பி.,யான ரூபர்ட் லோவ் தலைமையிலான குழு, ஆய்வு மேற்கொண்டது. அந்தக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரிட்டனில் உள்ள 85 பகுதிகளில், பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த குழுக்கள் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டு வந்துள்ளது. இக்குற்ற சம்பவங்கள் கிட்டத்தட்ட 1960ம் ஆண்டு முதல் நடந்து வந்துள்ளதாக தெரிகிறது. மேலும், இது முன்னர் நினைத்ததை விட மிகவும் பரவலாக உள்ளது.
பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யாத பொது அமைப்புகளும், அதிகாரிகளும் கடுமையான கண்டனத்துக்குரியவர்கள்.
பாதிகப்பட்டவர்களின் நிறத்தின் அடிப்படையில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டியுள்ளனர். இனவெறி குற்றச்சாட்டுகளுக்கு பயந்து, அதிகாரப்பூர்வ அமைப்புகள் கூட இவ்வழக்குகளை புறக்கணித்துள்ளன.
இதில் பாதிக்கப்பட்டவர்களின் பெரும்பாலானோர், ஏழை பெண்களாவர். இப்பெண்கள் போதைப் பொருட்கள் கொடுக்கப்பட்டு, பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு, கடத்தி விற்கப்பட்டுள்ளனர். தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியில் சொல்லக் கூடாது என மிரட்டப் பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.