எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பிரதமர் மோடியின் ஜப்பான் பயணம்
எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பிரதமர் மோடியின் ஜப்பான் பயணம்
ADDED : ஆக 29, 2025 06:45 AM

டோக்கியோ: பிரதமர் நரேந்திர மோடியின் 2 நாள் ஜப்பான் பயணம் பல்வேறு எதிர்பார்ப்புகளை இந்தியா மற்றும் ஜப்பான் இடையே ஏற்படுத்தியுள்ளது.
கிழக்காசிய நாடான ஜப்பானின் பிரதமர் ஷிகெரு இஷிபா அழைப்பின் பேரில், பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். இது மோடி பிரதமராக ஜப்பானுக்கு மேற்கொள்ளும் எட்டாவது பயணமாகும். இப்பயணத்தின் முக்கிய நோக்கம், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா அடங்கிய 'குவாட்' அமைப்பின் எதிர்காலம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது-.
மேலும், மும்பை - ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தை தாண்டி, இந்தியாவின் எதிர்கால புல்லட் ரயில் திட்டங்களில் ஜப்பானின் பங்களிப்பு குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
அமெரிக்காவுடனான வர்த்தக பதற்றங்களுக்கு மத்தியில், ஜப்பான் சென்றுள்ள மோடி, ஜப்பான் பிரதமருடன் 15வது இந்தியா - ஜப்பான் ஆண்டு உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இது ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா உடனான முதல் ஆண்டு உச்சி மாநாடாகும்.
மேலும், பிரதமர் மோடி ஏழு ஆண்டுகளில் ஜப்பானுக்கு செல்லும் முதல் தனி பயணம் இதுவாகும். கடைசியாக கடந்த 2018ம் ஆண்டில், உச்சி மாநாட்டிற்காக ஜப்பான் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது-.